செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ : வ.ந. கிரிதரன்

விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ : வ.ந. கிரிதரன்

40 minutes read

புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த நாவல்களில்முக்கியமான நாவல். அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில் பகுதி வட்டாரத் தமிழில் நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த வட்டாரத்தமிழில் வெளிவந்த நாவல்களில் இந்நாவலை முதலிடத்தில் வைக்கலாம். ஆடை துவைக்கும் சமூகத்தைச்சேர்ந்த பரஞ்சோதி என்னும் பெண் பாத்திரத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல் பல பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றது. சமூக, பொருளியல் மற்றும் அரசியற் பிரச்சினைகளை நாவல் வெளிப்படுத்துகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில். அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றில் பிறக்கும் சமூகமொன்றில் பிறக்கும் பெண்ணொருத்து எத்தனை விதமான உளவியற் துன்பங்களை அடைய வேண்டியிருக்கின்றது என்பதை பரஞ்சோதி,, அவளது தாய் மாதவி ஆகியோர் தம் வாழ்வில் அடையும் அனுபவங்கள்: வெளிப்படுத்துகின்றன. பெண்ணைப்போகப்பொருளாகப் பயன்படுத்தும் போடியார் எவ்வளவு இயல்பாக மாதவியின் மகளை ஓரிரவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிச் செல்கின்றார். இந்த உண்மையை அறியாத பரஞ்சோதி , தன் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தை தன்னை விரும்பிய வரதனாக இருக்குமோ என்று சந்தேகம் அடைகின்றாள். இச்சமயம் நடந்த உண்மையை அறிந்த தாயார் மாதவி போடியாரிடம் சென்று சண்டை போட்டு விட்டு வந்தவள் அந்தத் துயர் காரணமாகவே இறந்து விடுகின்றாள். வயிற்றில் குழந்தையுடன் தனித்து அநாதரவாக விடப்பட்ட பரஞ்சோதியை அரவணைத்துத் அவளது பிறக்கப்போகும் குழந்தையுடன் தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கின்றான் நாகமணி. பிறக்கும் குழந்தை அரவிந்தன் வளர்ந்து பெரியவனாகி இயக்கத்தில் இணைந்து போராடப்போவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. நாவலின் பிரதான விடயங்கள் இவையே.

இந்நாவலின் முக்கியமான சிறப்புகளாக நான் கருதுவது:

1. வட்டாரத் தமிழைப் பதிவு செய்தது.
2.
கோளாவில் பகுதியில் நிலவிய சமுதாய அமைப்பு, அவ்வமைப்பில் நிலவிய சீர்கேடுகள், பெண்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றினைச் சேர்ந்த பெண்கள் போடியார் போன்றவர்களிடமிருந்து எதிர்கொள்ளூம் பாலியல் ரீதியிலான வன்முறைகள், நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பது. பதிவு செய்திருப்பது.
3.
தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் போராட்டத்தின் பெயரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் , உதாரணமாக உளநலம் குன்றிய பெண்ணொருத்தி இராணுவ உளவாளியென்று கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவது போன்ற , விடயங்களைப் பதிவு செய்திருப்பது. நாவல் மட்டக்களப்புச் சிறை உடைப்பு பற்றியும் நினைவு கூருகின்றது.

இந்நாவலை வாசிக்கும்போது பரஞ்சோதி போன்ற பெண்கள் அடையும் அனுபங்கள் எம்மை வாட்டுகின்றன. எதற்காக இவ்வுலகில் மனிதர்கள் இவ்விதமெல்லாம் வாட வேண்டும். இவ்விதமான அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும் என்னும் எண்ணங்களை நாவல் ஏற்படுத்துகின்றது.இந் இந்நாவலின் வெற்றி இது.

இந்நாவலை வாசிக்கும்போது ஓரிடத்தில்மட்டும் சிறிது நெருடலாகவிருந்தது. தன்னைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய மனிதனைப்பற்றிய பரஞ்சோதியின் எண்ணங்கள்.
ஒரு கட்டத்தில் பரஞ்சோதி இவ்விதம் சிந்திப்பாள்:

அண்டைக்கு வந்து போனவன் வரதனென்டா அவனக் குத்தம் சொல்ல என்ன இரிக்கு. அவன் மர மாட்டானோ எண்டு ஏங்கி கனவு கண்டு கிடந்து போட்டு, அவன் கூடப்படுத்த நேரம் உட்டுக் குடுத்துப்போட்டு, இப்ப ஏன்கா நான் கிடந்து கிளம்பியடிக்கோணுமெண்டு பரஞ்சோதி தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் “[வெள்ளாவி; பக்கம் 128]

உண்மையில் அவளைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியவன் வரதனல்லன். போடியார்தான். தாய் மாதவியுடன் தொடுப்பு வைத்திருந்த போடியார்தான். ஆனால் நாவலில் முடிவு வரையில் பரஞ்சோதிக்கு இந்த உண்மை தெரியாது. இந்த உண்மையை அறிந்த தாய் மாதவியும் அதன் காரணமாகவே இறந்து விட்டாள். ஆசிரியர் விபரித்திருக்கும் இந்தச்சிந்தனைப்போக்கு எனக்குச் சிறிது நெருடலாக இருந்தது. பாதிக்கப்பட்டவள் வெகுண்டெழாமல், இவ்விதம் அவ்விதம் வெகுண்டெழுவது தேவைதானா என்னும் அர்த்தப்படச் சிந்திப்பது நடைபெற்ற சம்பவத்தின் தன்மையினை எளிமைப்படுத்துவதாக உள்ளதாகப்படுகின்றது.

மேலும் இன்னுமொரு விடயத்தையும் கூறலாம். இரவென்றாலும் போடியார் போன்ற ஒருவரின் உடல் வாகும், வரதன் போன்ற ஒருவரின் உடல் வாகும் வித்தியாசமல்லவா. மேலும் பரஞ்சோதியும் யுவதி அல்லவா. ஒரு மனிதர் உறவு கொள்ளுவதைக் கூட அறியாமல் கனவுக்காட்சி போல் எண்ணி ஒருவர் இருக்க முடியுமா? நடைமுறையில் இது சாத்தியமா? மேலும் ஓடும் ஒருவர் அவ்வளவு விரைவாகவா ஓடுவார். அதுவும் போடியார் போன்ற ஒருவர். அப்படித்தான் ஓடினாலும் எழும்பி ஓடுபவரின் தோற்றத்தைக்கூடவா பார்க்க முடியாது?
நாவலின் முக்கியமான சம்பவமே இதுதான். ஆனால் இச்சம்பவம் நடந்த முறையும், விபரிப்பும் எனக்கென்றால் நடைமுறைச்சாத்தியமாகத் தெரியவில்லை. நாவலுக்காக வலிந்து திணிக்கப்பட்ட, தமிழ்ச்சினிமாப்பாணிச் சம்பவமாகவே எனக்கு இது படுகின்றது. இதனை இன்னுமொரு நடைமுறைச்சாத்தியமான சம்பவமொன்றிற்குக்கூடாகவே விபரித்திருக்கலாம். போடியாரே மாதவியைத்தேடி வந்து அவளில்லாத நிலையில், மகளைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக அமைத்திருக்கலாம்.

  • வ.ந. கிரிதரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More