புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வடிவேலு பேட்டி – ”பிரண்ட்ஸ் படத்தில் எனக்கு பிடித்த வசனம் இதுதான்”

வடிவேலு பேட்டி – ”பிரண்ட்ஸ் படத்தில் எனக்கு பிடித்த வசனம் இதுதான்”

9 minutes read

நடிகர் வடிவேலு

#Pray_for_Nesamani என்ற ஹாஷ்டக் ஒரே நாளில் சர்வதேச அளவில் பிரசித்தம் ஆனது. சமூக வலைதளங்களில் அதுவே பேசுபொருளாகவும் மாறியது. இந்நிலையில் 18 வருடங்களுக்கு முன் வந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் தற்போது வரவேற்பு பெற்றிருப்பது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் வைகைப் புயல் வடிவேலு. பிபிசி செய்திச் சேவைக்கு அவர் அளித்துள்ள நேர்காணலை வணக்கம் லண்டன் நன்றியுடன் பிரசுரிக்கிறது. 

கேள்வி: #Pray_for_Nesamani என்கிற ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பெரும் வியப்பா இருக்கு! ஆச்சர்யமா இருக்கு! அதிசயமா இருக்கு! எத்தனையோ படத்தில் நடிச்சிருக்கேன். ஆனா, இந்த ஒரு படத்துல வர்ர ஒரு சீன்-ல சுத்தியல் வைச்சு நடிச்சதுல இதெல்லாம் நடந்திருக்கு. அந்த கதாபாத்திரத்துக்கு நேசமணின்னு பெயரு.

இப்போ வடிவேல் என்கிற பெயர் போய், நேசமணி வடிவேல் அப்படீன்னு ஆகிபோச்சு. பிரெண்ட்ஸ் படத்தின் ஒரு காட்சி இந்த அளவுக்கு உலகம் முழுவதும் சென்றடைந்திருக்கிறது என்பதை அறிகிறபோது ஆச்சர்யமா இருக்கு.

இந்த படத்தின் இயக்குநர் சித்திக் சாருக்குதான் இது பெருமை. இதனை ரசித்த மக்கள் எல்லாருக்கும் தலைவணக்குகிறேன்.

உலகம் முழுவதும் சென்றடைந்திருப்பதை அறிந்து சந்தோசமாயிருக்கு.

வடிவேலு

கேள்வி: பிரெண்ட்ஸ் படப்பிடிப்பின்போது, காமெடி காட்சிகளை எடுக்கிறபோது, உங்களை பார்த்து நடிகர் விஜய் சிரித்து, ரசித்து கொண்டிருந்தது உண்மையா?

பதில்: உண்மைதான். கடிகாரம் உடைவதற்கு முந்தைய காட்சியை நடிக்கும்போது பயங்கரமாக சிரித்துவிட்டார். அடுத்து ஆணி புடுங்க செல்லும் காட்சியில் அதிகமாக சிரித்து அவரால் நடிக்க முடியாத அளவுக்கு இருந்தார்.

நடிகர் சூர்யா சுவரை மெல்ல சுரண்டுவார். அப்போ சூர்யாவை திட்டுவேன். “மெல்லடா, மெல்ல, சுவருக்கு வலிச்சிர போகுது. வேகமா தேய்டா பரதேசி” அப்படீன்னு நான் கத்துவேன்.

நேசமணி ட்ரெண்டிங் பற்றி பிபிசி தமிழுடன் பேசினார் நடிகர் வடிவேலு – காணொளி

அப்படி சொன்னவுடனே அவர் சிரித்துவிட்டார். அடுத்து கடிகார காமெடி; நடிகர் ராதாரவி வந்து சொல்வார், “கிட்டதட்ட 200 வருசத்துக்கு முன்னாடி வாங்குன கடிகாரம்”. உடனே நான் சொல்வேன். “அப்படா, நான்கூட புதுசுன்னு நினைச்சேன்”. உடனே ராதாரவி, “வாய மூடுடா கழுத” என்று கோபப்படுவார்.

வடிவேலு

அந்த மாதிரி காட்சி எல்லாம் மிகவும் ரசித்து சிரித்ததால் விஜயால நடிக்க முடியாம எட்டு முறை, ஒன்பது முறை காட்சியை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சுத்தியல் காமெடியிலதான் சூர்யா ரொம்ப சிரிச்சாப்புல. அப்போ இயக்குநர் சித்திக், லேசா நாக்கை கடிச்சிக்கிட்டு நடிங்க அப்படின்னு ஐடியா கொடுத்தாரு.

