பரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை செல்லும் மாணவர்களும் விசுவமடு இராணுவப் பண்ணைக்குச் செல்லும் தமிழ் இராணுவச் சிப்பாய்களுமாய் நிறைந்திருந்தது அப்பேருந்து. சத்தியாவுக்குப் பக்கத்திலிருந்த வயதான ஒரு முதியவர், திடீரென எழுந்து சற்றுத் தள்ளி அமர்ந்து, அவளையொரு வேற்றுக் கிரகவாசியைப்போலப் பார்த்தார். அத்தகைய பார்வைகள் வழமை என்றபோதும் அவளுக்கு இன்னுமொருமுறை உடல் கூசியது. மேலும் சில கண்கள் அவளுடைய சீருடையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தன.
தன்னால் மறக்க முடியாத கதைகள் அந்தச் சீருடையில் தெரிவதைப்போல் ஒருத்தி பார்த்துக் கொண்டு முகத்தைத் திருப்பினாள். தான் கண்ட இராணுவத்தின் முகங்கள் தெரிவதைப் போலிருக்கவும் கண்களை மூடிக்கொண்டான் ஒருவன். சத்தியா முகத்தைப் பேருந்தின் ஜன்னலுக்கு வெளியில் நீட்டினாள்.
பேருந்து உடையார்கட்டு குளத்தைக் கடந்தது. காலைச் சூரியனின் ஒளி எங்கும் பொன்னிறமாய்ப் படிந்திருந்தது. சில பறவைகள் குளத்திலிருந்து எழுந்து பறந்தன. அவளுடைய மனதில் பனிப் பூக்கள் மலர்ந்தன. தூரத்தில் ஒரு பசு தன் கன்றுக்குட்டியை நக்கிப் பாலூட்டியது. இவளுக்கு மார்பு சுரப்பதைப்போலிருந்தது. அந்தப் பேருந்து இராணுவ முகாமின் வாசலில் தரிக்கவும் இவள் இறங்கிக்கொண்டாள்.?
துப்பாக்கியை ஏந்தியபடி வாசலில் நின்ற சிப்பாய் பல்லிளித்து வழிந்தான்.
இராணுவ முகாம் வழமைக்கு மாறாகக் களைகட்டியிருந்தது. முகாமிற்குப் பொறுப்பாக இருந்த துமிந்த, வவுனியாவிற்கு மாற்றலாகிச் செல்கின்றான். இதனால் துமிந்தவுக்குப் பிரியாவிடை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
வழமையாக, தோட்டங்களுக்கு மண் அணைத்துத் தண்ணீர் ஊற்றும் வேலைகள்தான் சத்தியாவுக்கு வழங்கப்படும். இப்போது சில நாள்களுக்கு, பிரியாவிடை நிகழ்வுக்கான சிற்றுண்டிகளைத் தமிழ் இராணுவச் சிப்பாய்களிடமிருந்து சேர்ப்பதற்கு ஷிவாந்திகாவுக்கு உதவியாக வேலை செய்யுமாறு துமிந்த பணித்திருந்தான்.
ஷிவாந்திகா, சத்தியாவுடன் மிகவும் நெருங்கிப் பழகுவாள். அந்த இராணுவப் பண்ணையில் வேலை செய்யும் எல்லாத் தமிழ் இராணுவப்பெண்களோடும் அவள் அப்படித்தான். இருவரும் சிப்பாய்கள் ஒப்படைத்த பலகாரப் பைகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். துமிந்தவின் பிரியாவிடைக்காக ஒவ்வொரு இராணுவச் சிப்பாயும் நான்கு வகைப் பலகாரங்களை வீட்டிலிருந்து கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அத்துடன் ஆளுக்கு மூவாயிரம் ரூபாவை தமது மாதச் சம்பளத்திலிருந்து அன்பளிப்பு செய்ய வேண்டும் என்றும் துமிந்தவால் கட்டளை இடப்பட்டது. மூவாயிரம் சிப்பாய்களும் மூவாயிரம்படி கொடுக்கும் பணத்தில் துமிந்தவுக்குத் தங்கச்சங்கிலி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் தயாராகி இருந்தன.
“உங்களுக்காகத்தான் இயக்கத்துக்கு வந்தனான். ஆனால் இப்ப அப்படி இல்லை, உங்களைப்போல இந்த மண்ணையும் காதலிக்கிறேன்…”
தடித்த உடம்பு. சிவந்து வீக்கம் தள்ளும் கண்கள். இரண்டு சாராயப் போத்தல்களுடன் வந்த ஷானக்க, சத்தியாவைத் தட்டுவதைப் போலக் கையை நீட்டவும் இவள் திடுக்கிட்டாள். சத்தியாவின் முகம் சஞ்சலத்துடன் சுருங்கியது. ஷிவாந்திகாவின் முகத்தில் கோபம் தணலாய் மின்னியது. “நான் சொன்னது… நினைவு இருக்கணும்…” சொல்லியபடி கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு சென்றான் ஷானக்க.
