கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே தலைப்பில் நினைவுகூர்தல் தொடர்பாக எழுதிவருகிறேன். ஆனால் தாயகத்தில் நினைவு கூர்தல் தொடர்பில் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரிய திருப்திகரமான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. நினைவுகூர்தலை அதன் கோட்பாட்டு அர்த்தத்தில் அதன் ஆழமான பொருளில் விளங்கி முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரியவில்லை.
முதலாவதாக நினைவுகூர்தல் என்றால் என்ன ?
அது தனிய கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்வது மட்டும் அல்ல. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியே நினைவு கூர்தலாகும். 2009 க்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது அதுதான். இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவது.
இந்த ஆழமான விளக்கத்தின் அடிப்படையில் நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்தினால் அதை ஆகக் கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்த வேண்டி இருக்கும். ஏனெனில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான போராட்டம் எனப்படுவது பெருந் திரளுக்குரியது. சிறு திரளுக்குரியது அல்ல. தனிய கட்சிகளுக்கு மட்டும் உரியது அல்ல. ஒரு ஏற்பாட்டு குழுவுக்கு மட்டும் உரியது அல்ல. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அது முழுத் தமிழ் சமூகத்துக்கும் உரியது. இன்னும் ஆழமாகச் சொன்னால் அது பெருந் தமிழ் பரப்பில் உள்ள எல்லாருக்கும் உரியது. தாயகம் தமிழகம் புலம் பெயர்ந்த தமிழ் பரப்பு ஆகிய மூன்றும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய ஒரு போராட்டம் அது.
அது எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் மயப்படுத்த படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்களும் நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தில் திரள் ஆகின்றார்கள். அவ்வளவுக்கு அவ்வளவு அந்தப் போராட்டமும் பலமடையும். அதில் எவ்வளவுக்கு எவ்வளவு தமிழகத்தையும் இந்தியாவில் இருக்கக்கூடிய முற்போக்கு சக்திகளையும் இணைக்க முடிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நீதிக்கான போராட்டமும் புவிசார் அரசியலில் அடுத்தகட்ட திருப்பங்களை அடையும். எவ்வளவுக்கெவ்வளவு அதில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பங்களிப்பு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அனைத்துலக அரங்கிலும் நீதியைப் பெறுவதற்கான போராட்டம் பலமடையும்.
கடந்த பதினோரு ஆண்டுகால நடைமுறை எனப்படுவது அதைத்தான் காட்டுகிறது. உலகம் நடந்தது இனப்படுகொலை என்பதனை இன்று வரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஐநா போன்ற உலகப் பொது அமைப்புகளும் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழக சட்டசபையில் அமரர் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார் .வடமாகாணசபையில் விக்னேஸ்வரன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார் .இவை தவிர கனடாவில் ஒரு உள்ளூராட்சி சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இம்மூன்று தீர்மானங்களும் நடந்தது இனப்படுகொலையே என்று பிரகடனப்படுத்தியுள்ளன.
இம்மூன்று தீர்மானங்களுக்கும் பின்னுள்ள அரசியல் உள்நோக்கங்கள் குறித்துக் கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால் இம்மூன்று தீர்மானங்களும் முக்கியத்துவம் மிக்கவை. முதலாவதாக தமிழக சட்டசபை. பெருந்தமிழ் பரப்பில் உள்ள மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய சட்டசபை அது.எனவே அத்தீர்மானத்துக்கு ஒரு மக்கள் ஆணை உண்டு.. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எனப்படுவது தமிழகத்தின் தீர்மானம். எனவே அதற்கு சட்ட ரீதியான ஒரு வலு இருக்கிற. இது முதலாவது.
இரண்டாவது வடமாகாண சபையின் தீர்மானம். அதுவும் வடமாகாண மக்களின் ஆணையை பெற்ற ஒரு தீர்மானம். மற்றது கனடாவில் ஒரு உள்ளூராட்சி சபையின் தீர்மானம். அதற்கும் மக்கள் ஆணை உண்டு. சிறிய மற்றும் பெரிய சபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களில் நிறைவேற்றப்பட்ட இம் மூன்று தீர்மானங்களும் மூன்று வெவ்வேறு அரசியல் பரப்புகளுக்குரியவை. ஒன்று தாயகம் மற்றது தமிழகம் மூன்றாவது டயஸ்போறா.
இம்மூன்று தீர்மானங்களையும் தொடக்கமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக இதுபோன்ற தீர்மானங்களுக்கு ஆணை வழங்கிய மக்கள் மத்தியில் நினைவு கூர்தலைப் பரவலாக்க வேண்டும். இரண்டாவதாக இனப்படுகொலை என்று நிறுவத் தேவையான சான்றாதாரங்களை விஞ்ஞான பூர்வமாகத் தொகுத்து சட்டபூர்வமாக முன்வைக்கவேண்டும்.
