இலங்கையின் சுற்றுலா தலமாக காணப்படும் ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நியூ வெலிகம பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட நியூ வெலிகம பகுதியில் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினர் இன்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்தப் பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பின்னர் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் ஆலோசகரான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயனி நவகமுகவ தெரிவித்தார்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று காலை முதல் மழை தொடர்ச்சியாகப் பெய்தமையால், அதிகாரிகள் பெரும் சிரமத்தின் மத்தியில் ஆய்வினை மேற்கொண்டனர்.
மண்சரிவு காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சுமார் 6 அடி உயரத்திற்கு அலை எழுந்தமையும் இன்றைய ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.
மண்சரிவு பாரியளவில் ஏற்பட்டால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு இதனைவிட அதிகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவக ஆலோசகர், சிரேஷ்ட விரிவுரையாளர் உதயனி நவகமுகவ சுட்டிக்காட்டினார்.
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் வீதியை நிர்மாணிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய கட்ட ஆய்வு நிறுவகத்தின் அறிக்கை கிடைத்த பின்னரே வீதி புனரமைப்புப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.