அவனின் சொற்கள் அவளைத் தடுமாறச் செய்தன. அவள் அதுவரையிட்ட கணக்கை மறந்து மீள அவற்றை எண்ண முயன்றாள். ஷானக்கவின் சொற்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. ஷிவாந்திகா தோள்களைப் பற்றி ஆறுதல் படுத்தினாள்.
ஷானக்க, சிவாந்திகாவை தனது அறைக்கு வந்து சந்திக்க வேண்டும் என்று ஒருநாள் ஒரு சிப்பாயைத் தூது விட்டான். சென்றவள், ஷானக்கவின் கன்னங்களில் அறைந்துவிட்டுத் திரும்பினாள். ஷானக்க இரண்டு நாள்களாய் அந்த அறையை விட்டு வெளியில் வரவில்லை என்று சொல்ல, சிரித்தாள் சத்தியா. அந்த இராணுவ முகாமில் ஷிவாந்திகா பெண்களுக்குப் பொறுப்பானவள். துமிந்த பிரதான அதிகாரி. ஷானக்க அவனுக்கு உதவி அதிகாரி. ஆனாலும் அங்கு ஷானக்க வைத்ததுதான் சட்டம். அவனுடைய அறைக்கு அழைத்து, அங்கு போனால் என்ன நடக்கும் என்பது எல்லா இராணுவச் சிப்பாய்களுக்கும் தெரியும்.
ஷிவாந்திகா இராணுவத்தினனின் மனைவி என்பதால், அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சினந்தான். ஷானக்க தன்னையும் இராணுவத்தில் உள்ள பெண்களையும் வற்புறுத்தல் செய்வதாக ஷிவாந்திகா மேலிடத்திற்கு எத்தனையோ கடிதங்களை எழுதினாள். ஆனால் எதற்கும் பதிலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. தனது விசயங்களில் ஷிவாந்திகா தேவையில்லாமல் மூக்கை நுழைத்துத் தேவையற்ற விபரீதங்களைச் சந்திக்கப்போவதாக ஷானக்க துமிந்தவிடம் எச்சரித்துக்கொண்டிருந்தான்.
2002இல் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலம். செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் ஷிராணியையும் கூட்டிக்கொண்டு வன்னிக்கு வந்தாள் ஷிவாந்திகா. அப்போது அரசியல்துறைப் போராளியாக அவளை வரவேற்றாள் சத்தியா. “என்ட பிள்ளை எப்பவும் அப்பாவைக் கேக்கிறாள்… நீங்கள்தான் இவளின்டை அப்பாவை வைச்சிருக்கிறதாய் எங்கடை அரசாங்கம் சொல்லுது… என்டை பிள்ளைக்கு ஒரே ஒருக்கா, அவரைக் காட்ட ஏலுமே…” சத்தியாவின் கண்கள் அவளைத் தேற்றியது. “சண்டையிலை எத்தனையோ பிள்ளையளின்டை அப்பா, அம்மா செத்துப்போயிற்றினம். ஆமி பிடிச்சு நிறைய பிள்ளையளுக்குத் தேப்பன் இல்லை… அப்பா, அம்மா இல்லாத பிள்ளையளின்டை நிலை எங்களுக்கு நல்லா தெரியும். நாங்கள் ஒருகாலும் அப்பிடிச் செய்யமாட்டன். நான் விவரம் பாத்துச் சொல்லுறன்… நீங்கள் இந்தத் தேத்தண்ணியைக் குடியுங்கோ…” சத்தியாவின் வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலூட்டின.
சத்தியாவின் கண்கள் களைப்பில் மெல்லச் சுருண்டன. அந்தப் பேருந்து விசுவமடுவிலிருந்து முரசுமோட்டை பக்கமாய் நகர்ந்தது. சத்தியா இயக்கத்தில் ஒரு அரசியல்துறைப் போராளி. அவளுடைய பிரசாரத்தைக் கேட்டால் இயக்கத்திற்கு வராதவர்கள் இருக்க முடியாது. தூக்கிக்கட்டிய ரெட்டைப் பின்னல். இடுப்பில் பட்டி. அவளுடைய பேச்சு போலவே அவளும் வீரத்தின் அழகாய் இருப்பாள்.
