தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முதல் நிலை பெற்றுள்ள நிலையில், அந்தச் சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆராயும் சந்திப்பு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிகளுக்கு இடையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். கந்தரோடைரையில் அமைந்துள்ள த.சித்தார்த்தனின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வேந்தன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராசா கஜேந்திரன், காண்டீபன் மற்றும் தீபன் திலிஷன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி உள்ளூராட்சி சபைகளில் இணைந்து பயணிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள், இணைந்து பயணிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், இருப்பினும் தமது இரு கட்சிகளும் இணையும் பட்சத்தில் ஒருசில உள்ளூராட்சி சபைகளில் மாத்திரமே ஆட்சி அமைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினர்.
அதனையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமது கட்சி ஆகிய மூன்றும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.
இது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் தாம் பிரஸ்தாபித்தாகவும், அது பற்றி கட்சியின் மத்திய குழுவில் ஆராய்ந்து பதிலளிப்பதாகத் தமிழரசுக் கட்சி பதிலளித்ததாகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அதேவேளை வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்க் கட்சிகளே ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், அந்தச் சபைகள் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் வசம் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் நேற்றைய சந்திப்புகளின்போது மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் உறுதிபடத் தெரிவித்தனர்.