முதலாவதாக நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்த வேண்டும். கடந்த பதினோரு ஆண்டுகளாக நினைவுகூர்தலைப் போதிய அளவுக்கு மக்கள் மயப்படுத்த முடியவில்லை. ஏனெனில் தாயகத்தில் அதற்குரிய பலமான கட்டமைப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை. இப்போதிருக்கும் கட்டமைப்பை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பலப்படுத்த வேண்டும். மிகப் பரந்த தளத்தில் நினைவுகூர்தல் சமூக மயப்படுத்தபட வேண்டும். தாயகத்தில் அதைச் செய்வதுதான் ஒப்பீட்டளவில் கடினமாக இருக்கும். ஏனெனில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு குறைந்த ஓர் அரசியல் சூழல் தாயகத்தில் தான் உண்டு. எனவே நினைவுகூர்தலைப் பரவலாக்கி மக்கள் மயப்படுத்தும் வேலைகளை பொறுத்தவரை தாயகத்தில் பொருத்தமான தரிசனங்களை கொண்டவர்கள் ஏற்பாட்டுக்குழுவைப் பலப்படுத்த வேண்டும்.
தமிழகத்திலோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலோ அதை ஒருங்கிணைப்பது ஒப்பீட்டளவில் இலகுவானது. ஏனெனில் முழுப்பெருந் தமிழ்ப் பரப்பையும் ஒரு புள்ளியில் இணைக்கும் உணர்ச்சிகரமான விடயம் இது. எனவே அதை டயஸ்போராவிலும் தமிழகத்திலும் தமிழர்கள் செறிந்து வாழும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரவலாக்கி மக்கள் மயப்படுத்துவது ஒப்பீட்டளவில் இலகுவானது. எனவே இது விடயத்தில் ஏற்பாட்டு குழுவானது தாயகத்திலிருந்து தொடங்கி தமிழகம் டயஸ்போரா ஆகிய பகுதிகளுக்கும் கிளை பரப்ப வேண்டும்.
இவ்வாறு முழுப் பெருந் தமிழ் பரப்பிலும் நினைவுகூர்தலை உணர்ச்சிகரமாக ஒன்றிணைத்தால் அடுத்த கட்டமாக அறிவுபூர்வமாக சான்றாதாரங்கள் திரட்டுவது இலகுவாகிவிடும். இதுவிடயத்தில் ஏற்கனவே தமிழ் டயஸ்பொறா கடந்த 11 ஆண்டுகளாக உழைத்து வருகிறது. சான்றாதாரங்களை திரட்டி விஞ்ஞான பூர்வமாக தொகுத்து சட்டபூர்வமாக முன்வைப்பது. இது அறிவுபூர்வமான ஒருவேலை. ஆனால் இதற்கு தேவையான ஊக்க சக்தியை நினைவுகூர்தல் வழங்குகிறது. அது எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் கூட்டுக் கோபம் கூட்டு ஆக்க சக்தியாக மாறும்.
இம்முறை நினைவுகூர்தலைப் பொறுத்தவரை கோவிட்-19 ஒரு பெரிய தடையாகக் காணப்பட்டது. எனினும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகங்கள் ஒப்பீட்டளவில் வேர்ச்சுவலாக ஒருங்கிணைந்தன. தாயகத்தைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஏழு சோதனைச் சாவடிகளைக் கடந்து முல்லைத் தீவுக்குப் போக வேண்டி இருந்தது, சோதனைச் சாவடிகளில் கெடுபிடிகள் யுத்த காலங்களில் இருந்தவை போல இறுக்கமாக இருந்தன.
நினைவு கூர்தலுக்கு முதல் நாள் அதாவது 17 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதிகளில் படைத்தரப்பு பொலிசாரும் இணைந்து முச்சக்கர வண்டிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் அடுத்தநாள் மக்கள் ஒன்று கூடுவதற்கு எதிராக அறிவித்திருக்கிறார்கள். அடுத்தநாள் மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நினைவு கூரும் இடத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பெருமளவிற்கு ஒன்று கூற முடிந்தது. நூற்றுக்கும் அதிகமான தொகையினர் ஒன்று கூடியுள்ளார்கள்.
நினைவு கூரும் வேளையிலும் அங்கேயே நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை நினைவு கூரும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்த போலீசார் சனங்கள் சுகாதார ஏற்பாடுகளை பின்பற்றவில்லை என்பதை காரணமாக காட்டி ஒன்று கூடலைக் குழப்ப முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அது விடயத்தில் கோவிட்-19க்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்பாட்டுக் குழு பெருமளவுக்கு பின்பற்றி இருந்ததை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மாஸ்க் அணிந்திருந்தமை ; தனியாள் இடைவெளிகளைப் பேணியமே போன்றவற்றில் கூடியிருந்த மக்களிடம் குற்றம் காண முடியவில்லை. எனவே மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கவும் முடியவில்லை. மேலும் நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம் நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கூடுவதைத் தடுத்த போலீஸ் அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறிய அளவில் கூடுவதை உத்தியோகப் பற்றற்ற விதத்தில் அனுமதித்ததாகவும் கருதலாம்.
