கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார்.
சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர எழுத்து மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.
அரச கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு ஜனாதிபதியின் இணக்கப்பாடு அவசியம் எனவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் குறித்த நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை விசேட குழுவொன்றின் பரிந்துரைக்கு அமையவே நியமிக்கப்பட்டது.
அதனால் அதில் மாற்றம் ஏற்படுத்தாது அவர்களை தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் அந்த கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சகல அமைச்சிக்களினதும் கடமைகளை ஆரம்பிக்குமாறு புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கூடிய விரைவில் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
புதிய அமைச்சர்கள் நேற்று (12) கண்டி தலதா மாளியின் மகுல்மடுவையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
அதற்கமைய இன்று பெரும்பாலான அமைச்சர்கள் அந்தந்த அமைச்சுக்களில் தத்தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.