வீதி நாடகம் முடிவடைந்து அரசியல் பிரசாரத்தை சத்தியா ஆரம்பித்தபோது எதிரில் நின்றிருந்த காந்தனை இவள் அவதானிக்கவில்லை. அவன் அவளுடைய பல பிரசாரக் கூட்டங்களில் தவறாது கலந்துகொள்கின்றவன்தான். வட்டக்கச்சியில் நடந்த பிரசாரக் கூட்டத்தின் முடிவில் காந்தன் இவளைப் பார்த்துக்கொண்டே நின்றான். அவன் வெட்கத்தில் நெளிந்தான். இவன் இயக்கத்திற்குச் சேர வந்ததைப்போல அவளுக்குத் தோன்றவில்லை. கண்களைக் குவித்து நோக்கினாள்.
“உங்களிடம் ஒரு கடிதம் தரலாமா..?”
“சொல்லுங்க அண்ணே…” தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம் என நினைத்துக்கொண்டு வாங்கிக்கொண்டாள் சத்தியா.
கடித உறையில் அவளது பெயர்தான் அழகாய் எழுதப்பட்டிருந்தது. பாசறைக்குத் திரும்பியவள், அந்தக் கடிதத்தைப் படிக்கத் துவங்கினாள். “சத்திய மகளுக்கு. இப்பொழுதெல்லாம் என் கனவுகளில் உங்கள் பிரசாரம்தான். கடந்த ஒன்றரை மாதமாய் நீங்கள் வீதி நாடகப் பிரசாரத்திற்கு வரவில்லை. சண்டைக்குப் போயிற்றியளோ என்று பயந்திட்டன். எனக்கு உங்கள் நினைவாகவே இருக்குது. உங்கள் கணீர் என்ற குரலில் களத்தின் நிலவரங்களையும் எங்கடை போராட்டத்தின் இன்றைய நிலைகளையும் கேட்க, பேசாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்…”
கடிதத்தை மெல்லப் பிடுங்கிக்கொண்ட தேனிலா ஏனைய போராளிகளுக்கும் விசயத்தைச் சொல்லி நக்கல் அடித்துக்கொண்டிருந்தாள். பிரசாரம் செய்கிறவையளுக்கும் தீவிர ரசிகர் எல்லாம் இருக்கினம்… காதல் எல்லாம் கைகூடுது…” என்றாள் தேனிலா. “அவருக்கு நல்ல துணிவுதான்…” கொஞ்சம் கோபமாகச் சொல்லியவளின் நினைவில் தயக்கத்தின் அந்த உருவமான அவன் வராமலில்லை. அதற்குப் பிறகு நடந்த பிரசாரக் கூட்டங்களில் அவள் அவனைக் காணவில்லை. உதடுகள் தீவிர மழை பொழிந்திருக்க, கண்கள் அவனைத் தேடின.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். ஆனையிறவுச் சண்டையில் காயமடைந்த போராளிகள் வட்டக்கச்சி போராளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உலர் உணவுப்பொருள்களை மக்களிடமிருந்து வாங்கிச் கொண்டு சென்றாள் சத்தியா. மண்ணெண்ணெய்ப் புகையெழும்ப, எம்டி நைன்டி மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தவள் ஒரு கட்டிலில் படுத்திருந்த காந்தனைக் கண்டபோது அதிர்ந்தேபோனாள். உடல் முழுவதும் காயக்கட்டுகள். தலையில் ஒரு செல் துண்டு ஆழமாய்க் கிழித்திருக்க, தலையைச் சுற்றி மருந்து கட்டப்பட்டிருந்தது.
“உங்களுக்காகத்தான் இயக்கத்துக்கு வந்தனான். ஆனால் இப்ப அப்படி இல்லை, உங்களைப்போல இந்த மண்ணையும் காதலிக்கிறேன்…”
எப்படியோ அவளிடம் நேராகக் காதலை ஒப்புவித்த, ஆறுதலில் அவன் காயங்களில் மெல்லிதாய் சுகம் படரத் துவங்கியது. அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளின் கண்கள் அவனின் காயத்தை நீவின. “கெதியிலை காயங்கள் எல்லாம் மாறிடும்…’’ என்றவளின் வார்த்தைகளைக் கேட்டதுதான், அவனின் மனக்குதிரை களத்தில் துள்ளித் துள்ளி ஆடியது. நான்காவது கட்டிலில் படுத்திருந்த ஆதவனைக் கத்தி அழைத்தான் காந்தன்.
“மச்சான், இவாதான் நான் சொன்னவா…”
“பிறகென்ன உன்னை பாக்கிறதுக்கு வந்திட்டா போல… அப்ப எல்லாம் இனிச் சரிதான்…”
சத்தியாவின் கண்கள், வெட்கத்தில் தரையில் விழுந்துருண்டன.
