செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சேரன் குறித்து ஒரு நெகிழ்ச்சியான உண்மை

சேரன் குறித்து ஒரு நெகிழ்ச்சியான உண்மை

5 minutes read

cheran க்கான பட முடிவு

இயக்குனர் சேரனுடன் ஃபோனில் பேச வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது –
கடந்த ஏப்ரல் மாதத்தில்.

“திருமணம் – சில திருத்தங்களுடன்.”

மார்ச்சில் ரிலீஸ். ரிசல்ட் சரியில்லாததால்
ஒரு சில நாட்களிலேயே திருமணம் தியேட்டர்களில் நிறுத்தப்பட்டு விட்டது.

மீண்டும் ரிலீஸ் செய்ய விரும்பினார் சேரன்.
ஆனால் அதற்கு தியேட்டர் கிடைக்க வேண்டுமே ; ரசிகர்களையும் வர வைக்க வேண்டும். என்ன செய்யலாம் ?

ஸ்பான்சர்கள் மூலம் டிக்கெட்டுகளை கொடுக்க ஒரு திட்டம் தீட்டி , அதற்காக உள்ளூர் சேனல்களை அணுகி ஒத்துழைப்பு கோரினார் சேரன்.

அப்படி அவர் அணுகிய ஒரு சேனல்தான் திருநெல்வேலியின் நம்பர் ஒன் சேனல் மயூரி.

மயூரி ஆறுமுக நயினார் அவர்கள் என்னுடைய நீண்ட கால நெருங்கிய நண்பர் . “ஜான் சார் , இயக்குனர் சேரன் நம்பரை கொடுக்கிறேன். நீங்களே பிசினஸ் பேசி விடுங்கள்.”

சேரனிடம் பேசினேன்: “பிளான் நல்லா இருக்கு சேரன் சார். முயற்சி பண்றேன் . அதுக்கு முன்னாடி ரெண்டு விஷயங்களுக்காக உங்களை பாராட்டிடறேன்.”

“சொல்லுங்க ஜான் சார்.”

“ஒண்ணு ஆட்டோகிராப். தமிழ் சினிமாவின் டிரெண்டுகளை எல்லாம் உடைத்துக் காட்டிய உயர்வான படம் அது.”

“ரொம்ப சந்தோசம்.”

“இன்னொண்ணு சுமதி ஸ்ரீக்கு நீங்க பண்ண ஹெல்ப்.” ( ஏற்கனவே ஃபேஸ்புக்கில் படித்திருந்தேன்.)

சேரனுக்கு நான் சொன்னது புரியவில்லை. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னவுடன் ,”ஓ , அந்தப் புள்ளையா ?”
என்று மிக மிக இயல்பான சிரிப்போடு சொன்ன சேரன் , அடுத்த நொடியே வேறு விஷயத்திற்கு கடந்துசென்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சேரன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் , சுமதி ஸ்ரீக்கு அவர் செய்த உதவி பற்றி நான் சொன்னவுடன் , ஒரு சில நிமிடங்களாவது அது பற்றி பேசி இருப்பார்கள் ; அல்லது நம்மை பேசச் சொல்லி ரசிப்பார்கள்.

ஆனால் சேரன் ..?

ஏதோ தங்கைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்த ஒரு அண்ணன் போல , எளிதாக அதை எடுத்துக் கொண்டார். இயல்பாக இதர விஷயங்களை தொடர்ந்து பேசினார்.

பந்தாவோ பாசாங்கோ எதுவும் இன்றி , பாசம் மட்டுமே இருந்தது அவர் குரலில்.

சேரன் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு , அந்த ஒரு நொடியில் பல மடங்கு உயர்ந்து போனது. நல்லது.

தங்கை சுமதி ஸ்ரீக்கு சேரன் செய்த அந்த உதவி என்னவென்று, உங்களில் யாருக்காவது தெரியாதிருந்தால்
தொடர்ந்து படியுங்கள்.

sumathi sri க்கான பட முடிவு

இனி வருவது , சுமதி ஸ்ரீயின் வார்த்தைகள்:

“இயக்குனர் சேரன் சார் அவர்களுக்கு ,

பெற்றோர்கள் இல்லாமல், நானே பலரிடமும் sponser கேட்டு படித்த காலத்தில் , வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த நாட்களில் , பசி தாங்காமல் தண்ணீர் குடித்து தண்ணீர் குடித்தே இரைப்பையை நிரப்ப முயன்று தோற்றுப் போன நாட்களில் , மூன்று மாதமாக விடுதிக்குப் பணம் கட்டாததால்,
விடுதியிலிருந்து வார்டன் என்னை வெளியேற்ற , எங்கு போவது எனத் தெரியாமல், வழியும் கண்ணீரைத் துடைக்கத் தோன்றாமல், தள்ளாடியபடி நான் நடந்து செல்கையில்,எங்கோ தூரத்தில், “ஒவ்வொரு பூக்களுமே…”பாடல் ஒலித்தது.

அன்று காலை ‘தினத்தந்தி’ நாளிதழில், ஆட்டோகிராப் படம் பார்த்து விட்டு, இந்த தொலைபேசி எண்ணில் உங்கள் கருத்துகளை, பகிரலாம் என ஒரு தொலைபேசி எண் தந்திருந்ததைப் பார்த்திருந்தேன்.மிக எளிதாக மனப்பாடம் ஆகியிருந்த அந்த எண்ணிற்கு போன் செய்தேன்.நீங்களேதான் எடுத்தீர்கள்.