அதேசமயம் ஏனைய தமிழ் பகுதிகளில் மக்களை தத்தமது வீடுகளில் விளக்கேற்றி நினைவு கூருமாறு சிவில் அமைப்புகள் கேட்டிருந்தன. மேலும் எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மணிகளை ஒலிக்குமாறும் கோரப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைகள் பெருமெடுப்பில் நிறைவேற்றப்படவில்லை. பொதுமக்கள் துணிந்து முன்வந்து விளக்குகளை வீட்டுக்கு வெளியில் ஏற்றவில்லை.
பொது நிறுவனங்கள் குறிப்பாகக் கட்சிகளே அவ்வாறு விளக்குகளை ஏற்றின. இதுவிடயத்தில் கட்சிகளுக்கும் பொலிசாருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கட்சிகளைப் பொறுத்தவரை தடையை மீறி விளக்குகளை ஏற்றியது ஒரு சாகசம் கலந்த வெற்றியாக கருதப்படுகிறது. ஆம். அது ஒரு துணிச்சலான எதிர்ப்புத்தான். ஆனால் நினைவு கூர்தல் எனப்படுவது கட்சிகளின் சாகசச் செயல் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் அது மக்கள் மயப்பட்ட ஒரு நிகழ்வாகத் திட்டமிடப்பட வேண்டும்.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நிலவிய அசாதாரணச் சூழ்நிலைகள் காரணமாக அவ்வாறு திட்டமிட முடியவில்லை என்று கூறக்கூடும்.ஆனால் இதற்கு முன்னரே 9 ஆண்டுகளாக நினைவு கூர்த்தலை மக்கள் மயப்படுத்த முடியவில்லை என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் மயப்படாத காரணத்தால்தான் அதைக் கட்சிகள் மட்டும் துணிச்சலான சாகசச் செயல்களாக முன்னெடுக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது. மக்கள் மயப்படாத காரணத்தால்தான் ஒரு நோய்த் தொற்றுக் காலத்திலும் அதனை மானசீகமாக அனுஷ்டிக்க முடியவில்லை.
தமிழ் பகுதிகளில் உள்ள ஆலயங்கள் மாணவர் படிக்கம் நேரங்களில் ஒலிபெருக்கிகளை அலறவிட்டு மாணவர்களைக் குழப்புவது உண்டு, அது ஒரு சத்த மாசாக்கம். நொய்ஸ் பொலியூஷன். இவ்வாறு பரீட்சைக் காலங்களில் ஒலிபெருக்கிகளைக் கதறவிடும் பெரும்பாலான ஆலயங்கள் இப்படி ஒரு தருணத்திற்காக ஒரு முடிவெடுத்து ஒரே நேரத்தில் மணிகளை ஒலிக்கத் தவறிவிட்டன. யாழ் சர்வமதப் பேரவை கேட்டுக்கொண்டதற்கிணங்க மிகச்சில ஆலயங்களிலேயே மணியொலி கேட்டது. அது ஒரு கூட்டு ஓசையாக முழு சமூகத்திற்கும் முழு உலகத்துக்கும் ஒரு செய்தியை கூறும் விதத்தில் வலிமையானதாக கேட்கவில்லை. பெரும்பாலான ஆலய நிர்வாகங்கள் மத நிர்வாகங்கள் இதுவிடயத்தில் போதிய அளவிற்கு ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை. இதுதான் இந்த ஆண்டு நினைவு கூர்தல்
அதுமட்டுமல்ல் எப்பொழுது விளக்கேற்ற வேண்டும் எப்பொழுது மணி ஒலிக்க வேண்டும் என்பதில் கட்சிகளுக்கிடையேயும் அமைப்புகளுக்கு இடையேயும் ஒருமித்த தீர்மானம் இருக்கவில்லை. ஒரு கட்சி ஆறு 18க்கு என்று அறிவித்தது. பெரும்பாலான பொது அமைப்புகள் ஏழு மணிக்கு என்று அறிவித்தன. யாழ். சர்வமதப் பேரவை ஆறு 15க்கு என்று அறிவித்தது. கூட்டமைப்பு 8 மணிக்கு மணி ஒலிக்க வேண்டும் என்று அறிவித்தது. தமிழ் மக்கள் பேரவை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையே என்று அறிவித்தது. இப்படித்தான் தமிழ் பொது அமைப்புகளும் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு வழிகாட்டின. இந்த குழப்பம் காரணமாக ஒரே நேரத்தில் மணிகளை ஒலிக்கச் செய்து முழுச் சமூகத்தையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்க முடியவில்லை. இப்படித்தான் இந்த ஆண்டு தாயகத்தில் நினைவுகூர்தல் அனுஷ்டிக்கப்பட்டது. அதாவது மக்கள் மயப்படாத ஒரு நினைவு கூர்தல்.
-நிலாந்தன்