பாடசாலைகளை வாரத்தில் 7 நாட்களும் திறந்து வைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின்போது மூடப்பட்ட காலத்தின் பாடநெறிகளையும் மாணவர்களுக்கு போதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுக்குழுக்களாக நடத்தப்படும் இந்த வகுப்புக்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் வாரத்தில் 7 நாட்களும் சமூகமளிக்க அவசியமில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாரத்தில் நான்கு நாட்களுக்கு சமூகமளித்தால் கூட பாடத்திட்டங்களை நிறைவுச் செய்வது என்ற இறுதி இலக்கை அடைவது எவ்வாறு என்பது தொடர்பாக சிந்திக்கப்படுகிறது.
மாணவர் குழுக்களை பொறுத்தவரை 30 மாணவர்கள் இருந்தால் அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து கற்பிக்கும் முறை குறித்து ஆராயப்படுகிறது.
நாட்டில் 50 மாணவர்களுடன் 1496 பாடசாலைகளும், 100 மாணவர்களுடன் 1560 பாடசாலைகளும், 150 மாணவர்களுடன் 1138 பாடசாலைகளும், 200 மாணவர்களுடன் 977 பாடசாலைகளும், 500 மாணவர்களுடன் 2690 பாடசாலைகளும், 1000 மாணவர்களுடன் 1375 பாடசாலைகளும் இயங்குகின்றன.
எனவே இந்த புதிய முறை பாரிய இலக்காக இருக்காது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
1000 மாணவர்களுக்கு மேல் உள்ள சுமார் 868 பாடசாலைகளை புதிய பொறிமுறையின் கீழ் கொண்டு வருவது இலகுவான காரியமல்ல.
எனினும் 4.5 மில்லியன் மாணவர்கள் மற்றும் 3 லட்சம் ஆசிரியர்களின் சேமநலன் மற்றும் பாதுகாப்பை கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இந்த வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மொத்தம் 10194 பாடசாலைகளையும் திறக்கும் முன்னர் அவை அனைத்தும் கிறுமிநீக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்கீழ் முன்கூட்டியே பொறிமுறை ஒன்றை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.