தலைவரின் அனுமதியுடன் காந்தனுக்கும் சத்தியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. காந்தன் வீட்டைவிடவும் எல்லையில்தான் அதிகமும் நிற்பான். ஆரணி பிறந்தபோது முகமாலைச் சண்டையில் நின்றவன், பன்னிரண்டு நாள்களின் பின்னர்தான் வீடு வந்தான். எல்லையும் வீடுமாக இருந்த வாழ்வு குறித்து சத்தியாவுக்குப் பெருமிதம்தான். ஆரணியைத் தினமும் காலையில் தளிர் போராளிகள் குழந்தைக் காப்பகத்தில் கொண்டு சென்று விட்டுவிட்டு மக்கள் சந்திப்பு என்று அரசியல்துறைப் பணிகளில் தான் அவளும் அதிகம் ஈடுபட்டாள்.
தேனிலா வாகனத்தில் வந்திறங்கினாள். அவளது வருகை வழமைக்கு மாறாயிருந்ததும் சத்தியாவின் முகம் மாறியது. தேனிலா வந்து சத்தியாவை அணைத்துக்கொண்டு விம்மினாள்.. “அக்கா காந்தண்ணை வீரச்சாவு…” அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. இடிந்து சாய்ந்து கொண்டாள் சத்தியா. துயரக் குரல் எழுப்பி ஓ…வென அழுதாள். தேனிலா அவளை அணைத்துக் கொண்டாள்.
பூநகரியில் இராணுவத்தினரின் எதிர்பாராத செல் தாக்குதலில் காந்தன் வீரமரணம் அடைந்தான். ஏதுமறியாத ஒன்றரை வயதுக் குழந்தையாய்க் கிடந்தாள் ஆரணி.
கிளாலிப் பக்கம் கடும் சண்டை தொடர்ந்தது. காயமடைந்த போராளிகளை ஏற்றிய நோயாளர் காவு வண்டிகள் வேகத்துடன் செல்லும் சத்தமாயிருந்தது நகரமெங்கும். வீரச்சாவடைந்த போராளி ஒருவனின் வித்துடல் துயிலும் இல்லம் நோக்கி நகர்ந்தது. இவள் எழுந்து மரியாதை செய்தாள். வானம் இருட்டியிருந்தது. பூக்களை ஆய்ந்து சென்று அவனின் வித்துடலுக்குப் போட்டாள். அந்த வீரனோ ஒரு குழந்தையைப்போலக் கண்ணுறங்கினான்.
சத்தியாவுக்கு இப்போது எல்லாமும் ஆரணிதான்.
“அம்மா எனக்குப் பசிக்கிது, என்ன கொண்டு வந்தனியள்?’’ பையைப் பிடுங்கி சோதனை செய்தாள். “அம்மா நாளைக்குப் பள்ளிக்கூடத்தில வகுப்பு டீச்சர் மீட்டிங் என்று சொன்னவா. உந்த ஆமி உடுப்போடை வர வேண்டாம் பிறகு என்னை எல்லாப் பிள்ளைகளும் நக்கல் அடிப்பினும்…” இவர்கள் பேசிக்கொண்டிருக்க, பக்கத்து வீட்டு சித்திராவும் வந்துகொண்டாள்.
“என்ன பிள்ளை அம்மாவைக் கேட்டு அடம்பிடிக்கிறார…”
ஆரணி சத்தியாவின் மடியில் தலை சாய்ந்தாள்.
இந்த வேலை அவளுக்கு விருப்பம் இல்லை.. எனக்கும்தான். பேசாமல் விட்டிரலாம் எண்டுதான் பாக்கிறன்… வீடு கட்ட லோனும் எடுத்தாச்சு… அவங்கள் தந்திரமாய் லோன், பைக் எண்டு தந்து எங்களை மாட்டி வைச்சிருக்கிறாங்கள். கனபேர் அதாலைதான் இன்னும் வேலையை விடாமல் இருக்குதுகள்.”
இராணுவத்திற்கு ஆள் சேர்த்தபோது சித்திரா, மறுத்துவிட்டாள். சித்திராவின் கணவன் தாஸ் சண்டையில் இறந்துவிட்டான். “என்ட மனுசனைக் கொன்ற நாசமறுவாரிட்டை நான் வேலைக்குப் போவனே?” என்று கொந்தளித்தாள். அவள் கண்டாவளைச் சந்தையில் ஒரு பழக்கடையை நடத்தி அதில் வரும் வருவாயில் தன் மகனைப் படிப்பித்துவருகிறாள்.
