நட்சத்திர வாரிசாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானாலும்.. தன்னுடைய தனி திறமையால் நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படைத்தலைவன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் – யாமினி சந்தர்- கஸ்தூரிராஜா – ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜாவின் இசையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஜே கம்பைன்ஸ் மற்றும் தாஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் ஜகந்நாதன் பரமசிவம் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ், இயக்குநர் ஏ. ஆர் . முருகதாஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” அடர்ந்த கானகத்தில் புத்திசாலியான விலங்கு என போற்றப்படும் யானைக்கும், அப்பகுதியில் பிறந்து வளர்ந்த இளைஞன் ஒருவனுக்கும் இடையேயான உறவை மண் சார்ந்த உணர்வுடன் விவரிப்பது தான் படைத்தலைவன் படத்தின் கதை” என்றார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் குறிப்பிடுகையில், ‘ சண்முக பாண்டியன் விஜயகாந்தின் ஆற்றல்மிக்க விழிகளை பெற்றிருப்பதால்.. விரைவில் அவர் நடிப்பில் ‘ரமணா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விரும்புகிறேன் ” என குறிப்பிட்டார்.