செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழினப் படுகொலை நினைவு தினத்தை  உணர்வோடு அனுஸ்டிப்போம்! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை 

தமிழினப் படுகொலை நினைவு தினத்தை  உணர்வோடு அனுஸ்டிப்போம்! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை 

2 minutes read

களத்திலும், புலத்திலும், விசேடமாக தமிழகத்திலும் வாழும் தமிழர்கள் அனைவரும் இம்முறை முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவு தினத்தினை தங்கள் இருப்பிடங்களில் இருந்து அனுஸ்டிக்குமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வேண்டுகின்றது. இது தொடர்பாக தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…..

இன்று புலத்திலும், களத்திலும், ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள இந் நிலையில் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11 வது ஆண்டு நினைவு தினத்தினை அனுஸ்டிக்க வேண்டிய தார்மீகக் கடமையில் நாம் அனைவரும் உள்ளோம்.

எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் எம் இனத்தின் விடுதலைக்கான உயரிய போராட்டம் பாரிய எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு சர்வதேசமே வியந்து பார்க்கும் அளவுக்கு பரினாமமடைந்து எமக்கான இறுதி இலக்குகளை எட்டவிருக்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா பேரினவாத அரசினதும் எமது உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தைக் கண்டு வியந்து அஞ்சிய வல்லரசு நாடுகளினதும் துரோகத்தனத்தால் எமது விடுதலைக்கான உரிமைப் போராட்டம் மே-18-2009 அன்று முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான எம் உறவுகளின் உயிர்களை காவு கொண்டு எமது விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்பொழுது 11 ஆண்டுகளை தொடுகின்றது.

எமது விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் போராட்டத்தின்  இறுதி நாட்களிலும் சரி, போராட்டத்தின் பின்னரான காலத்திலும் சரி ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் எம் உறவுகள் படுகொலை செய்யப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டு சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டும், சிறுவர்களை துன்புறுத்தி சுட்டுக் கொன்றும், சரணடைந்த பலர் காணாமல் ஆக்கப்பட்டும், கடத்தப்பட்டும், அரசியல் கைதிகளாக அடைத்தும் தனது உச்ச கட்ட இனவெறியாட்டத்தை ஸ்ரீலங்கா இராணுவம் புரிந்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும் இன்றுவரை சர்வதேச நாடுகள் எமக்கான நீதியை பெற்றுத்தருவதில் காலதாமதம் செய்கின்றார்கள்.

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் உரிமைக்கான தீர்வு எனும் விடயத்தில் இன்றுவரை தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றியே வந்துள்ளார்கள் என்பது அப்பட்டான உண்மை இதுபோக எமது தமிழ் அரசியல் தலைமைகளோ அரசுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலை முற்றாக புறந்தள்ளி ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு இணக்க அரசியலை கையிலேடுத்ததால் தமிழ் மக்களுக்கு பாரியளவில் ஒரு நன்மையும் ஏற்படவில்லை மாறாக சிங்கள அரசுகள் ஆட்சியமைக்க எம் தலைமைகள் முண்டு கொடுத்து அவர்களிடமே சரணாகதி அரசியல் நடத்தியதே உண்மை.

எனவே இந்த அரசியல் கலாசாரங்கள் மாற்றம் பெற வேண்டும் தமிழ் மக்களுக்கான நீதியையும், உரிமைகளையும் பெற்று எமது தமிழர் தாயகப் பகுதியில் நிம்மதியாக, சுயகௌரவத்துடன் வாழ வேண்டும் என்றால் எமது தமிழர் தரப்பு அரசியலில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் அதற்காக எம் தாயக மக்கள் அனைவரும் ஒரு நேர்மையான அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டிய தார்மீக்கடமை எம் அனைவருக்கும் உண்டு.

பாசமிகு எம் உறவுகளே!

 எதிர்வரும் திங்கட்கிழமை 2020-மே-18 அன்று எமது தமிழினப் படுகொலையின் 11 வது நினைவு தினத்தை புலத்திலும், களத்திலும், விசேடமாக தமிழகத்திலும் வாழும் எம் உறவுகள் அனைவரும் உங்கள்  இருப்பிடங்களில் இருந்தவாறு மாலை-06.15  மணிக்கு சுடரெற்றி  படு கொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நினைவு அஞ்சலியை அனுஸ்டிக்குமாறு தார்மீக உணர்வுடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More