பேசவே முடியாமல் தேம்பி தேம்பி அழுதபடி , ஏதாவது பண உதவி செய்ய முடியுமா சார்,எங்க போறது னு தெரியல சார் என கதறினேன். உங்க அம்மா,அப்பா என நீங்கள் முடிக்கும் முன்பே, எனக்கு அப்படி யாரும் இல்ல என விரக்தியோடும்,கோபத்தோடும் சொல்ல , மேற்கொண்டு விசாரிக்காமல்,என்னை ஆட்டோகிராப் படம் ஓடிய “சோனா மீனா” தியேட்டருக்கு போய் மேனேஜரைப் பார்க்கச் சொன்னீர்கள்.நடந்து போகாமல், ஆட்டோவில் போக அறிவுறுத்தினீர்கள். என் வார்டன் எண்ணை வாங்கிக் கொண்டீர்கள்.

சோனா மீனா தியேட்டரின் மேனேஜர்,”சார் நீங்க வருவீங்க னு சொன்னார் “என பணம் கொடுத்து விட்டு, உங்களை சாப்பிட வச்சு அனுப்ப சொன்னார் என கேண்டீன் உணவுகளை எடுத்துத் தருகிறார். என்ன மனசு சார் உங்களுக்கு … எப்படியும் அந்தப் பெண் சாப்பிட்டிருக்க மாட்டாள் என என் பசியாற வழி செய்து , என் வார்டனிடமும் , நான் விடுதிக்கு போவதற்குள்ளாக பேசினீர்கள்.

நீங்கள் மட்டும் அன்று என் கண்ணீரை,கதறலை , உதாசீனப் படுத்தி இருந்தால் பொருட் படுத்தாமல் போயிருந்தால்…இன்று நான் உயிரோடு இருந்திருப்பேனா என்றே தெரியவில்லை.

பணத்தை சீக்கிரம் திருப்பி, தந்துடுறேன் சார் என அழுத போது , அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.நல்லாயிரு . அது போதும் என்றீர்கள்.

நல்ல நிலைக்கு வந்த பிறகு , உங்களைத் தேடி வந்து நன்றி சொன்னேன். பென்னி,குழந்தைகள் என அழகான குடும்பம். சொற்பொழிவிற்காக, உலகெங்கும் பயணிக்கிற என் வளர்ச்சி.
எல்லாவற்றையும், பெருமையோடும், நன்றியோடும் உங்களிடம் சொன்ன போது , “சந்தோசம்மா …ரொம்ப ரொம்ப சந்தோசம்” என்ற உங்கள் முகத்தில்,உண்மையாகவே அவ்வளவு மகிழ்ச்சி இருந்தது.

இதை நான் திரும்ப திரும்ப பேசவும் எழுதவும் காரணம் , இதைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் , தங்களிடம் உதவி கேட்டு நீள்கிற எந்தக் கையையும் உதாசீனப் படுத்தி விடக் கூடாது என்பதாலும் , அவர்கள் செய்யும் மிகச்சிறிய உதவி, உதவி கேட்டவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பெரும் திருப்பு முனையாக இருக்கலாம் என்பதாலுமே.

தாங்கள் எனக்கு உதவி செய்ததால்தான், இன்று மற்றவர்கள் எவ்வளவுதான் காயப்படுத்தினாலும், அவர்களுக்காக இரங்குகிற , கனிந்த மனம் எனக்கு கை வரப் பெற்றிருக்கிறது.

உதவி கேட்டு நீளும் கரங்களை,யாரும் உதாசீனப் படுத்தாமல், தங்களால் முடிந்த உதவியைச் செய்தால், அவர்கள் அந்த உதவியை இன்னும் சிலருக்குச் செய்வார்கள் என்பதாலேயே, ஏற்கனவே எழுதியதுதானே, பேசியது தானே என நினைக்காமல் , மீண்டும் ஒரு முறை இதை பதிவு செய்கிறேன்.

என் வாழ்வின் இறுதி நொடி வரைக்குமான நன்றியும் நிறைய அன்பும் சேரன் சார்.”

Sumathi Sri

தொடர்புடைய படம்

சுமதி ஸ்ரீயின் நெகிழ வைக்கும் இந்த கடிதத்திற்கு சேரன் கொடுத்த பதில் :

“சுமதிக்கு சேரன் அன்புடன் எழுதுவது.
இதோடு எத்தனையோ முறை இந்த நிகழ்வை நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள்.
பெருமை எனக்கல்ல.

ஒரு இரவில் ஒரு இளம்பெண் எங்கே போவது எனத்தெரியாமல் நிற்கும்போது இரண்டு தங்கைகளோடு பிறந்த அண்ணனாக தவித்த நான் உடனே ஒரு தங்கைக்கு செய்த சிறு உதவிதான். உன்னை இவ்வளவு நாட்கள் நல்ல மனிதாபிமானத்துடன் அந்த உதவி நடக்க வைத்திருக்கிறது என்ற கர்வம் தவிர வேறு எந்த சந்தோசமும் இல்லை தங்கையே..!
காலத்தில் செய்யும் உதவி கூட நல்ல விதைபோலத்தான். அது நிறைய கருணைமிக்க மனிதர்களை உருவாக்கும்.
அந்த வகையில் இன்றும் சகோதரனாக உன்னை பார்த்து சந்தோசம் கொள்கிறேன்.
நீ எழுதிய வரிகளை படிக்க படிக்க என் கண்களில் கண்ணீர் வழிவதை நிறுத்தமுடியவில்லை.

அன்புடன்
சேரன்.”

நல்லது.பிக்பாஸ் முடித்து வந்தவுடன் சேரனை இன்னும் ஒருமுறை பாராட்ட வேண்டும்.

வாழ்த்துகள் சேரன் அவர்களே

John Durai Asir Chelliah

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More