செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை காடு வளர்ப்போம்..

காடு வளர்ப்போம்..

6 minutes read

“கடந்த மாதம் முழுவதும் காட்டில் வேலை” என்று பதிவிட்டிருந்தேன். கூடவே சில படங்களையும்.

இதைப்பார்த்த நண்பர் ஒருவர், “காட்டிலே வேலை என்றால் என்ன வனவளப்பிரிவில் வேலை பார்க்கிறீங்களா?” என்று கேட்டார்.

அவருடைய தகப்பன் ஒரு காலம் காட்டு இலாகாவில் வேலை செய்தாராம். அந்த அனுபவத்தைக் கொண்டு கேட்டிருந்தார். “எந்தக் காட்டில் இருக்கிறீங்கள்?” என்றும் விசாரித்திருந்தார். தந்தையோடு சில காடுகளில் இளவயதில் பயணம் செய்த அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார். அவர் திரிந்த காடுகள் அனுராதபுரத்திற்கு கிழக்கில்.

“நான் வனவளத்திணைக்களத்தில் வேலை செய்யவில்லை. இயக்கச்சியில் எங்கள் காணிகளெல்லாம் காடாகி விட்டன. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து ஊரை விட்டுப்போய் விட்டோம். முப்பது ஆண்டுகளாக ஊரிலே ஆட்களில்லை. அதனால் வளவு, தோட்டம், தோட்டத்துக்குப் பின்னே இருந்த காடு எல்லாம் முழுக்காடாகி விட்டன. இப்ப இந்தக் காட்டை என்ன செய்வதென்று தெரியவில்லை” எனப் பதிலளித்தேன்.

உண்மையில் இந்தக் காட்டை என்ன செய்வதென்று இப்பொழுது வரையில் புரியவில்லை.

காட்டை அழித்தால்தான் மறுபடியும் அங்கே வீட்டைக் கட்டலாம். தென்னைகளையும் பழ மரங்களையும் நாட்டலாம். முன்பு ஒரு ஐந்து ஏக்கரில் கொய்யாத் தோப்பிருந்தது. அதை மீளவும் உண்டாக்கலாம். இப்பொழுது புதிய முறைகளில் பண்ணைகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொன்றைக்கூட நாமும் அமைத்துக் கொள்ளலாம். அப்படியே மறுபடியும் நாங்களிருந்த இடத்தை உயிர்ப்பூட்டலாம். எங்கள் முன்னோரிருந்த பூர்வீக இடத்தை இப்படியே கைவிட முடியாதல்லவா!

“என்னவிதப்பட்டும் தாய்மனையிருந்த இடத்தைக் கைவிட்டிடாதேங்கோ. அங்க ஒரு வீட்டைக்கட்டினால் அதில விளக்கெரியும். தலைமுறைகள் வாழ்ந்த இடத்தில இருளேறக்கூடாதப்பு” என்று இடம்பெயர்ந்து போயிருந்த இடங்களிலெல்லாம் அடிக்கடி சொல்லிக் கொள்வா அம்மா. அம்மா சொல்வதைப்போல இப்பிடியே காடுபத்த விட்டால், அது அவர்களைக் கைவிட்டதற்குச் சமனாகி விடுமல்லவா.

ஆனால் இதையெல்லாம் சீர்ப்படுத்த நிறையப் பணமும் வேணும். உழைப்பும் வேணும். காட்டை அழித்து வீட்டுக்கான நிலத்தை உருவாக்குவது சாதாரணமான விசயமல்ல. அதுவும் இந்தப் பெருங்காட்டை. அதை விட இப்படிச் செழித்திருக்கும் காட்டை அழிப்பது என்றால்…

பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பரந்து நிற்கும் ஆயிரக்கணக்கான பனைகளையும் வடலிகளையும் அழிக்க வேணும். கூடவே முதிரை, பாலை, வீரை, கருங்காலி, சுரவுன்னை, கொக்கட்டி, நெடுநாரை, ஒதி, நாவல், சடவக்கு, விண்ணாங்கு, செம்மணத்தி, வெள்ளுருவை, காயா, பங்கிராய், கெட்டுக்கண்ணி, பனிக்கை, புன்னை, புங்கை, கொன்றை, துவரை, புளி, மஞ்சமுன்னா, மகிழ், விராலி, கொண்டல், விளாத்தி, ஆத்தி, வேம்பு, புளிச்சல், நறுவிலி, விடந்தை, உவாய், மாவிலங்கை, தில்லை, இலகு, தணுக்கு, தேத்தா, காஞ்சூரை, புறங்கைநாறி, திப்பிலி, சமண்டலை என்று ஏராளம் மரங்களையும் சேர்த்து அழிக்க வேணும்.

