அமெரிக்காவில் கொரோனாவின் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பெருந்தொற்றின் பெரும்புள்ளியாக மாறிப்போன அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் 41 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 79 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனால் உயிரிழப்பில் கடந்த மாதங்களில் காணப்பட்டதை பன்மடங்கு குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி 233 பேர் மரணித்ததால் இதுவரை அங்கு கொல்லுயிரியால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை முதலாம் உலகப் போரிலும், வியட்நாம் மற்றும் ஈராக் போர்களில் உயிரிழந்த அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
அமெரிக்காவில் தற்போது வரை அங்கு ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 16 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையிலும் 12 லட்சத்து 85 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சியாட்டில் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 121 மாணவர்களுக்கு பெருந்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஃபுளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகம் என மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு மட்டும் இதுவரை 3 ஆயிரத்து 731 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.