யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த விரிவுரையாளரையே, காட்டு யானை தாக்கியுள்ளது.
இதன்போது, அருகிலுள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அவரை, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விரிவுரையாளர் மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் கொழும்பு களனிய பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த இவரும் மற்றுமொருவரும் வணக்க ஸ்தலத்திற்கு சென்று திரும்புகையிலேயே, யானை இவர்களை துரத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.