மரங்கள் மட்டுமா அழியும்? கினியா, பாவட்டை, ஆடாதோடை, பன்னை, காண்டை, சூரை, காரை, தவிட்டை, அறக்கொட்டி, புழுக்கொட்டி, தண்ணிக்கொடி, கரம்பை, ஈஞ்சு, குண்டுமணிக்கொடி, காட்டெலுமிச்சை, காட்டுத்தோடை, காட்டு மா, உலுவிந்தை, பிடான், விடத்தல், நாயுருவி என்று அங்கே உள்ள ஆயிரக்கணக்கான கொடிகளும் செடிகளும் பற்றையும் சேர்ந்தல்லவா அழியும்? கூடவே அத்தனை மிருகங்களையும் அங்கே குடியிருக்கும் பறவைகளையும் சேர்த்து.

காட்டை அழித்து விட்டு அங்கே தென்னையை நடலாம். மா, பலா, கொய்யா என்று பழ மரங்களையும் நட்டு விடலாம். ஏன் முந்திரித்தோப்பைக் கூடப் பத்து வருசத்தில் பெரிதாகவே உண்டாக்கிக் கொள்ளலாம். ஆனால் இப்படியொரு காட்டை மறுபடியும் உருவாக்கவே முடியாது.

அப்படிப் பார்த்தால் யுத்தம் வந்தது கூட ஒரு வகையில் நல்லது போலத் தோன்றியது. இல்லையென்றால் இந்தக் காடு இப்படி செழித்திருக்குமா? இப்படிப் பாதுகாப்பாக இருந்திருக்குமா?

நாங்கள் ஊரிலிருந்தபோதே – இடம்பெயர்வதற்கு முன்பே – பாதிக்காடு அழிக்கப்பட்டு விட்டது. பயிர் செய்வதற்கு நிலம் போதாது என்று தோட்டத்துக்குப் பின்புறமிருந்த காட்டில் ஐந்து ஏக்கருக்குக் கூடுதலானதை வெட்டினோம். முழுக்காட்டையும் வெட்ட வேண்டாம் என்றார் ஐயா.

வீட்டுக்குப் பக்கத்தில் எப்போதும் காடிருக்க வேணும். விறகு எடுப்பதற்கு. அது விறகடுப்புக் காலம். என்பதால் அதற்கு எப்போதும் விறகு வேணும். மாரி வருவதற்கு முன்பே – ஆடி, ஆவணி மாதங்களில் நான்கு அம்பாரம் விறகெடுத்து விறகுக் கொட்டிலில் அடுக்கி விடுவார்கள் அம்மாவும் ஆச்சியும்.

விறகுக்கு மட்டுமல்ல, கம்பு, தடி, கப்பு எல்லாவற்றையும் வெட்டிறதுக்கும் எங்களுக்கெண்டு காடு வேணும். எங்கடை காட்டை அழித்துப் போட்டு ஆற்றையும் காட்டைக்கை நுழையக் கூடாது என்பது ஐயாவின் கொள்கை.

வீடும் வளவும் தோட்டமும் எப்படித் தேவையோ அதைப்போலக் காடும் வேணும் என்பது அவருடைய நிலைப்பாடு.

காட்டிலே தேவைக்கு அதிகமாக தடியையோ மரத்தையோ யாராவது வெட்டினால் போதும், எதுக்காக இதெல்லாம் என்று மேலதிகமாக வெட்டிய தடியைக் காட்டிப் பேசுவார். ஒரு வாரத்துக்கு மேலாக இதைப்பற்றியே பிலாக்கணம் வாசிப்பார்.

