கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் ஒட்சிசன் உற்பத்தி செய்யும் மையத்தில் உள்ள பெறுமதிமிக்க கருவிகளுக்குள் மணல் இடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வாரம் வைத்திசாலையின் பிராணவாயு உற்பத்தி மையத்திலுள்ள அதீத விலைமதிப்புள்ள கருவிகளின் உள்ளே சிலரால் மணல் வீசப்பட்டு அம் மையம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வடக்கில் இரண்டே இரண்டு வைத்தியசாலைகளிலேயே இவ்வாறான உற்பத்தி மையம் காணப்படுகிறது
அத்துடன் 2011ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வரும் இம் மையத்திலிருந்தே மாவட்டத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளுக்குமான ஒட்சிசன் வாயு பெற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் குறித்த ஒட்சிசன் வாயு உற்பத்தி கருவிக்குள் மணல் இடப்பட்டு அவை செயலிழக்கச் செய்யப்பட்ட சம்பவம் ஒரு திட்டமிட்டப்பட்ட நடவடிக்கையே சந்தேகம் தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார திணைக்களம் இது தொடர்பில் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.
மேலும் வைத்தியசாலையில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் மின் விநியோகம் தடைப்படுகின்ற போது தானாக இயங்குகின்ற நிலையில் தற்போது இல்லை எனவும் இதுவும் வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆபத்தானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென மின்பிறப்பாக்கியானது செயலிழந்த நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளினால் நிலமை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் அவ்வேளை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நோயாளர்களது உயிர்களும் காப்பாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உரியவகையில் பராமரிப்புத் திருத்தங்களை மேற்கொள்ளாது அசண்டையீனமாக இருந்தமையே இவ்விபத்திற்குக் காரணம் எனப் பின்னர் தெரியவந்துள்ளது.