“நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல கணவன் – மனைவியாகவும் இருப்பாங்க அப்படிங்கிறதுக்கு நாங்கதான் உதாரணம்…”
யங் செலிபிரிட்டி தம்பதிகளில் கீர்த்தியும் சாந்தனுவும் செம எனர்ஜெட்டிக் அண்டு பாசிட்டிவ். நேற்று (21-8-19) தங்களுடைய 4-வது திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
`உங்களுடைய நல்ல தோழியைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அந்த உறவில் வருகிற சின்னச் சின்ன செல்லச் சண்டைகள், அதைச் சரி செய்ய நீங்கள் செய்கிற சமாதானங்கள் எல்லாம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள்… நம்முடைய நான்காவது திருமண நாளை சேர்ந்து கொண்டாடுவோம்’ என்று தன் தோழியும் காதல் மனைவியுமான கீர்த்திக்கு தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்துச் சொல்லியிருந்தார் சாந்தனு. நாமும் கீர்த்தி – சாந்தனு தம்பதியருக்கு வாழ்த்துகள் சொன்னோம்.
“யெஸ், நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல கணவன் – மனைவியாகவும் இருப்பாங்க அப்படிங்கிறதுக்கு நாங்கதான் உதாரணம்” என்ற கீர்த்தி, திருமண நாள் சந்தோஷத்தை சிரிப்பில் வெளிப்படுத்த, சாந்தனுவிடம் பேசினோம். “சின்ன வயசுல இருந்தே நாங்க ஃப்ரெண்ட்ஸ். ஸோ, ஒருத்தரைப் பத்தி ஒருத்தருக்கு கம்ப்ளீட்டா தெரியும். அதே மாதிரிதான் எனக்கும். அதனால, நாங்க ரெண்டு பேருமே எங்க கல்யாண வாழ்க்கையில ரொம்ப ஃப்ரீயா இருக்கோம். ஓப்பன் மைண்டா எதையும் அணுகுறோம். என்னைப் பொறுத்தவரைக்கும் இதை நான் ஒரு ஆசீர்வாதம்னே சொல்லுவேன்.
இன்னிக்கு இருக்கிற ஸ்டிரெஸ்ஸான உலகத்துல நம்மளோட உணர்வுகளை முழுசா வெளிப்படுத்தறதுக்குச் சரியான ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கிறதில்லை. அதனால, அதை அப்படியே மனசுக்குள்ள வைச்சு வைச்சு உடம்பையும் மனசையும் கெடுத்துக்கிறாங்க. சந்தோஷமோ, பிரச்னையோ நாம எல்லோருமே முதல்ல அதை ஃப்ரெண்ட்ஸ்கிட்டேதான் ஷேர் பண்ணிப்போம். அப்படி என்னோட எல்லா நல்லது, கெட்டதையும் ஷேர் பண்ணிக்கிட்ட தோழியே எனக்கு மனைவியாகவும் கிடைச்சிட்டாங்க. நான், அவங்ககிட்டே எந்த விஷயத்தை ஷேர் பண்ணிக்கிட்டாலும், முதல்ல ஃப்ரெண்ட்லியாத்தான் அணுகுவாங்க கீர்த்தி. நானும் அப்படித்தான். எங்க வாழ்க்கையோட பாசிட்டிவான விஷயம் இது.
நெருக்கமான தோழியை மேரேஜ் பண்ணிக்கிட்டா வர்ற ஒரேயொரு நெகட்டிவ் விஷயம், நாம சின்ன வயசுல இருந்து என்னவெல்லாம் சேட்டை பண்ணோம்; எப்படியெல்லாம் திருட்டுத்தனம் பண்ணுவோம்கிறது அவங்களுக்கு நல்லா தெரியும். அப்புறம் சுத்தமா பொய்யே சொல்ல முடியாது. ஏன்னா, பொய் சொல்லுறப்போ என் முகம் எப்படியிருக்கும்னு அவங்களுக்கு தெரியுமே” என்று சிரிக்கிறார் சாந்தனு.