ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, நடப்பு சம்பியன் பியான்கா ஆன்ட்ரெஸ்கு விலகியுள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட்-19 ) தொற்று பரவல் அமெரிக்காவில் அதிகமாக இருப்பதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
முன்னதாக கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக, முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி, ஜாம்பவான் ரபேல் நடால் ஆகியோர் விலகியிருந்தனர். தற்போது இந்த பட்டியலில் பியான்கா ஆன்ட்ரெஸ்குவும் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி 19 வயதான கனேடிய வீராங்கனை பியான்கா ஆன்ட்ரெஸ்கு சம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இதன்மூலம் 2000ஆம் ஆண்டுகளில் பிறந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் அடைந்தார்.
நடப்பு ஆண்டுக்கான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் ஒகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரைக் காண இரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.