எங்கள் புலமை மரபின் தனித்துவ ஆளுமை பேராசான் ஆ. சபாரத்தினம்; அவரின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்’ என்று யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன்தெரிவித்துள்ளார்.
மூதறிஞர், சைவசித்தாந்த வித்தகர் ஆ.சபாரத்தினம் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பண்பாட்டு அறிவின் மூலங்களை அறிவார்ந்து ஆழத்தேடி எங்கள் புலமைமரபுக்கு செழுமை சேர்த்தவர் பேராசான் ஆ. சபாரத்தினம் அவர்கள். ஆய்வும் தேடலும் அவர் வாழ்வின் தவமாகவே அமைந்திருந்தது.
முன்னைப்பழமையும் பின்னைப்புதுமையும் அழகாய் இசைந்த அவரின் ஆளுமை தனித்துவமானது.எங்கள் பல்கலைக்கழக மரபுவழி ஆய்வுப்பண்பாட்டு மேம்பாட்டில் அவரின் பங்கும் பணியும் குறிப்பிடத்தக்கது.அவ்வாறே சுவீடன்,உப்சலா பல்கலைக்கழக ஆய்வுப்பணிகளின் வழி வெளிப்பட்ட மானிடவியல் போன்ற நவீன அறிவியல் சார்ந்த அவரது ஞானம் மேலானது.
ஆடம்பரமில்லாத எளிமையான அதேவேளையில் அறிவுத்துணிவும் சமூக உணர்திறனும் மிக்க அவரின் வாழ்வும் பணியும் ஈடிலாதது;என்றென்றும் வழிகாட்டியானது.” இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.