3
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 2 வருடமாக வர்த்தகப் போர் நடக்கிறது.
சீனாவின் பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்காவின் பொருட்கள் மீது சீனாவும் பரஸ்பரம் பல பில்லியன் டொலர் வரிகளை கூடுதலாக விதித்தனர். அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும்கூட இருதரப்பு வர்த்தக பிரதிநிதிகள் தொடர் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் பலனாக சென்ற வருட இறுதியில் இருநாடுகளுக்கும் இடையே முதற்கட்டமாக வர்த்தக ஒப்பந்தமொன்று கையெழுத்தானது. அதனை தொடர்ந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மீது விதிப்பதாக இருந்த கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்தது.
இதற்கு பிரதிபலனாக சீனாவும் அமெரிக்காவின் பொருட்களின் மீதான கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்தது. ‘எனினும் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை சென்ற மாதம் தொடங்க இருநாடுகளும் முடிவு செய்திருந்தன.
ஆனால் அதற்குள் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியது. இந்த கொடிய வைரஸால் அங்கு இதுவரை 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 75 ஆயிரம் பேருக்கு மேல் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சீனா முழுவதிலுமுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைத்திய உபகரணங்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டுமென சீனாவிலுள்ள நிறுவனங்கள் சீனா அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு சீன அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வைத்திய உபகரணங்களுக்கு சீனா வரிச் சலுகையை அறிவித்துள்ளது.
இந்த வரிச் சலுகை அடுத்த மாதம் 2ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும், குறிப்பிட்ட காலம் வரை அமுலில் இருக்கும் என்றும் சீன வரிவிதிப்பு ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிக்கும் கருவிகள், ரத்தமாற்றம் செய்யும் கருவிகள் மற்றும் ரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி உட்பட மொத்தம் 696 பொருளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வைத்திய உபகரணம் மட்டுமின்றி பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சோயாபீன்ஸ், கோதுமை, சோளம் ஆகிய உணவு பொருட்களும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, டீசல் மற்றும் பிற எரிபொருள் எண்ணெய்களும் வரிச் சலுகைப் பட்டியலில் அடங்கியுள்ளது.