இது தொடர்பில் அவர் தெரிவித்தாதது:-
”புதன்கிழமை 8 மணியிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும். இந்த வாரம் வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், வாரத்தின் இறுதி நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை தினங்களாக உள்ள காரணத்தினாலும் மக்களின் அநாவசிய செயற்பாடுகளைக் குறைக்கும் விதத்திலும் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தின்போதும் இந்த வாரம் கடுமையான சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்க்கப்படும். எனினும், இவ்வாறு தளர்க்கப்படும் ஊரடங்கு காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் கண்டிப்பாக கடைப்பிடக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது அறிவிக்கப்படும்.
குறிப்பாக ஊரடங்கு தளர்வு காலம் குறிப்பிட்ட நேரம் வரையில் வழங்கப்படும். நாள்தோறும் காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்க்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும். எனினும், அதிக முக்கியத்துவம் கொடுத்து அவதானிக்கப்படும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் நிலைமைகளைக் கருத்தில்கொண்டு ஊரடங்குத் தளர்வு காலம் குறைக்கப்படலாம். ஏனைய மாவட்டங்களில் தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தொடர்ந்தும் பின்பற்றப்படும்.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளாந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், அத்தியாவசிய நிறுவனங்கள், விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தளர்வு காலத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வேலைப்பணிகளை ஆரம்பிக்க முடியும். ஆனால், நிறுவனத் தேவைக்கேற்ற ஊழியர்களை மாத்திரம் வரவழைத்துப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றது.