அவரை இப்படித் துக்கப்படுத்தக் கூடாதே என்று யாரும் ஒரு தடியைக் கூட தேவையில்லாமல் வெட்டுவதில்லை. அந்தளவுக்குக் காட்டில் கண்ணும் கருத்துமாக இருந்தார் ஐயா. ஐயா மட்டுமல்ல, ஊரில் பலரும் அப்படித்தான். காடென்றால் எல்லோருக்கும் உயிர்.

காட்டைக்காக்கவென்று காடேறி வைரவரோ அண்ணமாரோ கொம்பேறிச்சியோ காவல் தெய்வங்களாக இருந்ததும் இதுக்காகத்தான்.

அவர்களைப் பொறுத்தவரை வளவு, தோட்டம், தோப்பைப்போல காடும் ஒரு செல்வமே.

மாட்டுக்கட்டைக்கு, வேலிக்கதிகாலுக்கு, அலம்பலுக்கு, வீட்டுத்தடிக்கு, விறகுக்கு, கம்பிக்கட்டைக்கு, ஆட்டுப்படலுக்கு, சூடடிக்கும்போது பயன்படுத்தும் வேலைகாரன் தடிக்கு, களங்கட்டி வலைக்கான தடிக்கு, ஆட்டுக்கும் தோட்டத்துக்கும் குழைக்கு எனப் பலதுக்கும் காடு உதவியது.

இதைவிட வேட்டைக்கு, தேனுக்கு, மூலிகைக் கொடிகளுக்கு, கிழங்குகளுக்கு என எல்லாவற்றுக்கும் காடே ஆதாரம்.

இளவயதில் காடளைந்த கால்களை ஒரு கணம் பார்த்தேன்.

மரங்களின் ஊடாக காட்டு விலங்குகளின் ஒற்றைத்தட வழியில் நடந்து வேலிகட்டுவதற்குக் கொடி வலிக்கப்போன நாட்கள்…

பெரிய மாமாவோட வாற வெத மாத்தயாமாரோட (சிங்கள வைத்தியர்களோடு) சேர்ந்து மூலிகைக் கிழங்கு தோண்டப்போனது, கனகண்ணையோட வேட்டைக்குப் போனது… மோகனோடும் சுந்தரியோடும் சேர்ந்து கார்த்திகைப் பூப்பிடுங்க, அழகியோடும் நிர்மலவோடயும் சேர்ந்து கரும்பைப் பழத்துக்கும் துவரம் பழத்துக்கும் திரிந்தது… கதிரவேலு மாமாவோட சேர்ந்து முயலுக்குத் தடம் வைச்சது, கோனாரோட கூடிப் பன்றிக்குப் பொறி கட்டினது… புறாக்களுக்குத் தடம் வைச்சது… உமாவைக்கூட்டிக்கொண்டுபோய் மான் குட்டிகளைப் பார்த்தது, லிங்கச் சிந்திப்பாவோட பன்றிப் பழையில் குட்டிகளைக் காணப்போனது, சறோ அத்தையோடும் ராணிச் சித்தியோடும் குண்டுமணியும் மயிலிறகும் பொறுக்கியது……

இதையெல்லாம் எண்ணும்போது காட்டை அழிப்பதற்கு மனசே வருகுதில்லை.

ஆனாலும் இப்படிக் காடாகவே விட்டு விட முடியுமா? அக்கம் பக்கத்துக் காணிக்காரர்களெல்லாம் தங்களுடைய காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் காட்டை அழித்து ஊராக்கும்போது நாங்கள் மட்டும் காடாக எங்கள் காணியை வைத்திருக்க முடியுமா? அப்படி வைத்திருந்தால் எப்படியிருக்கும்?

இப்படியெல்லாம் குழப்பங்களுக்குள்ளாகி என்ன முடிவெடுப்பது என்றே தெரியாமலிருந்தபோதுதான் ஒரு நண்பர் சொன்னார், “பேசாமல் காட்டையே வளருங்கள். எல்லோரும் காட்டை அழித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் காட்டைப் பேணுவது எதிர்காலத்தில் கவனத்திற்குரியதாக இருக்கும். சூழலையும் பேணுவதைப்போலிருக்கும். ஆனால், இந்தக் காட்டைக் கொஞ்சம் நவீனப்படுத்தி வளருங்கள். அதற்கான ஆலோசனைகளை நீங்கள் இணையத்தில் தாராளமாகப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கென்றே படித்துப் பட்டம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆலோசகர்கள் கூட உண்டு” என்று.

