செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை ‘நவீன வாழ்க்கைமுறை வேண்டாம்’ மலை காடுகளுக்கு மத்தியில் ஒரு குடும்பம்: ஆச்சர்யம் தரும் வாழ்க்கை

‘நவீன வாழ்க்கைமுறை வேண்டாம்’ மலை காடுகளுக்கு மத்தியில் ஒரு குடும்பம்: ஆச்சர்யம் தரும் வாழ்க்கை

5 minutes read

Banner
‘காட்டு வாழ்வு’ – ஒரு குடும்பத்தின் ஆச்சர்யமூட்டும் வாழ்க்கை

கல்வி என்பது பாடப் புத்தகத்தில் இல்லை; அது தீர்வைக் காண்பதில் இருக்கிறது என்கிறார் கெளதம் சாரங்.

பள்ளிக்கு செல்லவில்லை, பட்டமும் வாங்கவில்லை. ஆனால் அந்த மனிதரால் ஆறு மொழிகளை சரளமாகப் பேச முடியும், வெப் டெவலப் செய்ய முடியும். இயற்கைக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்காத வீடுகளைக் கட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

நம்பத் தயக்கமாக இருந்தால் நீங்கள் கெளதம் சாரங்கை சந்திக்க வேண்டும்.

அரசு பணியைவிட்டு காடு புகுதல்

கெளதமின் பெற்றோர் கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி அரசுப் பள்ளி ஆசிரியர்கள். அட்டப்பாடியில் அரசு பள்ளியில் பணியாற்றி கொண்டிருந்தபோது, பாடப் புத்தக்கத்தில் உள்ள கல்விக்கும், நிஜ வாழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பதை உணர்கிறார்கள்.

மேலும், இந்தக் கல்விமுறையானது நுகர்வை மட்டும் கற்பிப்பதை பார்க்கிறார்கள். நிஜ வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லாத, அதற்கான நம்பிக்கை வழங்காத கல்விமுறைக்கு மாற்று தேவை என்று தாங்கள் பார்த்த அரசுப் பணியை விட்டு கேரள மாநிலம் அட்டப்பாடி கூலிக்கடவு அருகே அமைந்துள்ள இந்தக் காட்டுப் பகுதியில் தொண்ணூறுகளில் குடியேறுகிறார்கள்.

காடு... வீடு.. ஒரு வாழ்வு -கெளதம் சாரங்
Image captionகெளதம் சாரங்

கெளதம், “அப்போது எனக்கு சிறு வயது. இந்த அட்டப்பாடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும், மண் அரிப்பும்தான் பிரச்சனை என்பதை உணர்ந்த அவர்கள். இதற்கொரு தீர்வை தேடினார்கள்,” என்கிறார்.

அந்த சமயத்தில் அவர்கள் உருவாக்கிய சிறிய குளத்தை அழைத்துச் சென்று காட்டுகிறார்.

மாற்றம் நம்மிடமிருந்து

மாற்றம் எனப்படுவது யாதெனில் அது நம்மிடமிருந்து தொடங்குவது என்பதில் மிகத் தெளிவாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்.

“கல்வி என்பது இவைதானே? இங்கு இந்த சூழலில் நாம் வாழ்கிறோம். இந்த சூழல் பாதுகாக்கப்பட்டால்தான் நமக்கு எதிர்காலம் என்றால் அதுகுறித்துதானே சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான வெளிதானே பள்ளி. இப்போது அப்படியாகவா உள்ளது?” என்கிறார் கெளதம்.

கெளதம் சாரங் Gautham Sarang

மேலும், “கற்றல் என்பது தொடர் நிகழ்வு. அது ஏதோ நான்கு சுவர்களில் மட்டும் நிகழ்வது அல்ல.” என்கிறார்.

கெளதமும் தம் மூன்று பிள்ளைகளையும் பள்ளி கூடத்திற்கு அனுப்பவில்லை. அவர்களை அவர்கள் சூழலில் விட்டு இவரே கற்பிக்கிறார்.

