நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 80 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அந்த குழந்தை பிறப்புகளை பதிவு செய்ய முடியவில்லை.
இந்த குழந்தைகளின் பிறப்பு பதிவுகளை நடமாடும் சேவைகள் மற்றும் வேறு இலகுவான முறைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிறப்பு பதிவுகளை மேற்கொள்ளும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் முதல் நான்கு லட்சம் வரையிலான குழந்தைகள் பிறக்கின்றன.
அவற்றில் 99 வீதமான பிரசவங்கள் வைத்தியசாலைகளில் நடக்கின்றன. பிறப்பு பதிவு சட்டத்திற்கு அமைய ஒரு குழந்தை பிறந்து 42 நாட்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.
எனினும் கொரோனா வைரஸ் காரணமாக அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பத்தாட்சி பத்திரத்திற்கான பதிவை மேற்கொள்ள முடியவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பிறப்பத்தாட்சி பத்திரம் மற்றும் மரணங்களை பதிவு செய்யும் சட்டத்தின் 24ஆவது ஷரத்திற்கு கீழ் பிறப்பு குறித்த அறிவிப்பு ஆவணம், பெற்றோரின் பதிவு திருமண சான்றிதழின் பிரதி, பிறப்பத்தாட்சி பத்திரங்களின் பிரதிகள் என்பன போதுமானது என பிறப்பு பதிவுளை மேற்கொள்ளும் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிராம சேவகரின் அறிக்கையும் தேவையில்லை எனவும் திணைக்களம் வழங்கியுள்ள பரிந்துரையில் கூறியுள்ளது.
சாதாரணமாக ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்ய பல்வேறு ஆவணங்கள் தேவைப்படுகின்ற போதிலும் கடந்த மூன்று மாதங்களுக்குள் நடந்த பிறப்புக்களுக்கு அவை தேவையில்லை.