ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெற்று பின்னர் தாய்லாந்தில் கைதான ஹக்கீம் அல் அரைபிக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இவர் பஹ்ரைனை பிறப்பிடமாகக் கொண்டவர். முன்னதாக, கடந்த நவம்பர் 2018ல் ஆஸ்திரேலியாவிலிருந்து தாய்லாந்து சென்றிருந்த பொழுது அவர் கைது செய்யப்பட்டார். பஹ்ரைன் தேசிய அணியின் முன்னாள் வீரரான அவர் மீது காவல்நிலையத்தை தீயிட்டு கொழுத்தியதாக பஹ்ரைன் அரசு குற்றஞ்சாட்டுகிறது.
அவர் பஹ்ரைனை விட்டு வெளியேறியிருந்த நிலையில், ஹக்கீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. பஹ்ரைன் அரசின் குற்றச்சாட்டை மறுக்கும் ஹக்கீம், 2011 அரபு வசந்தத்தின் போது நடந்த அமைதி போராட்டங்களில் அரசு குடும்பத்தை எதிர்த்ததால் வீரர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
இந்த அச்சுறுத்தல் காரணமாக 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த ஹக்கீமுக்கு, ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு நிரந்தரமாக வாசிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இவ்வாறான குழலில், அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து தாய்லாந்துக்கு பயணித்த போது அந்நாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
இண்டர்போல் விடுத்த சிவப்பு நோட்டீஸ் அடிப்படையில், தாய்லாந்துக்கு ஆஸ்திரேலியா கொடுத்த தகவலின் மூலமே அவர் கைது செய்யப்பட்டார் என்று விமர்சனங்களும் அப்போது எழுந்திருந்தன.
அகதியாக அங்கீகரிக்கப்பட்டவருக்கு சிவப்பு நோட்டீஸ் செல்லாது என்று மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்தன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனும் அவரது விடுதலைக்காக குரல் கொடுத்திருந்தார். பஹ்ரைனின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை நாடுகடத்த திட்டமிட்ட தாய்லாந்து, சர்வதேச அழுத்தத்தின் காரணமாக 76 நாட்களுக்கு பிறகு அவரை விடுவித்தது.
ஹக்கீம் அல் அரைபி ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி சில வாரங்களுக்கு பின், தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள அல் அரைபி “இறுதியாக, இனி எந்த நாடும் என்னை பின் தொடர முடியாது. நான் ஆஸ்திரேலியன். பஹ்ரைன், தயவு செய்து என்னை பின் தொடர வேண்டாம். நான் தற்போது 100% பாதுகாப்பாக உள்ளேன்”. என அவர் கூறியிருந்தார்.