மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய கட்டுமுறிவு கிராமத்திலுள்ள கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் (ஜீவன்) தமது பாடசாலை மாணவர்கள் ஒரு வார காலமாக பாடசாலைக்கு வரவில்லை என்பதால் வீடு தேடிச் சென்று காரணம் கேட்ட போது முடி வெட்டவில்லை. அதனால் பாடசாலைக்கு வரவில்லை.
அத்தோடு முடி வெட்டுவதானால் 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கதிரவெளி கிராமத்திலுள்ள சலூன் கடைக்குப் போக வேண்டும். அதற்கு வசதியுமில்லை என்று மாணவர்கள் கூறினார்கள்.
பாடசாலை வருவதற்கு தலை முடி ஒரு தடையாக இருக்கக் கூடாதென எண்ணிய நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர் தமது கடமைக்கு அப்பால் முடிவெட்டுபவராக மாறினார். அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் (ஜீவன்) மனித நேயப்பணியினை செய்துள்ளார்.
கல்குடா கல்வி வலயத்திங்குட்பட்ட வாகரை கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது ஆசிரியர் பற்றாக்குறையாக நிலவும் பாடசாலையாகவும், அடிப்படை வசதிகள் குறைந்த பாடசாலையாகவும், வறிய நிலையில் வாழும் மாணவர்கள் கல்வி பயிலும் மிகவும் பின்தங்கிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.