சுமதி ஸ்ரீ, இளம் வயதிலேயே உலகறிந்த பேச்சாளர். பல நாடுகளுக்கும் சென்று பேச்சுக்களை நிகழ்த்தி வருபவர். மிகவும் வறிய குடும்பச் சூழலில் இருந்து முன்னேறியவர். தன்னம்பிக்கை, ஆன்மீகம், பெண்ணெழுச்சி என இவரது பேச்சாற்றல் பல்வேறு பரப்புக்களிலும் இருந்து வருகின்றன. என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் என்ற நூலை எழுதியவர். அண்மையில் கிளிநொச்சிக்கு இந்து சமய மாநாட்டிற்கு உரையாற்ற வந்த சுமதி ஸ்ரீவை வணக்கம் லண்டன் செய்தியாளர் சந்தித்துப் பெற்ற நேர்காணல் இது.பேச்சுத் துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
என் எட்டு வயதில், நான்காம் வகுப்பு படிக்கும் போது…நான் படித்த திருச்சி ஜூலியானாள் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி எத்திலீன், ஒரு நாள்,என்ன படிச்ச ? சொல்லு பார்ப்போம் என கேட்க…4 ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இருந்த வ.உ.சி.குறித்த கட்டுரையை, திக்காமல் ,திணறாமல்,குரல் ஏற்ற இறக்கத்தோடு சொன்னேன். அவருக்குப் பெரும் ஆச்சர்யம்… அடுத்த நாளே,அதை பள்ளி அசெம்பிளியில் பேச வைத்தார்.அந்த வாரமே ஒரு பேச்சுப் போட்டிக்கு எங்கள் பள்ளி சார்பில் அனுப்பினார், மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்றேன்.
பெண்கள் சத்தம் போட்டு பேசவோ ,சிரிக்கவோ கூடாது என்ற பரம்பரையில்…ஓங்கி ஒலித்த முதல் பெண் குரல் என்னுடையது தான்…என் பேச்சை பலரும் கேட்கிறார்கள், கை தட்டுகிறார்கள் என்பதே …தொடர்ந்து மேடையில் ஆர்வத்தோடு பேசக் காரணம்…எட்டு வயதில் தொடங்கிய என் பேச்சுப் பயணம் இன்று வரை தொடர்கிறது என்பதில் எனக்கு பெரும் மகிழ்வும்,பெருமையும் உண்டு.
நிச்சயம்… பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல், ஸ்பான்சர் வாங்கிப் படித்தவள் நான்.நான் படிப்பதற்கு எத்தனையோ பேர் உதவி செய்திருக்கிறார்கள்.அவர்களை எல்லாம் தேடிப் போய் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்…
ஒரு முறை 3 மாதமாக விடுதிக்குப் பணம் கட்டவில்லை என,விடுதி வார்டன் என்னை வெளியே போக சொல்லி விட்டார்.எங்கு போவதென தெரியவில்லை. அப்போது ஆட்டோகிராப் படம் வெளியாகியிருந்த சமயம்.படம் குறித்த கருத்துகளை, இந்த தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என நாளிதழில் விளம்பரம் வெளியாகி இருந்தது. மிக எளிதாக மனப்பாடம் ஆகியிருந்த அந்த எண்ணுக்கு போன் செய்தேன். இயக்குனர் சேரனே தான் எடுத்தார்.நிலைமை சொல்லி நான் கதறியதும், ஆட்டோகிராப் படம் ஓடுகிற சோனா மீனா தியேட்டருக்கு போக சொன்னார்.
ஆட்டோவில் போக சொல்லி அறிவுறுத்தினார், நான் போவதற்குள்,தியேட்டர் மேனேஜரிடம்,எனக்கு பணம் கொடுக்க சொல்லியிருந்தார்.மேனேஜர் என்னிடம் பணத்தைத் தந்து விட்டு, சார் உங்களை சாப்பிட வச்சு அனுப்ப சொன்னார் என சொன்னதும் அழுதே விட்டேன்.எவ்வளவு நல்ல மனசு அவருக்கு… யார் என்றே தெரியாத ஒரு பெண் அழுகிறாள், ஏதாவது செய்ய வேண்டுமே என என் அழுகுரலை புறக்கணிக்காமல்,உதவி செய்த சேரன் சாரை…ஓரளவு நல்ல நிலைக்கு வந்த பின், சந்தித்து நன்றி சொன்னேன்…அவருக்கு என் வளர்ச்சியைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி…
மிக நெகிழ்வான சந்திப்பாக அது இருந்தது…
இலங்கைக்கு ஏற்கனவே இரண்டு முறை வந்திருப்பதால், இங்குள்ள தமிழர்களின்,அன்பு,விருந்தோம்பலை நன்கு அறிவேன்.கிளிநொச்சியில் ஒரு பொழுது மட்டுமே இருந்தேன்.காலை முதல் மாலை வரை,நிகழ்ச்சி நடந்த மண்டபத்திலேயே இருந்ததால், வெளியில் எங்கும் செல்லவில்லை ஆகையால் கிளிநொச்சியில் கிடைத்த அனுபவம் என குறிப்பிட்டு சொல்ல ஏதுமில்லை…ஆனால், அங்கு நடந்த இந்து சமய மாநாட்டில், குழந்தைகளும்,பெரியவர்களும் பெரும் ஆர்வத்தோடும்,உற்சாகத்தோடும் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. தீபச்செல்வன் கிளிநொச்சியில் இருக்கிறார் என அறிந்து ,அவரை சந்திக்க விரும்பி, தகவல் சொன்னேன்…அவர் அருகில் உள்ள ஒரு பூங்காவிற்கும்,அவர் வீட்டிற்கும் அழைத்துப் போனார்..அவரோடும் நிறைய கதைக்க முடியவில்லை.. அடுத்த கிளிநொச்சி பயணத்தில் நிறைய புதிய அனுபவங்கள் கிடைக்கலாம்…
ஈழம் பற்றி எங்கேனும் பேசியுள்ளீர்களா?
இல்லை என்பதை மிகுந்த நேர்மையோடு ஒப்புக் கொள்கிறேன்.அவர்களுக்காக கண்ணீர் சிந்திய,மனம் பதறிய லட்சக்கணக்கானோரில் ஒருத்தியாக இருந்தேன் என்பதைத் தவிர்த்து…ஏதும் செய்யவில்லை என்பதை நேர்மையோடு ஒப்புக் கொள்கிறேன்.
நேர்காணல் மற்றும் புகைப்படங்கள் வணக்கம் லண்டனுக்காக தீபன்