ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் இடங்களை அடையாளங் காண்பதற்கான செயலணியின் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 35 ஆவது சபை அமர்வானது இன்று காலை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியாசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.
அமர்வின் விஸேட அம்சமாக மாநகர சபையின் உறுப்பினராக செயற்பட்ட அமரர் சந்தியாப்பிள்ளை இவேட்டின் சந்திரகுமார் அவர்களுக்கான அஞ்சலியும், அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களால் இரங்கல் உரைகளும் இடம்பெற்றன.
மேலும் கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களையும், பொருட்களையும் முகாமைத்துவம் செய்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் செயற்பாடுகள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் வதியும் பூர்வீகத் தமிழர்களின் நிலங்கள், அடையாளங்கள் அபகரிப்புச் செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் இச் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும் எனக் கோரி மாநகர முதல்வரால் கொண்டு வரப்பட்ட முன்மொழிவானது சபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.