இந்த காட்சிகளை ரொம்ப ரசித்து, ருசித்து, அனுபவிச்சி நடிக்க கூடிய வாய்ப்பு கிடைச்சிது.

கேள்வி: காமெடி காட்சிகளில் நடிக்கிறபோது, உங்களிடம் சொல்லப்பட்டதைவிட, அதிகமாக சேர்த்து, சிறந்த உடல் மொழியை (Body Language) பயன்படுத்தி நடிச்சீங்களா?

பதில்: உண்மைதான். இயக்குநர் சித்திக் இந்த காட்சிக்கு எப்படி செய்யலாம் அப்படீன்னு கேட்பார். கண் ஜாடையிலேயே கேமரா கலைஞரிடம் கேட்டுக்கொள்வார்.

இந்த நேசமணி கதாபாத்திராம் மலையாளத்தைவிட 200 மடங்கு நல்லா வந்திருக்கு அப்படீன்னு சொன்னாரு. ஊக்கம் தந்தாரு.

பொதுவாக, எல்லா படத்திலும், நகைச்சவை ஈடுபாடு இல்லாமல் இருந்தால் நடிக்கவே முடியாது.

வடிவேலு

அவுங்க குழம்பை, வச்சுதான் கொடுப்பாங்க. அத கடுகு, எண்ணைய் எல்லாம் சேர்த்து மணக்க வைக்கிறது எனது பொறுப்பு.

அந்த காமெடியை பற்றியே நினைச்சிகிட்டு இருப்பேன். அதோடு எனது உடல் மொழியையும் சோத்து நடிப்பேன்.

லண்டன்ல “லவ்பேட்ஸ்” திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டபோது, இளவரசர் சார்லஸின் அரண்மனை வாசலில் நடித்து கொண்டிருந்தேன்.

அப்போது, எனது உடல் மொழியை (Body Language) பார்த்து அந்த ஆங்கிலேயர்கள் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

உடல் மொழியை மக்கள் அதிகமாக ரசிக்கிறார்கள் என்று அப்போது உணர்ந்து கொண்டேன். எனவே இந்த பாடி லேங்குவேஜை சற்று நன்றாகவே காட்டி நடித்து வருகிறேன்.

#Pray_for_Nesamani டிரண்ட ஆனதுக்கு காரணமாக அமைந்த பதிவு

கேள்வி: ‘பிரெண்ட்ஸ்’ படத்துல உங்களுக்கு பிடித்த வசனம் எது?

பதில்: “நீ புடுகுறது எல்லாம் தேவயில்லாத ஆணி தான்”.

இந்த வசனம் உலக அளவுல, அரசியல் அளவில் எல்லாரும் சொல்லக்கூடிய அளவுக்கு பிரபலமடைந்து விட்டது.

ஒரு பஸூக்காக ஒரு அம்மா காத்து நின்னுகிட்டு இருக்கு. இன்னொரு அம்மா வந்து, “என்னமா 12பி வந்துட்டா” அப்படின்னு கேட்கிறாங்க.

“ம்…..வரும் ஆனா…….வராது……” அப்படீன்னு அந்த அம்மா கோவத்துவ சொல்லுது. ஏன்னா, அந்த அம்மா கிட்டதட்ட இரண்டு மணிநேரம் அந்த பஸூக்கு காத்து நின்னுருக்கு.

வடிவேலு

இப்படி எனது பல டயலாக்குகள், கோபமா பேசும் இடங்களில் நகைச்சவையாக பதில் சொல்ல பயன்படுத்தப்படுகிறது.

கேள்வி: மீம்ஸ் வெளியாக தொடங்கியதில் இருந்து, வடிவேல் இல்லாத மீம்கள் மிக குறைவு. உங்களை இப்படி எல்லாம் சித்தரிப்பது பற்றி உங்கள் உணர்வு என்ன?

பதில்: அரசியல் முதல் எல்லா துறை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் எனது படங்களை எடுத்து சரியாக பயன்படுத்தி மீம்ஸ் போடுறாங்க. இயக்குநர் கூட இப்படி எடிட் பண்ண முடியாது.

ரூம் போட்டு திங் (சிந்தனை) பண்ணுனா கூட இப்படி செய்ய முடியாது. இப்படிப்பட்ட எடிட்டரே கிடையாது. அவ்வளவு திறமையா மீம்ஸ் கட் பண்ணி போடுறாங்க.

