வாஷிங்டன்: “அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்,” என்று ஜோ பிடென் அறிவித்துள்ளார். உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 2 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்து 461 பேர் வைரசால் பாதித்துள்ளனர். 3 லட்சத்து 92 ஆயிரத்து 106 பேர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே, கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். அவர் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டெலாவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் நகரில் பிடென் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவில் தடுப்பூசி போடும் திட்டம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனை சரிகட்டும் நடவடிக்கைகளை எனது தலைமையிலான நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.
முதல் கட்டமாக, ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் முன்களப் பணியாளர்கள் உள்பட 10 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது.
யாருக்கு அது தேவையோ, அவர்களுக்கு அவை கிடைக்கவில்லை. எனது அரசு பதவியேற்றதும் நூற்றுக்கணக்கான சமூக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும். அதேபோல், நாடு முழுவதும் மருந்து கடைகளிலும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
டிரம்ப்பின் கடைசி மரண தண்டனை
தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக் காலம் இன்னும் 3 நாட்களில் முடிகிறது. புதிய அதிபராக பதவியேற்க உள்ள பிடென், மரண தண்டனை நடைமுறையை ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், டிரம்ப் ஆட்சியின் கடைசி மற்றும் 13வது மரண தண்டனை நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
இண்டியானாவில் உள்ள டெரே ஹுட் சிறையில், 1996ல் மேரிலேண்டில் 3 பெண்களை கொன்ற வழக்கின் குற்றவாளியான டஸ்டின் ஹிக்ஸ்சுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 56 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு, டிரம்ப் ஆட்சியில் அதிக அளவாக 13 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.