இதுவும் ஒரு நல்ல யோசினைதான்.

சிங்கப்பூரில் பெரும் செலவு செய்து நகருக்கு நடுவிலே செயற்கையாகக் காட்டை உருவாக்கியிருக்கிறார்கள். சென்னையில் கூட நகரின் மையத்தில் காடுண்டு. உலகின் பெரும்பாலான முக்கியமான இடங்களில் மரங்களை வளர்க்கிறார்கள். காடுகளை உருவாக்குகிறார்கள்.

ஆனால், இதையெல்லாம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்குப் புரிய வைக்க வேணுமே. இல்லையென்றால் அவர்களுடைய பயிர்களை எங்கள் காட்டிலிருக்கும் மானும் பன்றியும் முயலும் அழித்து விடும் என்பார்கள். தாங்கள் கோழியோ ஆடோ மாடோ வளர்த்தால் நம்முடைய காட்டிலிருந்து நரியும் வெருகும் மரநாயும் காட்டுப் பூனையும் சருகுபுலியும் சிறுத்தையும் பிடித்துத்தின்று விடும் என்று குற்றம் சாட்டுவார்கள்.

இதற்கெல்லாம் ஒரு சரியான ஏற்பாடு செய்ய வேணும். இதற்குத் தகுந்த ஏற்பாடுகள் கிடைக்குமென்றால் காட்டை வளர்ப்பது நல்லதே. வேணுமென்றால் ஒரு தொகுதியை மட்டும் அழித்து அதிலே வீட்டையும் சிறிய அளவில் ஒரு பண்ணையையும் உருவாக்கிக் கொண்டு மிஞ்சியதையெல்லாம் காடாகவே வளர்க்கலாம். நண்பர் சொல்வதைப்போல அது ஒரு மாற்றாகவும் இருக்கும்.

காட்டு இலாகாவில் வேலை செய்த தந்தையாரோடு காட்டில் திரிந்த
நண்பரைப்போல எனக்கும் சிறு வயதிலிருந்தே காடுலாவிய அனுபவங்களுண்டு.

பாலுச்சித்தப்பாவோடு உடும்பு வேட்டைக்காக. கனகண்ணையோடு பரண் வேட்டைக்காக. கதிரவேலு மாமாவோடு முயல்வேட்டைக்காக. இரத்தினசிங்கம் அண்ணையோட தேனெடுக்கவென. வெடிகார வைரமுத்துவோடு ஒளியில் மறைந்திருந்து வேட்டையாடுவதற்காக. குஞ்சனோடு நண்பர்களாகச் சேர்ந்து கலைப்பு வேட்டைக்காக. பெருமாளோடு பாலைப்பழத்துக்காக. ஐயாவோடு தடிகள் வெட்டுவதற்காக. அம்பியோடும் மோகனோடும் வீரைப்பழம், சுரவுன்னம்பழம், முரலிப்பழம் என்று காட்டுப்பழங்களைத் தின்பதற்காக.. சுந்தரியோடு வேலி கட்டுவதற்கென்று மாங்கொடி வலிப்பதற்காக….

பல நாட்களில் மனசு கொஞ்சம் இதமாகட்டுமென்று பின்னேரங்களில் அல்லது காலையில் காட்டில் உலாவியிருக்கிறேன்.

வெளியூரிலிருந்து நண்பர்கள் வந்தால் அவர்களைக் கூட்டிக்கொண்டு அப்படியே ஒரு உலாத்து என்று காடு நீள நடப்பது… இப்படி எவ்வளவோ விசயங்களுக்காக காட்டில் திரிந்திருக்கிறேன்.

எப்பொழுது எதைக் கேட்டாலும் அதைத் தரக்கூடியமாதிரியே காடிருந்தது.