“வேலைக்கு எடுக்கேக்குள்ளை என்ன வெல்லாம் சொல்லிச்சினம்… இப்போதைக்கு, பாதுகாப்பு திணைக்களத்தாலை எடுக்கினம். பள்ளிக்கூடம், முன்பள்ளிகளிலைதான் வேலை. பிறகு கல்வித் திணைக்களத்துக்கு மாத்திருவாங்கள்… இப்பிடி ஒரு வேலை வாய்ப்பு பிறகு கிடைக்காது… ஈபிஎப் எல்லாம் தருவாங்களாம் எண்டு கதைவிட்டு வேலைக்கு எடுக்கேக்குள்ளையே எனக்குத் தெரியும்… ரெயினிங், ஆமி யுனிபோர்ம், ஆமிக் கேம்பிக்குள்ளைதான் வேலை எண்டு மெல்ல மெல்ல இப்ப உங்களையும் ஆமி ஆக்கிட்டாங்கள்… என்ட புருசனக் கொன்ற ஆமியை தண்டிக்கச் சொன்னால், அவங்கள் இனி உன்னையும் காட்டுவாங்கள்… இவையளும் சிங்கள ஆமிதான் எண்டு… அதுக்குத்தானே இதெல்லாம்…” சித்திராவின் கண்களில் ஏமாற்றமும் கோபமும் கனன்றது.
“ஓம்.. இந்த உடுப்பிலை வந்த ஆமிதானே உங்கடை மனுசனை கொண்டது. இந்த உடுப்போடை என்னப்போல ஒருத்தி வந்தால், நீங்களும் உங்கடை பொடியனும் அப்பிடித்தான் சொல்லிக்கொண்டு போவியள்…”
“…”
அக்கா, ரோட்டிலை வரேக்குள்ள, நாயள்கூட கலைச்சு கலைச்சு குலைக்குதுகள். ரோட்டிலை பிள்ளையள் கண்டால் ஆமிக்காரி எண்டு ஓடி ஒளியுதுகள்… பிறகு என்டை பிள்ளை அப்பிடித்தானே சொல்லுவாள்…” சூழ்நிலைக் கைதியாகிவிட்ட சத்தியாவைத் தேற்ற வார்த்தைகளற்றவளாய் எழுந்து நகர்ந்தாள் சித்திரா.
துமிந்த தனது பிரியாவிடை ஞாபகமாக ஒரு வெள்ளை அரச மரத்தையும் புத்தர் சிலை ஒன்றையும் இராணுவ முகாமில் நட்டுச் செல்ல விரும்பினான். புத்தர் சிலைகள் வைக்கும் இராணுவத்துக்கு எதிராகப் போராடிய தானே இன்று அந்த புத்தர் சிலைகளுக்கு அருகில் பூஞ்செடிகளை நாட்டுவதை நினைக்க அவள் மனம் விம்மியது. இந்த புத்தர் சிலைகள் அரச மரங்களும் வளர்ந்து தன் குழந்தையின் நிழல்களைத் திருடும் என நினைக்கையில் அவள் மனமெங்கும் அரச மரங்கள் பூதங்களைப்போல மிரட்டின.
அந்த புத்தர் புன்சிரிப்புடன் மிகவும் மௌனமாக அப்பாவியாக அமர்ந்திருந்தார். ஷானக்க, அந்தப் பக்கமாக வந்து புத்தர் சிலை அமைக்கும் சிப்பாய்களுக்கு ஏதோ உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். சத்தியாவுக்கு அருகில் நின்று “நல்ல பூ அழகான பூ என்ட கைக்குள்ளதான் சிக்குது இல்ல…” என்றபடி நகர்ந்தவன், மீண்டும் நெருங்கி வந்தான். “ஏய் எப்ப வாறது… என்ன நீ பெரிய பத்தினியோ…கண்ணகி மாதிரி இருக்க, இங்க கஷ்டம்…” அவனுடைய சிவந்த விழிகள் அவளை மிரட்டிவிட்டுச் சென்றன.
பிடுங்கி எறியப்பட்ட பூஞ்செடிபோல அவள் முகம் வாடிற்று. ஷிவாந்திகா தேநீருடன் வந்தாள். சத்தியாவின் முகம் வாடியிருந்தைக் கண்டாள். தூரத்தில் ஷானக்க சென்று கொண்டிருந்தான். “நானும் இந்த நரகத்தில் இப்படித்தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறன். எத்தினை வருசமாய்… ஷானக்கவின் பார்வையில் நீயும் நானும் ஒண்டுதான். எங்களிலை ஆசை வைப்பான். உங்களிலை வெறி வைச்சிருப்பாங்கள்… அவனால் என்ன செய்ய ஏலும் எண்டதையும் பார்ப்போம்…” ஷிவாந்திகாவின் வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாய் இருந்தன. எழுந்து மீண்டும் பூஞ்செடிகளை நடத் தொடங்கினாள்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஷிராணிக்காய்ப் பணம் அனுப்பக் கிளிநொச்சிக்கு வங்கி செல்லும் சிவாந்திக்கா, மோட்டார் வண்டியில் சத்தியாவைப் பின்னால் ஏற்றிக்கொண்டு வந்தாள்.
