கிழக்கு மாகாணத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் முயற்சியில் கருணா, வியாழேந்திரன், ஆனந்த சங்கரி ஆகிய தரப்புக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தமிழர் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக மட்டக்களப்பிலிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.கிழக்கு தமிழர் ஒன்றிய அலுவலகத்தில் குறித்த தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்குத் தமிழர் கட்சி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் கிழக்கு தமிழர் ஒன்றியம் என்பன குறித்த கூட்டணியில் அங்கம் பெறுகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள குறித்த கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதனிடையே அண்மையில் அங்குராட்பணம் செய்யப்பட்ட கிழக்கு தமிழர் ஒன்றியம் குறித்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தது.
இந்த அணியுடன் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புகள் கட்சியினையும் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த கட்சியின் படகு சின்னத்தை தேர்தலுக்கு பயன்படுத்த குறித்த கட்சித் தரப்பு வலியுறுத்தியதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.