நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பீகாரில் பதிவு செய்யப்பட்ட முதல்கட்ட தகவல் அறிக்கை செல்லும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற்கொலை அல்ல, கொலை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகாரில் அம்மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது.
சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட மகாரஷ்டிராவிலும் அம்மாநில அரசு விசாரணை செய்து வருகிறது. இதில் இரு மாநில அரசுகளுக்கு இடையேயும் மோதல் போக்கு நிலவியது.
இதைத்தொடர்ந்து, ஒரு கட்டத்தில் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைந்தது பீகார் அரசு. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், பீகார் அரசுக்கு பெரும் வெற்றியாக சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.