செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை தமிழ் தேசிய கீதம்தான் தமிழீழத்தை உருவாக்குமா? தீபச்செல்வன்

தமிழ் தேசிய கீதம்தான் தமிழீழத்தை உருவாக்குமா? தீபச்செல்வன்

2 minutes read

 தேசிய கீதம்? தமிழீழம்?க்கான பட முடிவுகள்

இலங்கைத்தீவில் தமிழர்கள் தனி ஈழம் கேட்டு போராடுவதற்கு தமிழ்மொழிப் புறக்கணிப்பு முக்கியமான காரணம். 1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் என்ற சட்டம், ஈழத் தமிழ் மக்களை மிகவும் கடுமையாக பாதித்தது. முழு இலங்கைத் தீவையும் சிங்களத் தீவாக்க முயன்றபோதே ஈழ மக்கள் தனி ஈழத்திற்கான போராட்டத்தை துவங்கினார்கள். அன்று சிங்களர்கள் மத்தியில் நிலவிய தனிச் சிங்கள மனநிலை இன்றும் காணப்படுகின்றது என்பதுதான் அதிர்ச்சி.

அண்மையில் இலங்கையில் சுதந்திர தினம் நடந்தது. இதில் தமிழிலில் தேசிய கீதம் பாடக்கூடாது என்று சிங்கள இனவாத அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள். அதற்கு இலங்கையின் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் மறைமுகமான ஆதரவை வழங்கினார்கள். மீண்டும் தனிச் சிங்கள நடைமுறையை கையில் எடுக்கும் இவர்கள் இதன் ஆபத்துக்களை அறியாதவர்களல்ல.

இலங்கை 1948இல் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. 1949இல் நடந்த முதல் சுதந்திர தினத்தில் முதன் முதலில் தமிழில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அன்றைய பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா, தமிழ் தேசிய கீதத்துடன் முதல் சுதந்திரதின நிகழ்வை துவங்கினார் என்பது மிகவும் முக்கியத்துவம் உடைய வரலாறு.

அப்படி முதன் முதலில் தமிழிலில் தேசிய கீதம் இசைக்க என்ன காரணம்? அந்நியரின் வருகைக்கு முன்னர் வெவ்வேறு ராஜ்ஜியங்களாக ஈழம் காணப்பட்டபோதும் பிரித்தானியரை வெளியேற்றுவதில் சிலோனாக தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தார்கள். அத்துடன் இலங்கையின் சுதந்திரத்திலும் ஈழ மக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இன்றைய சிலோனின் முகமாக ஈழத் தமிழ் மக்களே இருந்தார்கள். இதனால்தான் தமிழுக்கு அந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சிங்கள தேசிய கீதத்துடன் தமிழ் தேசிய கீதமும் பயன்பாட்டில் இருந்து வந்தது. தமிழ் மொழியிலான பாடப் புத்தகங்களில் எல்லாம் அன்றிலிருந்து இன்றளவும் தமிழில்தான் தேசிய கீதம் இடம்பெற்றிருக்கிறது.

தனிச்சிங்கள சட்டம், இன உரிமை மறுப்பு, இன அழிப்பு முதலிய காரணங்களுக்காக தனிநாடு கோரி போராடிய தமிழர்கள், சிங்கள தேசிய கீதத்தை மாத்திரமல்ல, தமிழ் மொழிபெயர்ப்பையும் புறக்கணித்தார்கள். அதில் ஈழ மக்களுக்கு துளியளவும் ஈடுபாடு இல்லை.

இந்த நிலையில், கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த மைத்திரிபாலா சிறிசேனா அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாடுகின்ற நடைமுறையை கொண்டுவந்தது. அதற்கு அப்போதே ராஜபக்ச தரப்பினர் எதிர்த்து வந்தனர். இன்றைக்கு அமைச்சராக இருக்கின்ற விமல் வீரவன்ச என்பவர், தமிழில் தேசிய கீதம் படித்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கனவான தமிழீழம் உருவாகிவிடும் என்று கூறியிருக்கிறார். எதற்கெடுத்தாலும் பிரபாகரனின் கனவு நனவாகிவிடும், தமிழீழம் உருவாகிவிடும் என்பதுதான் அமைச்சர் விமலின் பேச்சு.

புதிதாக பதவியேற்ற அதிபர் கோத்தபாயா, வடக்கு கிழக்கில் தமிழுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பேசினார். பொலிஸ் நிலையங்கள் எனப் பெயரிடாமல், காவல் நிலையங்கள் என்று பெயரிட வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் அவரும் தமிழ் தேசிய கீதத்தை ஒழித்தழிப்பதில் மிகவும் அக்கறையுடன் உள்ளார்.

இந்தியாவில் ஒரு தேசிய கீதம், சிங்கப்பூரில் ஒரு தேசிய கீதம் என்கிறார்கள் ராஜபக்சேவினர். இந்தியாவில் வங்கமொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். ஆனால் சிறுபான்மை மொழியான மலாயில்தான் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. அத்துடன் பல நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் உள்ளன.

வரலாறு முழுவதும் தமிழ் மொழியையும் இனத்தையும் புறக்கணித்து, தமிழீழத்திற்கு தள்ளியது சிங்களப் பேரினவாதிகளே. இப்போது தமிழ் தேசிய கீதம் இல்லை என்பதன் மூலம், தமிழர்கள் தமக்கான நாட்டையும் தேசிய கீகத்தையும் உருவாக்குகின்ற நிலைமையைதான் சிங்கள இனவாதிகள் ஏற்படுத்துகின்றனர். இலங்கை சுதந்திர தினம் என்பது சிங்களர்களுக்குத்தான், தமிழர்களுக்கு அது அடிமை  தினம் என்பதையே அன்று தொடக்கம் இன்றுவரை உணர்த்த முற்படுகிறது சிங்கள தேசம்.

நன்றி- குமுதம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More