புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் நாடகம் அரங்கேற்றும் ஏ.எம்.சுமந்திரன்:சுரேஸ்பிறேமசந்திரன்

தேர்தல் நாடகம் அரங்கேற்றும் ஏ.எம்.சுமந்திரன்:சுரேஸ்பிறேமசந்திரன்

3 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாதென தெரிவித்துள்ளார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சாரப்பட பல்வேறுபட்ட கருத்துக்கள் ஏ.எம்.சுமந்திரனால் கூறப்பட்டது.

அவருடை கருத்திற்கு அவர் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்து பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.அத்துடன், ஏ.எம்.சுமந்திரன் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைப்பீடத்தில் அழுத்தங்களை கொடுத்திருந்தார்கள்.

தமிழரசு கட்சி மாட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்ற ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் கடும் கண்டனங்களை தெரிவித்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் வந்த ஏ.எம்.சுமந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். அந்த சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்து கொள்வது தொடர்பாக அழுத்தங்களை தான் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். தான் ஒருவன்தான் மட்டும்தான் முன்னாள் போராளிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் கொழும்பு கிளையில் செயலாளராக உள்ள சட்டத்தரணி கே.வி.தவரசா என்பவர் முன்னாள் போராளிகளை இணைப்பதற்கு தான் கோரிக்கை விடுத்ததாக சுமந்திரன் கூறுவது முழுமையான பொய் என்று தெளிவுபட கூறியுள்ளார்.

போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக கூறுவது அப்பட்டமான பொய்!
முன்னாள் போராளிகளை கட்சியில் இணைப்பது என்பது பொதுவான கருத்தாக இருந்தும், ஏ.எம்.சுமந்திரன் தான் மட்டும்தான் அந்த கோரிக்கையை முன்வைத்ததாக சொல்வது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் கே.வி.தவராசா தனது கருத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அதிலும் இவ்விடயத்துடன் தொடர்பற்றவர் போல ஏ.எம்.சுமந்திரன் இருந்திருந்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

போராளிகளை இணைப்பது, இணைக்காமல் விடுவது தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கூட வவுனியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களுடன் ஜனநாயக போராளிகள் கட்சியினர் பேசியதாகவும், அவர்களை இணைப்பது தொடர்பில் தமிழரசு கட்சியிலும், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடனும் பேசி அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் போராளிகள் தொடர்பாகவும், அவர்களை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும், கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் பேச்சாளரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறிவருவதை காணக்கூடியதாக உள்ளது.

தேர்தலுக்காக நாங்கள் எல்லோரும் போராளிகளுக்காக செயற்படுகின்றோம் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிடுபதையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது.

உண்மையாகவும் நேர்மையாகவும் போராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளுகின்றார்களா? இல்லாவிட்டால் தேர்தலுக்காக போராளிகளில் கரிசனை உள்ளது போன்று காட்ட முயற்சிக்கிக்கின்றார்களா? என்பது முக்கியமான கேள்வியாக தற்போது எழுந்துள்ளது.

ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னவர்கள், ஆயுதம் தூக்கி போராடிய போராளிகளை எவ்வாறு கட்சியில் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒரு முரண்பாடானதும், எள்ளி நகையாடக்கூடியதுமான கருத்துக்களாக உள்ளது.

சிங்கள ஊடகவியலாளரிடம் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிவிட்டு, இங்குவந்து போராளிகளை இணைக்கப் போவதாக முரண்பாடான கருத்தை கூறும் ஏ.எம்.சுமந்திரன். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம், ஆகவே தமிழ் மக்கள் எங்களுக்கு இம்முறையும் வாக்களிக்க வேண்டும், நாங்கள் வந்தால் தான் எல்லாவற்றையும் சாதிப்போம் என்று கூறுகின்றார் என சுரேஸ்பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More