பேங்கொக் நகரில் நடைபெற்று வந்த டோயோட்டா தாய்லாந்து பகிரங்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில், கரோலினா மரின் மற்றும் விக்டர் ஆக்சல்சென் ஆகியோர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஒலிம்பிக் சம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரின், உலகின் முதல்நிலை வீராங்கனையான சீனதைபேயின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கரோலினா மரின், 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
முன்னதாக கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து பகிரங்க தொடரிலும், இதே தாய் ஜூ யிங்கை வீழ்த்தி தான் கரோலினா மகுடம் சூடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக மகுடத்திற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென், சக நாட்டவரான ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்குடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், விக்டர் ஆக்சல்சென் 21-11, 21-7 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.