செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை கொரோனாவின் விளைவுகள் என்ன? நிலாந்தன்

கொரோனாவின் விளைவுகள் என்ன? நிலாந்தன்

5 minutes read

வைரஸ் தொற்றின் விளைவாக அரசியலில் இரண்டு பிரதான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. இரண்டாவது தேசியவாதத்தின் எழுச்சி. இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. வைரஸ் தொற்று ஐரோப்பாவை உலுப்பிய பொழுது மொஸ்கோவில் நிலைகொண்டிருந்த ஒரு மேற்கத்திய ராஜதந்திரி பின்வருமாறு தெரிவித்தார் “வைரஸ் எதேச்சாதிகாரிகளுக்கு சுவர்க்கம்” என்று. ஏனெனில் வைரசை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு எதேச்சாதிகாரத் தலைவர்கள் தங்களை மேலும் பலப்படுத்திக் கொள்வார்கள் என்ற பொருளில் தான் அவர் அவ்வாறு கூறினார் .

வரலாற்றில் அனர்த்தங்கள் அல்லது இயல்பற்ற காலங்களில் ஒரு சமூகத்தின் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் கெட்டித்தனமாக கையாண்டு எதேச்சாதிகாரிகள்  தங்களைப் பலப்படுத்திக் கொள்வது உண்டு. ஏனெனில் ஒரு பொது அச்சம் மேல் எழும் பொழுது ஏனையவை அதாவது ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவை இரண்டாம் பட்சம் ஆகிவிடும். பசி வந்திட பத்தும் பறப்பது போல உயிர்ப் பீதி வந்துவிட்டால் உயிரைப் எப்படி பாதுகாக்கலாம்? ஏதைப் பலியிட்டுப் பாதுகாக்கலாம்? ; யாரிடம் தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாம்? ; யார் தன்னை பாதுகாக்க கூடியவர்? ; ஒரு பொது எதிரியை இரும்புக்கரம் கொண்டு நசுக்க கூடிய இரும்பு மனிதர் யார்? என்றுதான் பொதுவாகச் சாதாரண ஜனங்கள் சிந்திப்பதுண்டு. இந்த அடிப்படையில் ஒரு உலக பெரும் தொற்று நோய் வேகமாகப் பரவிய பொழுது மக்கள் மத்தியில் ஏற்பட்ட பாதுகாப்பின்மையை வெற்றிகரமாக கையாண்டு மக்கள் மத்தியில் ஏற்பட்ட பயப்  பிராந்தியை வெற்றிகரமாகச் சுரண்டி அரசாங்கங்கள் அதிகாரத்தை மையத்தில் குவித்து கொள்ளும் என்று ஓர் எதிர்பார்ப்பு நிலவியது.

நானும் கூட கொரோன வைரஸ் ராஜபக்ஷக்களுக்கு விழுந்த ஒரு லொத்தர் என்று எழுதி இருக்கிறேன். ஆனால் கடந்த சுமார் ஆறரை மாத கால அனுபவம் நமக்கு கற்றுத் தந்தது எதுவெனில் வைரசை வெற்றி கொள்வதற்கு எதேச்சச்சாரிகளை விடவும் ஜனநாயகத் தலைவர்களே அதிகம் பொருத்தமானவர்கள் என்பதே. கடந்த ஆறரை மாதங்களில் கோவிட் -19 ஐ  வெற்றிகரமாக முறியடித்த நாடுகள் என்று தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் புள்ளிவிபரத்தின்படி பெருமளவுக்கு ஜனநாயக ரீதியாக தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்களே அதில் வெற்றி பெற்றிருக்கக் காணலாம். குறிப்பாக பெண் தலைவிகளைப்  பெற்ற பல நாடுகள் கோவிட் -19 ஐ முன்னுதாரணமாகக் குறிப்பிடுமளவுக்கு வெற்றி கொண்டுள்ளன.

