ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைத் தெரிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் அவரைப் பொதுவேட்பாளராகக் களமிறக்கவும், அதற்கு முன்னர் அவரைப் பிரதமர் பதவியில் நியமிப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு விருப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 3ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் சஜித் பிரேமதாஸ ஒரு முடிவை எடுக்க வேண்டும் என மைத்திரி தரப்பு தகவல் அனுப்பியுள்ளது.
வேட்பாளர் நியமனத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முட்டுக்கட்டைகளை இட்டு வருவதால் கட்சியில் இருந்து வெளியேறி பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு சஜித்துக்கு ஆலோசனை கூறப்பட்டாலும் அவர் ஐ.தே.கவிலிருந்து வெளியேறும் முடிவை இதுவரை எடுக்கவில்லை.
அதேசமயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டுக்கு முன்னர் சஜித்தின் முடிவைப் பெறுவதில் தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை அறிவிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரி ஆலோசனை நடத்தி வருகின்றார் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு தமது கட்சி ஆதரவை வழங்கும் என்ற அறிவிப்பை அன்றைய தினம் அவர் வெளியிடலாம் எனவும் அந்தக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்தன என்று ‘தமிழன்’ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.