ஆனா, எனக்கு அதுக்கும் சம்பந்தமில்ல. மீம்ஸ் வியாபாரம் நல்லா ஓடிக்கிட்டு இருக்கு.

வடிவேலு

அதுல நான் தலையிடுறது கிடையாது. சிலர் சொன்னாங்க. ஏன் சார் நீங்க ராயல்டி (வெளியிட்டு, விற்பனை செய்யும் உரிமைக்கு வழங்கப்படும் பங்கு) கேக்கலாமே! அப்படீன்னு.

மீம்ஸை பயன்படுத்தி எல்லாரும் சந்தோசப்படுறாங்க. மீம்ஸ்ல என்ன ஒரு கார்ட்டூன் பொம்மை போல ஆக்கிட்டாங்க.

விமானத்தல போனாகூட, யாருகிட்டயாவது “வணக்கம் சார்” அப்படீன்னு நான் சொன்னா, அவரு “வணக்கம் சார்… வணக்கம்… வணக்கம், அப்படீன்னு ரைமிங்கா சொல்றாங்க.

நான் காமெடியா கிண்டல் பண்ணுனத, அவங்க எனக்கே சொல்லி கிண்டல் பண்றாங்களாம்.

மக்கள் எல்லாரும் மீம்ஸால் சிரிக்கிறங்க. நானும் சிரிச்சிக்கிட்டு போயிட்டே இருக்கேன்.

கேள்வி: அதிக படங்களில் உங்களை பார்த்து ரசித்த மக்கள், இப்போது உங்களை ரொம்ப மிஸ் பண்றாங்களே, ஏன்?

’திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மீம்களால் புகழ்பெறுகிறேன்’ - நேசமணி குறித்து வடிவேலு

அதிக படங்களில் நடிக்காமல் இருப்பது உண்மைதான். ஆனா, மீம்ஸ் என்கிற ஏரியாவல நிறைஞ்சு வானளாவ போய்கிட்டிருக்கேன்.

உலகம் உள்ளங்கைக்கு வந்ததுபோல, இப்போ மீம்ஸ்-களுக்குள்ள புகுந்து போய்ட்டேன். திரை உலகத்துல வருவதவிட இப்போது இதுதான் நிறைய இருக்கு.

அதிக திரைப்படங்களை நடிக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதில் இருக்கும் சிறிய சிறிய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு நடிக்க தொடங்கி விடுவேன்.

கிணறை வெட்ட ஆரம்பித்துவிட்டால், அப்புறம் தண்ணீர் பொத பொதவென்று வந்துவிடும்.

வடிவேலு

கேள்வி: ‘இம்சை அரசன் 2’ – எப்போது எதிர்பார்க்கலாம்?

பதில்: இதைதான் நான் சொன்னது. சின்ன சின்ன பிரச்சனையை நான் தீர்த்து விட்டால், கூடிய சீக்கரமே ‘இம்சை அரசன் 2’- படத்தை எதிர்பார்க்கலாம்.

கேள்வி: கதாநாயகனாக நடித்த பிறகுதான் காமெடியனாக நீங்கள் வருவது குறைந்து விட்டது என பலரும் உணர்வது உண்மையா?

பதில்: கதாநாயகன் என்று சொன்னால் ‘புலிகேசி’ நல்ல படம். அதுக்கு மட்டும் ஒன்றும் சொல்லமாட்டேங்கிறாங்களே. ஏன்? நல்ல கதை வரும்போது கதாநாயகனாக நடிக்கலாம்.

சில நேரங்களில் எதிர்பார்த்தது இருந்திருக்காது. நல்ல கதையாக தேர்வு செய்து பண்ணுறதுக்கு வாய்ப்பு இருக்கு.

பிற கதாநாயகர்கள் கூட சேர்ந்து நடிப்பது, அப்புறம் காமடி டிராக் இருக்கு. டிராக் இப்போ கொஞ்சம் கம்மியாடிச்சி.

‘மெர்சல்’ திரைப்படம் போல கதாநாயகர்களோடு சேர்ந்து நடிக்கக்கூடிய கதைகள் சரியா வரவில்லை.

வடிவேலு

கேள்வி: தொடர்ந்து காமெடியனாக நடித்திருக்கலாம் என நினைச்சிருக்கீங்களா?

பதில்: நான் எப்போதுமே காமெடியனாகதான் இருக்கிறேன். நான் அதிரடி கதாநாயகன் (Action Hero) இல்லை.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அடுத்து நான் குணசித்திர நடிகர் என்பதிலும் சந்தேகம் இல்ல.

