செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை டெல்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்

டெல்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்

3 minutes read

*டெல்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்!*
*குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்காதே!*
*நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே!*

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய முப்பேரழிவுகளை எதிர்த்து அறவழியில் போராடுகிறவர்கள் மீது மத்திய அரசும் அதன் ஆதரவாளர்களும் நாடெங்கிலும் நடத்திவரும் கொடூர வன்முறைகளின் உச்சத்தை வடகிழக்கு டெல்லியில் நிகழ்த்தியுள்ளனர். மாற்றுக்கருத்தை தெரிவிக்க மக்களுக்குள்ள உரிமையை மறுக்கும்விதமாக நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை தமுஎகச கண்டிக்கிறது. சமூக அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் குலைப்பதற்காக கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த வன்முறைக்கு 35 உயிர்கள் பலியாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்கள். இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இஸ்லாமியர்களின் வீடுகளும் வாழ்வாதரங்களும் வழிபாட்டுத்தலங்களும் சூறையாடப்பட்டுள்ளன. இந்து மற்றும் சீக்கிய குடும்பங்கள் பல மதவேறுபாடுகளைக் கடந்து இஸ்லாமியர்களை பாதுகாக்க முன்வந்திருக்காவிடில் உயிரிழப்பும் சேதாரமும் கூடுதலாகியிருக்கும். ஊடகவியலாளர்கள் தங்கள் பணியை சுதந்திரமாக செய்யவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி வன்முறைக்கான பட முடிவுகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூடியவர்கள், பேசியவர்கள், கவிதை எழுதியவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், செய்தியாளர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் மீது பொய்வழக்குகளைப் புனைந்துள்ள காவல்துறையினர் டெல்லி கலவரத்தைத் தூண்டிய- ஈடுபட்ட ஒருவர் மீது கூட வழக்கு தொடுக்கவில்லை. இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனைவரும், அவர்களது தூண்டுதலால் கொலை கொள்ளை வழிபாட்டுத்தலங்கள் அவமதிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குடிமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதுடன் சட்டம் ஒழுங்கையும் பொதுஅமைதியையும் நிலைநாட்டவேண்டிய காவல்துறையினர் இந்த கடமையிலிருந்து வழுவியதோடு பல இடங்களில் சங்பரிவார் கலவரக்காரர்களோடு இணைந்து இஸ்லாமியர்கள்மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நெறிமுறைகளுக்கும் நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கும் புறம்பாக சங்பரிவார கும்பலின் அடியாள்படை போல செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாகவும் குற்றவியல் சட்டங்களின் படியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

டெல்லி வன்முறைக்கான பட முடிவுகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் பாதிப்பை உருவாக்கிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியாகவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் விதமாகவும் டெல்லி உயர் நீதிமன்றம் அடுத்தடுத்து மேற்கொண்ட வலுவான தலையீட்டிற்குப் பிறகே டெல்லியில் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வரத்தொடங்கியிருக்கிறது. அத்தகைய தலையீட்டை மேற்கஒடுக்காதே அரசியல் சாசனம் வழங்கியுள்ள பொறுப்புகளை உணர்ந்து நிறைவேற்றும்படியாக ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்திய டெல்லி உயர்நீதிமன்ற ஆயத்தின் நீதிபதிகளில் ஒருவரை அடுத்த 24 மணிநேரத்திற்குள் அரசு இடமாறுதல் செய்துள்ளது. நீதித்துறையின் சுயேச்சைத்தன்மையை முடக்குவதற்கு மேற்கொண்டுள்ள இந்த இழிமுயற்சியை அரசு கைவிடவேண்டும். இந்த வழக்கு முழுமையாக எவ்வித குறுக்கீடுமின்றி விசாரித்து முடிக்கப்படும் வரை அவர் இடமாற்றம் செய்யப்படக்கூடாது என்று நாடெங்கும் எழுந்துள்ள கோரிக்கையுடன் தமுஎகச இணைகிறது.

டெல்லி வன்முறைக்கான பட முடிவுகள்

குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்த இப்போராட்டத்தை மதரீதியான மோதலாக சித்தரித்து அதை ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்க ஆளுங்கட்சி உள்ளிட்ட சங் பரிவாரத்தினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளை கண்டிப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதும் அவசியம்தான் என்றாலும் இத்தகைய வன்முறைகள் நிகழும் முன்பே தடுப்பதற்கான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கவேண்டியுள்ளது. வன்முறைகளாலும் அச்சுறுத்தல்களாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை பின்வாங்கச் செய்யமுடியாது என்ற எச்சரிக்கையை நாட்டின் கூட்டுக்குரலாக ஒலிக்கச் செய்திட, இந்தச் சட்டத்தால் தங்களுக்கு பாதிப்பில்லை என்கிற கற்பிதத்திலும் மெத்தனத்திலும் இருப்பவர்களையும் அணிதிரட்டுவதற்கு தன்னாலான பணிகளை தமுஎகச தீவிரமாக முன்னெடுக்கும்.

தோழமையுடன்…
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு) – ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More