இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சொந்தமான வீட்டில் இடம்பெற்ற தீ சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், 21 வயது இளைஞனை, இன்று செவ்வாய்கிழமை (13) அதிகாலை பெருநகர பொலிஸார் கைது செய்துள்ளது.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் தீ வைத்ததாக இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இளைஞன் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் டவுனிங் தெருவில் உள்ள நிலையில், வடக்கு லண்டனில் உள்ள கென்டிஷ் நகரில் உள்ள பிரதமரின் தனியார் வீட்டில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
அத்துடன், ஞாயிற்றுக்கிழமை, அருகிலுள்ள இஸ்லிங்டனில் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்ட ஒரு வீட்டின் முன் கதவில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து குறித்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
விசாரணையின் ஒரு பகுதியாக மேற்படி விபத்து குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தீ விபத்துகளை சந்தேகத்திற்குரியதாகக் கருதி, அவற்றுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், இந்த சொத்து ஒரு உயர்மட்ட பொது நபருடன் முன்னர் தொடர்பு கொண்டிருப்பதாலும், மெட்ரோபாலிடன் பயங்கரவாத எதிர்ப்பு கட்டளை அதிகாரிகள் இந்த தீ விபத்து குறித்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்,” என்று பெருநகர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அதேவேளை, பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சொந்தமான குறித்த வீட்டின் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.