அதனால்தான் வீட்டுக்குப் பின்புறமாக, தோட்டத்துக்கு அப்பால் ஒரு துண்டுக் காட்டை ஒவ்வொருவரும் பேணி வந்திருந்தார்கள். அப்படியென்றால் அதைக் காடு சார்ந்த வாழ்க்கை அது என்று சொல்லலாமா?

நிச்சயமாக.

அது முல்லை நில வாழ்க்கையே. முல்லைப் பண்பாட்டு வாழ்க்கை.

காட்டில் முல்லைக் கொடியைப் பார்க்கும் போதெல்லாம் பாரி மன்னனின் நினைவு வரும் என்பார் ஐயா. அப்படியே சங்கப்பாடல்களில் எட்டுப் பத்துப் பாடல்களை மனங்கரைந்து பாடுவார். கண்களில் நீர் திரளும் அப்போது.

காட்டில் தடி வெட்டிப்போகவும் வேறு பொருட்களை எடுத்துச் செல்லவும் என்று இடைக்காட்டிலிருந்து வண்டில் கட்டி வருவார்கள். மூன்று நான்கு வண்டில்களில் வருகின்றவர்கள், மண்வெட்டிப் பிடி, மாட்டுக்குத் துவரம் கம்பு, மாட்டுக்கு இடிகட்டை, ஆட்டுக்கட்டைக்கான தடிகள், குடிலுக்கான வரிச்சும் கம்புத்தடிகளும் கப்பும் என்றெல்லாம் வெட்டித் தோதாக்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு போவார்கள்.

இதைவிட மூலிகைக் கொடிகளையும் கிழங்குகளையும் சேகரித்துக் கொண்டு போவோரும் உண்டு.

நல்லூரிலிருந்து சின்னையா மாமா நாலு போத்தல் தென்னஞ்சாராயத்தோடு நான்கைந்து ஆட்களைக் கூட்டி வந்து இரண்டு மூன்று நாட்கள் நின்று வேட்டையாடிக்கொண்டு போவார். வேட்டையில் சிக்கிய மானையோ பன்றியையோ வத்தலாக்கிப் போவதுமுண்டு.

காட்டைப்பார்த்துக் கொண்டே நின்றேன்.

இதை அழித்தால் இனி இந்தப் பகுதியில் காடே இருக்கப்போவதில்லை. முன்னரைப்போல இப்பொழுது யாருக்கும் காடு தேவையில்லை. விறகடுப்பே இல்லாமல் போய்விட்டது. ஆடுகளையும் மாடுகளையும் யார்தான் கட்டை இடித்துக் கட்டுகிறார்கள். வேலியே இல்லாமல் போய் விட்டது. கம்பிக்கட்டைக்குப் பதிலாக சிமெந்துத் தூணைப் போட்டு முட்கம்பியை இழுத்து விடுகிறார்கள்.

காட்டுப் பழங்களைத் தின்னலாமா என்று பிள்ளைகள் ஆச்சரியமாகக் கேட்கின்றன. இந்தச் சீரில் யாருக்குத்தான் காடு தேவை? என்பதால் இதுதான் கடைசிக் காடு.

சுற்றயல் முழுவதும் வெட்டை வெளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் காட்டை விட காணி நிலமே முக்கியமாகி விட்டது. காணியென்றால் காசு காய்க்கும் காணி. தென்னை, மரமுந்திரி, மா, பலா, கொய்யா, பப்பாளி என்று பழமரங்கள், முருங்கைச் செடி எனக் கிசு கிசுவென வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மனம் பணத்தை நினைத்து விட்டால் காசு வரும் வழியைத்தவிர பிறகதற்கு வேறெதுவுமே தெரியாது.

இதனால் மழையைப்பற்றி, மண்ணின் வளத்தைப்பற்றி, பறவைகள், விலங்குகளைப் பற்றி, நம்முடைய மண்ணின் மரங்கள், செடி, கொடிகளைப்பற்றிய கவலைகள் எவருக்குமே இல்லாமற் போய் விட்டது.

இப்படி உலகமே மாறிக் கொண்டிருக்கும்பொழுது இதில் எதைச் செய்யலாம்? காட்டை வளர்ப்பதா? அழிப்பதா?

இன்னும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.

நன்றி – கருணாகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More