எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அரச தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் சபையில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரை சபை நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாதாளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27/2 கீழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.
இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி, மேலும் சில கேள்விகளை எழுப்பியதுடன் சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த ஆளும் தரப்பு எம்.பி. கெளஷல்யா ஆரியரத்ன, “தயாசிறி எம்.பி. எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினை நிலையியற் கட்டளைக்கு முரணானது. சபையை அவர் தவறாக வழிநடத்தி இருக்கின்றார்.” – என்று தெரிவித்தார்.
இதன்போது தயாசிறி எம்.பி. அதற்குப் பதிலளிக்க முற்பட்டபோது சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தயாசிறி எம்.பி., கெளஷல்யா எம்.பியைப் பார்த்து ஏதோ தெரிவித்தார். அதன்போது அவரின் ஒலிவாங்கி முடக்கப்பட்டிருந்தது.
இதன்போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஜனாதிபதி நிதியத்தின் கொள்ளையடித்தவர், ஏழைகளின் பணத்தைச் சூறையாடியவர் என்றவாறாக கடும் ஆவேசமாகத் தயாசிறி எம்.பியைப் பார்த்துத் தெரிவித்தார்.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோருடன் இன்னும் சில அரச தரப்பினரும் எதிர்க்கட்சியினருக்கு எதிராகக் கருத்துக்களை முன்வைத்தனர். அரச தரப்பினர் தமது கருத்துக்களை ஒழுங்குப் பிரச்சினை என்ற அடிப்படையில் முன்வைக்க அனுமதித்த சபாநாயகர் எதிர்க்கட்சியினருக்கு நேரம் வழங்க மறுத்து விட்டார். இதனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி . சிவஞானம் சிறீதரனுக்கு விசேட கூற்று முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அவர் உரையாற்ற முடியாதளவுக்கு சபை அமளிதுமளி பட்டுக் கொண்டிருந்தது. சிறீதரன் எம்.பி. தனது கருத்துக்களை முன்வைக்கப் பல தடவைகள் முயன்றபோதும் அது முடியவில்லை.
இந்நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி., “நான் 20 செக்கன்கள் இடையில் உரையாற்றியபோது என்னைச் சபையில் இருந்து வெளியில் அனுப்பினீர்கள். ஆனால், தற்போது இவ்வளவு பேர் கூச்சலிட்டுக் கொண்டிக்கும்போது அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே?” – என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
இவ்வாறாக சபை நடவடிக்கைகள் சுமார் 20 நிமிடங்கள் வரை கடும் அமளி துமளிக்கு மத்தியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், இறுதியில் அனைவரும் அமைதியாகினர்.