“அக்கே…. நான் பேசாமல் வேலையை விடலாம் எண்டு பாக்கிறன்… இவன்டை டோச்சர் ஒரு பக்கம்… என்டை பிள்ளைக்கும் விருப்பமில்லைதானே… ஊரிலை சனங்கள் சும்மாவே ஆயிரம் கதை கதைக்குதுகள். என்டை பிள்ளையின்டை எதிர்காலம் தானே எனக்கு முக்கியம்…”
“இன்னும் கொஞ்ச காலம் பல்லைக் கடிச்சுக் கொண்டிரு… உன்டை பிள்ளையைப் படிக்க வைக்க இதை விட்டிட்டு என்ன செய்வாய் நங்கி…”
“இந்தச் சீருடையைப் போட்டுக் கொண்டு… பெரிய கஷ்டமாய் இருக்குது… இதே சீருடையோடைதானே இராணுவம் எங்கடை சனங்களை எல்லாம் கொன்றது… என்னையும் சனங்கள் அப்பிடித்தானே பாக்கும் அக்கே…”
“நான் உன்னை முதல் முதலில கிளிநொச்சியிலை பாத்த மாதிரித்தான் இன்னும் நீ இருக்கிறாய். இப்பவும் ஒரு இயக்கக்காரிதான். சீருடைதான் மாறியிருக்குது…”
“நீங்கள் நல்லா சமாளிப்பியள் அக்கே…”
“இல்லே சத்தியா… நீ இயக்கச் சீருடையோடை, நான் இராணுவச் சீருடையோடைதான் இந்த மண்ணிலே.. ஒரு வண்டியிலை போறோம்…”
சத்தியாவும் அப்படியே உணர்ந்தாள். சூரிய வெளிச்சம் இருவர் முகங்களிலும் படிந்தது. கீழிறங்கும் சூரியனின் மறைவின் அழகு சத்தியாவின் மனதில் வெளிச்சமாய்ப் படர்ந்தது.
“எனக்கு வாற கோவத்துக்கு இவனை ஒரு நாளைக்குச் சுடப் போறன்…”
“ஓம் அக்கே… பேசாமல் அதைச் செய்யுங்கோ…” சத்தியா குலுங்கிச் சிரித்தாள்.
“அதுசரி… நாங்கள் தமிழர் எண்டு எங்களுக்கு, துவக்கு எல்லாம் தாரேல்லை எண்டால், ஏன் உங்களுக்கும் தாரேல்லை…”
“திருப்பிச் சுட்டுப் போடுவியள் எண்டுதான் உங்களுக்குத் தாரேல்ல எண்டு தெரியும்… அப்ப நாங்களும் திருப்பிச் சுடுவம் எண்டு பயப்பிடுறாங்கள்போல…”
இருவரதும் சிரிப்பொலி கண்டாவளை வெளியில் இரண்டு குருவிகளின் கீச்சிடலைப் போல ஒலித்தது. மெல்லிய காற்று முகத்தைத் தழுவவும், “கொஞ்சம் ஆறுதலாய் இருக்குது அக்கே…” என்றபடி ஷிவாந்திகாவின் தோள்களை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள் சத்தியா.
சத்தியாவை இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளை முறுக்கினாள் ஷிவாந்திகா. சற்று தூரம் போனபிறகுதான் வீட்டுக்குள் கூட்டி வந்து ஒரு தேத்தண்ணி குடுத்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள். அவள் போய் மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றாள் சத்தியா. ஷிவாந்திகாவும் இடையிடையே திரும்பிப் பார்த்தபடி சென்றாள். அவளின் மனதில் மழை தேங்கி இருண்ட வானில் மின்னல் சட்டெனத் தோன்றி மறைந்தாற்போல் உணர்வு.
அன்றைக்கு இராணுவ முகாமே வெளித்திருந்தது. ஒரு மாயானத்தைப் போலவும் இருண்ட காட்டைப் போலவும் இருக்கும் இராணுவ முகாமில் எதிரில் ஷானக்க நின்றான். அவனுடைய ஈனச் சிரிப்பு சத்தியாவுக்கு அச்சத்தைப் பெருக்கியது. அவன் மெல்ல அவளுக்குப் பின்னால் நடக்கத் துவங்கினான். அவளின் கால்கள் தடுமாறியபடி சென்றன. ஷானக்கவின் கைகள் சத்தியாவின் தோள்களில் விழவும், இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து, ஷானக்கவின் முகத்திற்கு நேராக நீட்டியபடி திரும்பினாள் சத்தியா.
துப்பாக்கி படபடவென வெடித்தது. ஷானக்க இரத்தவெள்ளத்தில் சரிந்தான். அந்தத் துப்பாக்கியால், தனது தலையிலும் சுட்டுக்கொண்டு வீழ்ந்தாள் சத்தியா.