உதாரணமாக தாய்வான். அந்த நாட்டை  சீனா எதிரியாகப் பார்க்கிறது. அந்த நாட்டை சீனா அங்கீகரிக்கவில்லை. எனவே உலக சுகாதார ஸ்தாபனம் தாய்வானை ஒரு சுதந்திர நாடாக  அங்கீகரிக்கக் கூடாது என்று சீனா நிர்ப்பந்திக்கிறது. இதனால் உலக சுகாதார ஸ்தாபனம் தாய்வானில் இயங்குவதில்லை.  எனினும் அந்த நாட்டின் பெண் பிரதமர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒத்துழைப்பு உதவியின்றியே கோவிட் -19 ஐ வெற்றிகரமாக கையாண்டு இருக்கிறார்.

அதுபோலவே  இந்திய சமஸ்ரிக் கட்டமைப்புக்குள்ளும்  கேரளா மாநிலம்   வைரஸை வெற்றிகரமாக முறியடித்தது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் தாக்கிய நிபா வைரஸ் இலிருந்து பெற்ற படிப்பினைகள் காரணமாகவும் கேரளாவை ஆட்சி செய்யும் இடதுசாரி அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் மிக்க பொருத்தமான நடவடிக்கைகள் காரணமாகவும் அம் மாநிலம் விரைவாக வைரஸை முறியடித்தது. இந்தியாவிலேயே வைரஸை விரைவாக முறியடித்த மாநிலமாக கேரளா காணப்படுகிறது.  அங்கேயும் சுகாதார அமைச்சராக இருப்பவர் ஒரு பெண்தான்.

எனவே சீனா வடகொரியா போன்ற மிகச் சில உதாரணங்களை வைத்துக் கொண்டு வைரசை வெற்றி கொள்ள எதேச்சாதிகாரிகள் தேவை என்ற முடிவுக்கு நாங்கள் வரத் தேவையில்லை. தென்கொரியாவில்  வைரஸை வெற்றிகரமாக முறியடித்த அரசாங்கம் மறுபடியும் தேர்தலில் அதுவும் கொரோனாக் காலத்தில் நடந்த ஒரு தேர்தலில் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. வைரஸை எதிர்கொள்வதற்கு தென் கொரியா பின்பற்றிய சில நடவடிக்கைகள் குறிப்பாக  நோய்த் தொற்றுச் சந்தேக நபர்களைப் பின் தொடர்ந்து சென்று கண்டுபிடிப்பதற்கு அந்நாடு அறிமுகப்படுத்திய சில இலத்திரனியல் நடைமுறைகள் ஜனநாயக விரோதமானவை என்று ஒரு விமர்சனம் உண்டு. அந்த நடைமுறைகளை அமெரிக்கா  பின்பற்றவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனினும்  அவ்வாறான பின்தொடரும் தொழில் நுட்பத்தை கையாண்ட காரணத்தால் கோவிட்-19ஐ  பெருமளவுக்கு முறியடித்த பின் தென் கொரியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்று யாரும் கூற முடியுமா? எனவே இங்கு வெற்றியை தீர்மானிப்பது தலைவர்களின் அரசாங்கங்களின் தீர்க்க தரிசனம் மிக்க நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்த செயற்பாடும் தான். மாறாக வைரசை முறியடிப்பதற்கு ஓர் எதேச்சாதிகாரி  தேவையில்லை என்பதே கடந்த ஆறரை மாத கால அனுபவமாகும்.

இதில் உண்மை என்னவென்றால் ஏற்கனவே எதேச்சாதிகாரிகளாக இருந்த அரசியல் தலைவர்கள் வைரஸை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு மத்தியில் அதிகாரத்தை குவித்து விட்டார்கள் என்பதுதான். உதாரணம் ஸ்ரீலங்கா, ரஷ்யா. எனவே வைரஸின் விளைவாக உலகில் எதேச்சாதிகாரத் தலைவர்கள் மேலெழுவார்கள் என்பதோ அல்லது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படும் என்பதோ ஒரு பொதுவான தோற்றப்பாடு அல்ல. ஒரு வைரஸ் தொற்று காலமானது  அதிகாரப் பரவலாக்கத்தைக் கேட்கும்  தரப்புக்களுக்கு சாதகமற்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளது  என்பதே உண்மை.

