இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத போதிலும் தேர்தல்களிற்கு முன்னர் சிங்கள பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது வழக்காமாக காணப்படுகின்றது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இந்த முறையும் அவ்வாறான போக்கு காணப்படுகின்றது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிப்பது போன்று- பாதுகாப்பு என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்ககூடிய இரண்டு கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் முன்னாள் போராளியொருவரின் கைதும் மலேசியாவில் இடம்பெற்ற கைதுகளுமே அவை. விடுதலைப்புலிகளிற்கு எதிரான போரில் இலங்கை 2009 இல் வெற்றிபெற்றவேளை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டார்.
கோத்தாபய ராஜபக்சவின் சகோதாரர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டு வெற்றிபெறாத கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்த விடயத்திற்கே அவர் முக்கியத்துவம் வழங்க முற்பட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இலங்கைக்கு எதிராக சதி செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சில தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். தமிழர்கள் அதிகமாக வாழும் நகரில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் புதைத்த நிலக்கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படாததால் அப்பகுதியில் கண்ணிவெடிகள் மீட்கப்படுவது வழமையாக உள்ளது.
வடக்கின பெரும்பாலான பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள்; அகற்றப்பட்டுள்ள போதிலும் வடக்கில் நிலக்கண்ணிவெடிகள் குறித்து அரசாங்கத்திடம் முழுமையான தகவல்கள் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் இடம்பெற்ற கைதுகளை பொறுத்தவரை பயங்கரவாத நிதி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டவேளையே இது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.மலேசிய பிரதமர் மகாதீர் முகமட் இந்த கைதுகளையும் மலேசிய அரசாங்கம் மிகவும் கடுமையான விசேட பாதுகாப்பு சட்டங்களை பயன்படுத்துவதையும் நியாயப்படுத்தியுள்ளார்.
பொலிஸார் எனக்கு விடயங்களை தெரிவித்துள்ளனர் அவர்கள் கைதுகளை மேற்கொள்வதற்கான காரணங்கள் உள்ளன,நான் அவர்கள் தெரிவித்த காரணங்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இரண்டு அரசியல்வாதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடவேண்டிய விடயம்.
இந்த செய்திகள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தாபயவை விட வேறு எவருக்கும் அதிகமாக உதவப்போவதில்லை. அவரரே தேர்தலில் முன்னிலையில் நிற்கின்றார்.
மலேசியாவில் இடம்பெற்றுள்ள கைதுகள் இலங்கை செய்தித்தாள்களில் முதல்பக்க செய்திகளாக இடம்பெற்றுள்ளன.
விடுதலைப்புலிகளின் புத்துயுர் குறித்தும் மீண்டும் கடந்த காலங்களிற்கு திரும்புவது குறித்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவும் தெரிவித்துவரும் கதைகளை மேலும் முன்னோக்கி நகர்த்தும் விதத்தில் இந்த கைதுகள்; அமைந்துள்ளன.
ஆர்கே ராதகிருஸ்ணன், புரொன்ட் லைன். தமிழில் – ரஜீபன்