விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என்பது குறித்த பேச்சுகள், விவாதங்கள் அவ்வப்போது நடைபெறும். மேலும், அவரது நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யின் பேச்சை வைத்து ஒரு அரசியல் சர்ச்சையும் உருவாக்கப்படும்.
சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சுபஸ்ரீ மரணம் குறித்த விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த இசை வெளியீட்டு விழா நடத்த எப்படி அனுமதியளித்தீர்கள் என்று கல்லூரி நிர்வாகத்துக்கு உயர் கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் . தனது அடுத்த படம் தொடர்பான பேட்டியில், “விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்” என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்றைக்காவது மேடையேறி நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று விஜய் சொல்லியிருக்கிறாரா? ஏதாவது ஒரு மேடையிலாவது? அவர் பேசிய பேச்சுகளை வைத்து கற்பனை செய்து கொண்டால் நான் என்ன செய்வது?
இயக்குநர்களிடம் கேளுங்கள். விஜய் மாதிரி நேரத்துக்கு வருகிற நடிகர் யாருமே இல்லை என்பார்கள். அவர் ஒரு நல்ல நடிகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மீது ஏன் இப்படி தேவையில்லாமல் கல்லடித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. தன் அபிமான நடிகரின் ஒரு படம் ஓடிவிட்டால் போதும், என் வருங்காலத் தமிழகமே என்று போஸ்டர் அடிக்கிறார்கள். விஜய் முதல்வராக வர வேண்டும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வந்து சேவை செய்தால் உடனிருந்து தாங்களும் அரசியல் சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.
விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற கேள்வியை என்னிடம் கேட்டால் எப்படி பதில் சொல்வது? ஒரு சின்ன குழந்தைக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்று பார்த்துக் கொடுக்கிறோம். இன்றைக்கு விஜய்யின் வயது 45. அவர் மனதில் இருப்பதை எப்படி என்னால் கணிக்க முடியும் என நினைக்கிறீர்கள். பிள்ளை என்ன நினைக்கிறான் என்பதை எந்தத் தகப்பனாலும் கணிக்க முடியாது” என்று பதில் அளித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.