இரண்டாவது விளைவு தேசியவாதத்தின் எழுச்சி. வைரஸ் தொற்றுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடுகள் தமது தேசிய எல்லைகளை மூடின. ஆனால் தேசிய எல்லைகளை மூடிய எந்த ஒரு நாடும் வெளிநாட்டு உதவிகளை பெறாமல் வைரஸை எதிர் கொள்ளவில்லை. அதாவது தேசிய எல்லைகளை மூடுவது என்பது வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெறாமல் விடுவது அல்ல. எனவே ஒரு நாடு தனது தேசிய எல்லைகளை மூடி தனது தேசிய வளங்களை மட்டும் பயன்படுத்தி வைரஸை எதிர்கொண்டது என்று கூறுவது பொருத்தமானது அல்ல. தேசிய எல்லைகளை மூடுவதால் தேசியவாதம் பலம் பெற்று விட்டதாகவும் அர்த்தமில்லை.

அது போலவே நோயச்சத்துக்கு எதிராக மக்களைத் திரட்டுவதும் தேசியவாதம் அல்ல. ஒரு பேரச்சத்தை காரணமாக வைத்து மக்களை திரளாகக்  கூட்டுவதை தேசியவாதம் என்று அழைக்க முடியாது. அது தேசியவாதம் அல்ல. இன்னும் ஆழமாக சொன்னால் கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதை தேசியவாதம் என்று அழைக்க முடியாது. அச்சத்துக்கு மறு பெயர் தேசியவாதம் அல்ல.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை கேட்க வேண்டும். நாங்கள் தேசியவாதம் என்று எதைக் கருதுகிறோம்?

ஒரு நாடு அதன் தேசிய வளங்களில் மட்டும்  தங்கியிருப்பதையா? ஆல்லது ஒரு பேரச்சத்தை முன்னிறுத்தி மக்களை ஒன்று திரட்டுவதையா? 

நிச்சயமாக இல்லை. தேசியவாதம் எனப்படுவது அதைவிடப் பராந்தகன்ற தளத்தில் ஆழமான பொருளைக் கொண்டது. தேசம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளாகும். தேசியம் எனப்படுவது மக்களை ஒரு பெரிய திரளாகக் கூட்டிக்  கட்டுவது. எந்த அடிப்படையில் மக்களைத் திரட்டுவது? ஒரு வைரஸ் பற்றிய பயத்தின் அடிப்படையிலா ? இல்லை. ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது மக்களை திரளாக்கவேண்டும். ஏனெனில் தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகம் ஆகும்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால். கொரோனாக் காலத்தில் தேசியவாதம் அதன் மெய்யான பொருளில் எழுச்சி பெறவில்லை. மாறாக குருட்டுத் தேசியவாதமே எழுச்சி பெற்றுள்ளது. அது ஒரு கண்ணுக்குத் தெரியாத வைரசுக்கு எதிரான அச்சத்தின் மீது கட்டப்பட்ட திரளாக்கம். வைரசைச் சாட்டாக வைத்து அதிகாரத்தை மையத்தில் குவிக்க விரும்பிய அரசாங்கங்கள் தேசியவாதம் என்ற முகமூடியை எடுத்து அணிந்து கொண்டன என்பதே சரி. தேசிய வாதம் என்பது ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொண்டது. மாறாக மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து மத்தியில் குவித்துக் கொள்வது எதேச்சாதிகாரம் அது தேசிய வாதத்துக்கு எதிரானது.

எனவே வைரஸின் விளைவாக தேசியவாதம் எழுச்சி பெறவில்லை. ஏற்கனவே இருந்த எதேச்சாதிகார அரசாங்கங்கள் வைரஸை சாட்டாக வைத்து அதிகாரத்தை மையத்தில் குவித்துக் கொண்டன ஒரு பொது அச்சத்துக்கு எதிராக மக்களைத் திரட்ட தேசியவாதத்தை ஒரு முகமூடியாக  அணிந்து கொண்டன என்பதே சரியானதாகும்.

அதேசமயம் இப்போக்கானது மெய்யான தேசியவாத சக்திகளுக்கும் மத்தியில் அதிகாரத்தை குவிக்கும் ஒற்றையாட்சி முறைமையை  எதிர்துத் போராடும் சக்திகளுக்கும் நெருக்கடிகளை அதிகப்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை.

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More