பாடும் நிலா என இசைப் பிரியர்களால் அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் குணமடைந்து மீண்டுவர வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள இரசிகர்கள் பிரார்த்தனை செய்துவரும் நிலையில் இலங்கையிலும் எஸ்.பி.பி. நலம்பெற பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் கலைஞர்களால் (Srilankan Tamil Artist Foundation) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
இலங்கை கலைஞர்கள் சார்பில் சந்திரசேகர், சுருதி பிரபா, எம்.சிவகுமார், டிலுக்சி, பிரேம் ஆனந்த், ஜெய பிரகாஷ் மற்றும் பல கலைஞர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதன்போது, எஸ்.பி.பாலசுப்ரமணியம் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மீண்டு வரவேண்டும் என பிரார்த்திக்கப்பட்டதுடன் விசேட பூசையும் இடம்பெற்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.