ஈழத்தின் இளம் எழுத்தாளர் கனகபாரதி செந்தூரன் எழுதிய மனப்பாரம் சிறுகதை நூல் வெளியீடு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.12.2019) சிறப்பாக இடம்பெற்றது.
கிளிநொச்சி கண்ணகைநகர் இந்து வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கனகபாரதி செந்தூரன் கொட்டகல ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் கல்வியை பயின்று வருகிறார். கிளிநொச்சி பரந்தனை பூர்வீகமாகக் கொண்ட இவர் கனகரத்தினம் செந்தூரன் என்ற இயற்பெயரை கொண்டவர்.
இவர் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுதியே மனப்பாரம். இந் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறிதரனும் சிறப்பு விருந்தினர்களாக கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ அருணாசலம் வேழமாலிகிதனும் மாசார் அ.த.க பாடசாலையின் அதிபர் திரு க.கருணானந்தனும் கலந்து கொண்டனர்.
“தாமரைச்செல்வி போன்ற ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளிகள் உருவாகிய பரந்தன் மண்ணிலிருந்து இளைய எழுத்தாளனாக செந்தூரனின் இலக்கிய வருகை எனக்கு பெரிதும் உவப்பு அளிக்கின்றது. இவர் தமிழ் தேசிய தடத்தில் இவர் சிறப்பாக பயணித்து வருபவர்..”
-பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
“சுந்தரலிங்கம் லோகேஸ்வரன், தீபச்செல்வன், செந்தூரன் முதலிய தமிழ் ஆசிரியர்கள், பெரும் தலைமுறை இடைவெளியின் பின்னர் கிளிநொச்சி மண்ணை வளப்படுத்தும் புதிய தலைமுறையாக தோற்றம் பெற்றுள்ளனர்..”
கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன்
கிளிநொச்சி கல்வி வலய தொழில் வழிகாட்டல் அதிகாரி பிரேமா மதுரநாயகம், துணுக்காய் வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் மற்றும் கவிஞர் தீபச்செல்வன் ஆகியோர் நூல் மற்றும் ஆசிரியர் குறித்து விதப்புரைகளை ஆற்றியிருந்தனர்.
“நிஜங்களை கற்பனையாக்கும் யுகத்திற்கு மீண்டும் வந்திருக்கிறோம். இப்போது எங்களுக்கு புனைவுகள் மிகவும் பொருத்தமான இலக்கிய வடிவம். மொழியினில் எங்கள் தேசத்தை சுமப்போம். மொழியினில் எங்கள் கனவுகளை சுமப்போம். எழுத்துக்களால் போராடுவோம்…”
-கவிஞர் தீபச்செல்வன்
நூலினை திரு க.கருணானந்தன் வெளியிட்டு வைக்க பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பெற்றுக்கொண்டார். நூல் மதிப்பீட்டு உரையினை பிரதிக் கல்விப் பணிப்பாளர் மடுவலய திரு ஆனந்தன் லோகேஸ்வரன் நிகழ்த்த கதாசிரியர் ஏற்புரையை நிகழ்த்தினார்.
இளம் எழுத்தாளர் ஒருவரின் முதல் நூல் வெளியீட்டுக்கு அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவினை நல்கியமை சிறப்பம்சமாகும். கிளிநொச்சியை சேர்ந்த பல்வேறு பிரமுகர்களும் இளைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் அரங்கு நிறைந்திருந்தமை மற்றொரு அம்சமாகும்.
-வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்