ஆறு மொழி, வெப் டெவலப்மெண்ட் மற்றும் வீடு

கெளதம் தங்கி இருக்கும் வீடு அவரே வடிவமைத்துக் கட்டியது. சூழலுக்கு எந்த ஊறும் விளைவிக்காத வகையில் மூங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது அந்த வீடு.

கெளதம்

“வீடு என் அடிப்படைத் தேவை. அந்தத் தேவை என்னைத் தேட வைத்தது. கற்க வைத்தது. அந்த கற்றலின் விளைவுதான் இந்த வீடு. இதைதான் நான் கல்வியென நான் நம்புகிறேன். இப்படியாகதான் நான் மொழிகளை கற்றேன். வெப் டெவலப்மெண்ட் கற்றேன்” என்கிறார் கெளதம் சாரங்.

பிரசாரம் இல்லை

கெளதம் சாரங் Gautham Sarangபடத்தின் காப்புரிமைM NIYAS AHMED

கல்வி என்பது நுகர்வை மட்டும் கற்று தராமல் மனிதத்தை கற்பிக்க வேண்டும் என்பது கெளதமின் வாதம்.

“அனைத்தும் தவறு. அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு வந்திடுங்கள். பள்ளிக்கு செல்லாதீர்கள். பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பிரசாரம் செய்வது என் நோக்கமல்ல. அடுத்த தலைமுறைக்கும் இந்தப் புவி வேண்டும். அவர்கள் மகிழ்ந்திருக்க வேண்டும். அதற்கு நம் வாழ்வு முறையில் சில மாற்றங்கள் வேண்டும். அதற்கு கல்வி ஒரு கருவி. அந்த கல்விமுறையில் சில மாற்றங்கள் வேண்டும் என்கிறேன். அவ்வளவுதான்.” என்கிறார்.

கூடு திரும்புதல்

கெளதம் மற்றொரு விஷயத்தையும் முன் வைக்கிறார்.

அவர், “இப்போது கிராமத்திற்கு செல்வது ஒரு விதமான ஃபேஷனாக மாறி வருகிறது. அதாவது, நகரத்தில் லட்சங்கள், கோடிகள் என சம்பாதித்துவிட்டு, கிராமம் சென்று விவசாயம் செய்கிறேன். கிராமத்தில் வாழ்கிறேன் என்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான் என்றாலும், இதில் ஒரு பெரும் சிக்கல், இவர்கள் கிராம வாழ்க்கையை சுவீகரித்துக் கொள்வதற்கு பதிலாக, இவர்கள் வாழ்ந்த நுகர்வு மயமான நகர வாழ்க்கையை இவர்களும் எடுத்துச் சென்று கிராமத்தில் நிறுவுகிறார்கள். அதுதான் பெரும் சிக்கல்.”

“இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழ நீங்கள் கிராமத்திற்குதான் செல்ல வேண்டும் என்பது இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே இயன்ற வரை நுகர்வை குறைத்து வாழுங்கள்” என்கிறார்.

மகிழ்ச்சி

காடுகளுக்கு மத்தியில் உள்ள 12 ஏக்கர் நிலத்தில் தனியாக குடும்பத்துடன் வசிக்கிறீர்கள். உண்மையில் மகிழ்ச்சியாக, செளகர்யமாகதான் இருக்கிறீர்களா என்ற நம் கேள்விக்கு, “செளகர்யம் என்ற வார்த்தைக்கு உங்கள் வரையறை என்ன என்று தெரியவில்லை. நல்ல காற்று, குடிநீர், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல். இதுதான் எனக்கு மகிழ்ச்சியும், செளகர்யமும்… எங்கள் அளவில் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் தேவையை நாங்களே பூர்த்தி செய்து வளங்குன்றா வாழ்வு வாழ்கிறோம்,” என்கிறார் கெளதம் சாரங்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More