இங்கிலாந்து இராணுவ தளம் ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மூவருக்கு, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் இராணுவ தளம் அமைந்துள்ளது.
விமானப்படைக்குச் சொந்தமான அந்த இராணுவ தளத்தில் கூட்டுப்போர் பயிற்சி மற்றும் வழக்கமான இராணுவ பயிற்சிகள் நடைபெற்றன. தற்போது அந்த இராணுவ தளங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.
கைவிடப்பட்ட அந்த இராணுவ தளம் தற்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கிடங்காகப் பயன்படுகின்றது.
இந்நிலையில், இந்த இராணுவ பயிற்சி தளத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது.
தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி, தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.