இளம் பருவத்தில், குழந்தைத் திருமணத்தின் சாட்சியாகி, மனம் தளராமல் தன் தன்னம்பிக்கையால் தற்போது ஒரு மாநகரத்தையே பாதுகாத்து வருகிறார் அம்பிகா ஐ.பி.எஸ்.
N அம்பிகா. வடக்கு மும்பையின் தற்போதைய துணை காவல்துறை ஆணையர். இவரது இளமை பருவம் என்னவோ அவ்வளவு பரீட்சயமானதாக இல்லையென்றாலும் தற்போது ஒரு நகரத்தின் காவலராக வலம் வருகிறார். சத்தமில்லாமல் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னுதாரமாக வலம் வருகிறார். யார் இவர்? இவரது கதை என்ன?
பெண் குழந்தைகளாக பிறந்துவிட்டாலே பருவமடைந்த உடனேயே திருமணத்தை செய்து வைப்பதிலேயே பெற்றோர்களும், சுற்றத்தாரும் விரும்புவதிலும் முனைப்புடன் இருப்பதிலும் வழக்கமான ஒன்று. அதுதான் அம்பிகாவுக்கும் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கும், 14 வயதே ஆன அம்பிகாவுக்கும் திருமணம் நடந்தது. உண்மையில் அது குழந்தைத் திருமணம்! 14 வயது சிறுமியாக இருந்தாலும், மணவாழ்வில் அங்கமாகிய அம்பிகாவுக்கு 18வது வயதில் 2 பெண் குழந்தைகள்.
அம்பிகாவின் கணவர் காவல்துறையில் காண்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்ததால், காவலர்களுக்கான அணிவகுப்பு நிகழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட முதல் தர பட்டத்தை அம்பிகாவிடம் பகிர்ந்துகொண்டதை அடுத்து அவருக்கும் காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
இருப்பினும், அம்பிகாவோ வெறும் 10ம் வகுப்பு மட்டுமே படித்திருந்ததால் சற்று மனம் தளர்ந்து காணப்பட்டார். இதனையறிந்த அவரது கணவர் அம்பிகாவின் கனவுக்கு நினைவாக்கும் வகையில், அம்பிகாவை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்ததுள்ளார்.
பின்னர், ஐ.பி.எஸ். பயிற்சிக்காக சென்னைக்கு சென்று படிப்பதாக கேட்ட அம்பிகாவுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அம்பிகாவின் கணவர்.
மூன்று முறை ஐ.பி.எஸ். தேர்வில் அம்பிகா தோல்வியை தழுவியதால் அவரது கணவர் வீட்டிற்கு வரச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார். அவர் சொல்லும் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட பின்னர், மேலும் 1 ஆண்டு மட்டும் அவகாசம் கொடுங்கள் என்றும் அப்படியும் தேர்வாகாவிடில் ஆசிரியராகவாவது பணிபுரிந்து கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.
4வது முறை மேற்கொண்ட முயற்சியில் அம்பிகாவுக்கு ஐ.பி.எஸ். நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. 2008ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றியை பெற்ற பின்னர் பயிற்சிக்கு உட்பட்ட பிறகு வடக்கு மும்பை மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது சிறந்த போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து நாட்டுக்கும் வீட்டுகும் பெருமை சேர்த்து வருகிறார் அம்பிகா.
குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சமூகத்தையும், பெற்றோரையும் குறை கூறாமல் தன்னுடைய இலக்கை அடைவதற்கு அயராது உழைத்திருக்கிறார் அம்பிகா காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற அவரது நம்பிக்கையை தளர விடாமல் இருந்ததால் இன்று ஐ.பி.எஸ் ஆகியுள்ளார்.
குழந்தை பருவத்தில் திருமணம் செய்திருந்தாலும், அதையே நினைத்து வருந்தாமல், எவ்வித மனக் குமுறல்களும் இல்லாமல் தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை இலக்காக கொண்டால் எவராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கும், தற்போது சமூகத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வரும் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் அம்பிகா.