எல்லாம் கலந்த நிலையில் நடித்ததால்தான் மீம்ஸ் உலகில் இவ்வளவு பிரபலமடைய முடிந்துள்ளது.

கேள்வி: உங்களுக்கு பிடித்த காமெடியன் யார்?

பதில்: பிடித்த காமெடியன் என்று சொல்றத விட பிடித்த காமெடி என்று சொல்வதுதான் சிறந்தது. யார் காமெடி செய்தாலும், அதனை பார்த்தவுடன் சிரிப்பு வரணும். இது இருந்தாலே போதும்.

நல்ல நகைச்சுவை யார் பண்ணிலாலும் சிரிக்கணும்.

வடிவேலு

எனது ரசிகர்கள் பலரும் என்னிடம் கூறுவதுண்டு. உங்க காமெடிய எப்போ பாத்தாலும், சிரிச்சிக்கிட்டே இருக்கிறேன். சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணீ வரும் என்னு சொல்வாங்க.

இதற்கு நகைச்சுவையான குழந்தையை பெற்ற எனது தாய் சரோஜினி மற்றும் தந்தை நடராஜனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்களுக்கு குழந்தையாக பிறந்தது ரொம்பபெருமையா இருக்கு.

கேள்வி: சென்னைக்கு வந்ததுக்கு, மதுரையில, மதுரக்காரனா இருந்திருக்கலாம் என எண்ணியதுண்டா? .

பதில்: அதெல்லாம் கிடையாது. ஏண்டா வந்தோம் அப்படீண்ணு ஒருபோதும் நினைத்தது இல்லை. ரொம்ப சுவையான தொழில் இது. ரொம்ப ரசித்து, சுவைத்து செய்த தொழில் இது. ரொம்ப பிடித்த வேலை.

சும்மா இருக்கிற நேரத்திலேயே காமெடியா பேசி என்னுடைய சொந்தங்கள், எனது வீட்டு பிள்ளை குட்டிகளை எல்லாம் சந்தோசமாக வைச்சிருப்பேன்.

கவலை என்பது வரத்தான் செய்யும். கவலை இல்லாத மனிதன் உலகத்தில் கிடையாது.

’திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மீம்களால் புகழ்பெறுகிறேன்’ - நேசமணி குறித்து வடிவேலு

ஒரு டாக்டரிடம் ஒரு நோயாளி சென்று, மனசல நிம்மதி இல்ல. தூக்கம் வரமாட்டேங்குது. எனக்கு சிகிச்சை செய்யுங்க அப்படீண்ணு சொன்னாரு. இன்னைக்கு சனிக்கிழமை. இன்றும், ஞாயிறுக்கிழமையும் கழித்து திங்கட்கிழமை உனக்கு சிகிச்சை தரலாம் அப்படீண்னு டாக்டர் சொன்னாரு.

இல்ல, இல்ல இன்னைக்குதான் எனக்கு லீவு. நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. அதுனால சிகிச்சை செய்யுங்க என்னு அந்த நோயாளி சொன்னார்.

அப்போ டாக்டரு, சரி பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடக்குது. அதுல ஒரு கோமாளி பிரமாதமா காமெடி பண்றாறு. அத பாத்தா உங்களுக்கு மன ஆறுதல் கிடைத்த கொஞ்சம் இதமா இருக்கும். வாங்க நானே உங்கள கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாரு.

“அந்த கோமாளியே நான்தாங்க” என்னு அந்த நோயாளி சொன்னாராம். டாக்டர் ஷாக் ஆயிட்டராம். பிறகு சிகிச்சை அளித்தாரம்.

அதுபோலதான் நானும். கவலையும் உண்டு. வாழ்க்கை கடந்து செல்லும் மேகம்போல. எனவே, கவலையும் கடந்து செல்லும்.

வடிவேலு

கேள்வி: ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

பதில்: எந்நேரமும் சிரிச்சிகிட்டே சந்தோசமா இருங்க. கல்வி கற்பதை விட்டுவிட கூடாது. தாய், தகப்பனை கவனித்து கொள்ளனும். “எனது நடிப்பையும் பாருங்கள். உங்க படிப்பையும் பாருங்க”.

கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். மரம் வளர்த்து நல்ல மழையை கொண்டு வருவோம். எல்லாம் இளைஞர்கள் கையில்தான் இருக்கு. வீட்டை பாதுகாப்பதுபோல நாட்டையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More