வங்கதேசத்தில் நிலவக்கூடிய சீரற்ற பொருளாதார நிலை காரணமாக உடல் உழைப்பு அடிப்படையிலான பணிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வங்கதேச தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இப்படி வேலைக்கு செல்லக்கூடிய வங்கதேச தொழிலாளர்கள் ஏஜென்சிக்கு என்று பெரும் கட்டணத்தை கொடுக்கின்றனர். அப்படி கொடுத்து செல்லக்கூடியவர்கள் மாறாக குறைவான சம்பளத்தில் நீண்டகாலம் வேலை செய்யக்கூடிய நிலையில் சிக்கி சுரண்டலுக்கு ஆளாவதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர்கள் இடப்பெயர்வு சார்பாக வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலாளர் இடப்பெயர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் பேசிய வங்கதேச இணை அமைச்சர் இம்ரான் அகமது, “பயணச்செலவு விவரம் மற்றும் முறையான பாதுகாப்பான இடப்பெயர்வுக்காக ஒவ்வொரு பகுதியிலும் டிஜிட்டல் தகவல் மையத்தை அரசு அமைக்க இருக்கின்றது” என்கிறார்.
தற்போதைய நிலையில், சுமார் 1 கோடி வங்கதேசிகள் உலகெங்கும் 165 நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 15.53 பில்லியன் டாலர்கள் பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்புவதாக வங்கதேச வங்கி தெரிவித்திருக்கின்றது.
இத்தொகை வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, தரகர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயலும் ஆயிரக்கணக்கான வங்கதேசிகள் ஆண்டுதோறும் சிக்கும் நிலையம் தொடர்ந்து வருகின்றது.