சத்தியாவின் உடலத்தின் முன்னால், ஆரணி “அம்மா அம்மா…” என்று துடித்துக் குளறினாள். ஊரே கூடியிருந்தது. சிலர் காதுகளுக்குள் ஏதோ குசுகுசுத்துக்கொண்டிருந்தனர். அவளின் உடலைச் சுற்றித் துப்பாக்கிகளை நீட்டியபடி இராணுவம் நிறைக்கப்பட்டிருந்தது. இனி என்டை பிள்ளைக்குச் சாப்பாடு குடுக்கிறது ஆர்? அவளுக்குச் சட்டை போடுறது ஆர்? அவளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புறது ஆர்? சத்தியாவின் கன்னங்களைத் தட்டி அழும் ஆரணியை ஒரு சிப்பாய் இழுத்து எறிந்தான். திடுக்கிட்டு எழும்பினாள் சத்தியா.
முதலில் அந்தக் கொடுங்கனவைப் பற்றி ஷிவாந்திகாவுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைப்படி பேருந்தில் இருந்தாள் சத்தியா. தூரத்தில் பட்ட மரமொன்றைச் சுற்றிப் பறவைகள் வெருண்டு பறந்தன. மனத்திற்குள் ஏதோ சஞ்சலம் வந்து மறைந்தது. அந்தக் காலை அவளுக்கு உவப்பாயிருக்கவில்லை. நாவல் மரமொன்றில் தனிமையிலொரு குயில் கூவியது.
துமிந்தவின் பிரியாவிடைக்கு முதல் நாள். இராணுவ முகாம் வழமைக்கு மாறாயிருந்தது. எல்லோரும் புத்த விகாரையடியில் குழுமி நின்றனர். அப்போதுதான் பேருந்தால் இறங்கி நடந்த சத்தியா அதிர்ச்சியோடு ஓடினாள். ஷிவாந்திகா, வேப்ப மரமொன்றில் தொங்கியபடியிருந்தாள். அவளின் இறுதி வார்த்தைகள் சத்தியாவுக்குக் கேட்குமாப்போல் இருந்தது. அவள் இவளைப் பார்த்து ஏதோ சொல்ல முயல்வதைப்போலிருந்த அந்த உதட்டின் காயத்திலிருந்து குருதி கசிந்திருந்தது. அவளின் கண்களின் அதிர்ச்சி இவளை உலுக்கியது. ஷிவாந்திகா தன்னுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, துமிந்த இராணுவச் சிப்பாய்களுக்கு அறிவித்தான். அத்துடன் உடலை இன்றே ஷிவாந்திகாவின் சொந்த ஊரான மாத்தறைக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் துமிந்த கூறினான். புத்தர் கண்களை இறுக முடியிருந்தார். அவருக்கு முன்னால், கீறல் விழுந்த உடலோடு ஷிவாந்திகா தொங்கினாள்.
ஷிவாந்திகாவின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டுமாப்போலிருந்தது இவளுக்கு. கண்களில் கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. “எனக்கு அம்மாவும் இல்லை, அக்காவும் இல்லை. உங்கள பாத்தா என்டை அம்மா மாதிரி, அக்கா மாதிரிக் கிடக்குது அக்கே…” இல்லாத ஷிவாந்திகாவுடன் பேசிக்கொண்டாள் அவள். இந்தத் துயரத்தை ஷிராணி எப்படித் தாங்கப் போகிறாள் என்று நினைக்க இவள் ஓவென அழுதாள்.
திரும்பிப் பார்த்த துமிந்தவின் முகம் கோபத்தில் மினுங்கியது.
துமிந்தவின் பிரியாவிடை அமர்க்களமாகத் துவங்கியது. நேற்றொருத்தியைக் கொன்றோம் என்ற குற்ற உணர்வு துமிந்தவின் முகத்தில் இல்லை. அவனும் ஷானக்கவும் ஏதொவொரு புளுகில் இருப்பதை உணர்ந்தாள் இவள். இராணுவச் சிப்பாய்களின் கைப்பேசிகள் முழுவதும் நிகழ்வைப் படம் பிடித்துக் கொண்டிருந்தன. தமிழ் சிவில் இராணுவச் சிப்பாய்கள் இன்றைக்கு வண்ண வண்ண உடைகளில் வந்திருந்தனர். சிலர் துமிந்தவுக்கு மாலைகளைப் போட்டனர். சிலர் அவனுக்குத் தங்கச்சங்கிலிகளைப் போட்டனர். சிலர் அவனுக்கு உணவினை ஊட்டி விட்டனர். சிலர் அவனைக் கட்டிப்பிடித்து அழுதனர். சில தமிழ் ஆண் இராணுவச் சிப்பாய்கள் அவனைத் தூக்கிக்கொண்டனர். துமிந்த சொல்லிக் கொடுத்தபடி எல்லாவற்றையும் செய்தனர். கழுத்து நிறைய மாலைகள். சிங்கள இராணுவச் சிப்பாய்கள் அவனைச் சுற்றிச் சுற்றிப் படம் பிடித்தனர். துமிந்த சிரித்துக்கொண்டு, மிக நல்லவனாய்த் தோற்றம் செய்தபடியிருந்தான்.
