ஈழ சினிமாவின் தனித்துவ அடையாளங்களை அழிக்கும் வகையில், இலங்கை அரசின் ஆதரவாளர்கள் சிலர் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலத்தில் ஈழ சினிமா தனித்துவமான முறையில் இயங்கி வருகின்றது. சிறந்த குறும்படங்களும் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இலங்கை சிங்கள சினிமாவுக்கு சவால் விடும் வகையில் தரமான திரைப்படங்கள் உருவாகியுள்ள நிலையில், உலக நாடுகளில் திரையிடப்படும் உலகத் திரைப்படங்களாகவும் வளர்ச்சி பெற்று வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலைத்துறை முன்னெடுத்த ஈழ சினிமாவை அதே இயல்புடன் வளர்ந்து வரும் நிலையில், அதனை முற்றாக திசைமாற்ற சில சதிதிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈழ சினிமா என்பதை இலங்கை தமிழ் சினிமா என்ற அடையாளத்திற்குள் முடக்கி, அதனை இலங்கைக்குள் குறுக்கும் வகையிலே இந்த முயற்சிகள் இடம்பெறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத கலைஞர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக தற்போதைய ஆளும் அரசாங்கத்தின் நேரடி ஆதரவாளர்கள் கலைஞர்களை திசை திருப்ப முயற்சி செய்துள்ளதாகவும் இதில் சில ஈழ இயக்குனர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்திய சினிமாவும் தமிழ்நாட்டு சினிமாவும் புலம்பெயர் மக்கள் வாழும் உலக நாடுகளில் தங்கியுள்ளன. ஈழ சினிமாவுக்கான பெரும் களமாக புலம்பெயர்நாடுகள் உள்ள நிலையில் ஈழக் கலைஞர்களை திசைதிருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிப்பது கால அவசியம் ஆகும்.