துமிந்தவின் பிரியாவிடைக்குப் பரிசாகத் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்யும் கடிதத்தை நீட்டினாள் சத்தியா. துமிந்தவின் முகம் கறுத்தது. கடிதத்தை இழுத்து வாங்கிக் கொண்டான் ஷானக்க. “இனி சோத்துக்கு என்ன பண்றது… பிரபாகரன் கொண்டு வந்து குடுப்பார்..?” அவன் இயலாமையில் சொல்வதைக் கேட்கவும் சத்தியாவின் முகம் சிவந்தது. “நாங்கள் எப்படி வாழ வேணும் எண்டுறதைச் சொல்லித் தான் வளத்தவர்…” சட்டென முகத்தில் அறைந்து சொல்ல வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
திரும்புகையில் அந்த புத்தரைப் பார்த்தாள். அந்தச் சிலையோ சற்றுப் பெரிதாகியிருந்தது. புத்தர் வளர்ந்திருந்தார். சிறிதும் குற்ற உணர்வின்றி புத்தர், மௌனமாக இவளைப் பார்த்தார். நேற்றைய குருதிவாடை இன்னமும் வீசியது. புத்தரின் முன்பாக வைத்தே அவள் பலியிடப்பட்டாள் என்பதை நினைக்க இவளுக்கு புத்தர்மீது கோபம் பெருகியது. புத்தரோ, ஒரு துப்பாக்கியை ஏந்தியபடி இராணுவத் தொப்பி ஒன்றை அணிந்திருந்தார். வெள்ளரச மரத்தின் அசைவு இவளுக்கு மீண்டும் அச்சமூட்டியது. இராணுவக் கொடிகளும் பௌத்தக் கொடிகளும் புத்தர் சிலையைச் சூழ அசைந்தன. நிலம் அச்சத்தோடிருந்தது.
பேருந்தின் பாடல்களில் என்றுமில்லாக் குதூகலம். தினமும் அந்தப் பேருந்தில் வரும் முதியவர் வலம்புரிப் பத்திரிகையை விரித்து, கண்களை மேலும் கீழுமாய் நகர்த்தி வாசித்துக் கொண்டிருந்தார். கழுத்து நிறைய மாலைகளுடன் நிற்கும் துமிந்த வண்ண வண்ண உடைகளுடன் அவனைச் சூழ நிற்கும் மக்களுமாய்ப் புகைப்படங்கள் பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளிவந்திருந்தது. “இது எங்கடை சனங்களில்லை… எல்லாம்…” என்று சொல்ல வேண்டும்போல முணுமுணுத்தது இவள் உதடுகள். இராணுவத்தினரும் தமிழ் மக்களும் ஐக்கியமாகிவிட்டனர் என்றும் இராணுவ அதிகாரி ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிராக மக்கள் கண்ணீர்ப் போராட்டம் நடத்தியதால் போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை என்று இராணுவத் தளபதி சொல்லியிருப்பதாகவும் கண்ணாடியைக் கழற்றிவிட்டு இவளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தார் அந்த முதியவர்.
அன்றைக்கு சூரியனின் ஒளியில் ஒரு மாறுதல் இருப்பதை அவள் உணர்ந்தாள். புல் நுனிகளிலும் புன்னகை அரும்பியிருந்தது. ஆரணி மடியிலிருந்து சத்தியாவின் கன்னங்களைக் கிள்ளிக் கிள்ளிக் கதை பேசிக்கொண்டிருந்தாள். அம்மா, நான் வளர்ந்து டொக்டராகி என்ட அம்மாவுக்கு எல்லாம் வாங்கித் தருவனாம். சத்தியாவின் கன்னங்களைப் பிடித்து அசைத்தாள் ஆரணி. “என்ட அம்மாவுக்கு நான் வடிவான சாரி ஒண்டு வாங்கி வந்தனானே…” ஆரணியின் கன்னங்களைத் தடவியபடி சத்தியாவின் தோள்களில் சாய்ந்தாள் ஷிராணி. இரண்டு குழந்தைகளின் சொற்களிலும் தன்னை மறந்துகொண்டிருந்தாள் சத்தியா.
தீபச்செல்வன். நன்றி – ஆனந்த விகடன்