செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விக்ரமுக்கு ‘சேது’, துருவுக்கு ’ஆதித்ய வர்மா’ – ஒரு செய்தியாளரின் நினைவலைகள்

விக்ரமுக்கு ‘சேது’, துருவுக்கு ’ஆதித்ய வர்மா’ – ஒரு செய்தியாளரின் நினைவலைகள்

5 minutes read

சேது

சேது, விக்ரம், பாலா எப்படி வென்றார்கள்? – 20 ஆண்டுகள் நிறைவு குறித்த நினைவலைகள்

ஆக்ரோஷமான ஓர் இளைஞன் தனது உணர்வுகளை, பாசத்தை, கோபத்தை, ஏன் காதலை கூட வெளிப்படுத்துவதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கும்.

இப்படியெல்லாம் கூட ஒருவனால் நடந்துகொள்ள முடியுமா என்று கேட்கும் அளவுக்கு அவனின் செய்கைகள் இருக்கும். அப்நார்மலிட்டி என்று கூறப்படும் இயல்புக்கு மீறிய மனநிலை, நடத்தை கொண்ட ஓர் இளைஞன் கதாபாத்திரத்தில் அண்மையில் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் அறிமுகமானார் துருவ் விக்ரம்.

தெலுங்கில் மிகப் பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்தான் ஆதித்ய வர்மா.

தான் விரும்பியதை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொண்டவனாக, அன்பை, காதலை வெளிப்படுத்தும் விதத்தில்கூட வன்முறை கலந்து இருக்கும் இளைஞனாகத் தனது முதல் திரைப்படத்திலேயே பிரகாசித்திருப்பார் துருவ் விக்ரம்.

#AdithyaVarma

காலத்தை சற்றே பின்னோக்கி பார்த்தால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படத்தில், இவரது தந்தை விக்ரம் ஏற்ற கதாபாத்திரமும் இத்தகைய அம்சங்களைக் கொண்டதுதான்.

அந்த திரைப்படம் சேது. வெளிவந்த நாள் டிசம்பர் 10, 1999.

சேது ரிலீசான முதல் வாரத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கவில்லை. ஆனால், படம் பார்த்தவர்கள் வாய்மொழியாகத் தந்த சான்றிதழ்கள் மூலம் இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

விக்ரம் என்ற அற்புதமான நடிகரும், இதுவரை பெரிதும் பேசப்படாத மனிதர்களை, கதைகளைப் படமாக்கும் பாலா என்ற இயக்குநரும் தமிழ் திரையுலகத்திற்குக் கிடைத்தார்கள்.

நீண்ட காலமாக திரையுலகில் தன்னை நிரூபிக்க கடினமாக போராடிக் கொண்டிருந்த விக்ரமுக்கு தமிழ் சினிமாவுலகில் ஒரு தனி அடையாளத்தைக் பெற்றுத்தந்த திரைப்படம் சேது.

அதேபோல் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா இயக்கிய முதல் திரைப்படமும் சேது தான்.

அதிரடி காதல் திரைப்படமான சேதுவில் விக்ரம், அபிதா, சிவகுமார் மற்றும் பலர் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

ஜாலியாக தோன்றும் விக்ரம், அவரின் நண்பர்கள் குழாம், மிகவும் பயந்த பெண்ணாக தோன்றும் அபிதா என வேகமாகவும், கலகலப்பாகவும் படத்தின் முதல் பாதி நகர, இரண்டாவது பாதி மற்றும் கிளைமேக்சில் ரசிகர்களுக்கு கண்ணீர் வரும் அளவு சோகம் நிறைந்திருக்கும்.

சேது

கதாநாயகி அபிதா தனது நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு முன்பாக இறந்துவிடுகிறார். கதாநாயகன் விக்ரம் மன நோயாளியாக மாறிவிடுவார்.

ஆனால் படத்தில் ஒரு காட்சி மிகவும் வித்தியாசமாகவும், அற்புதமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு பெண்ணிடம் இப்படிக்கூட காதலை வெளிப்படுத்த முடியுமா என்று வியக்கும் வண்ணம் விக்ரம் தன் காதலை அபிதாவிடம் வெளிப்படுத்துவார்.

கதாநாயகியை ஒரு பாழடைந்த பங்களாவுக்கு தூக்கிவந்து தன் காதலை அவரிடம் விக்ரம் கூறும் விதம் அலாதியானது.

“ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டி.என்னைக்கு உன்னைப் பார்த்து இந்த எழவெடுத்த லவ்வ நான் பண்ண ஆரம்பிச்சனோ அன்னைக்குப் பிடிச்சது சனியன்…” என்று ஆரம்பிப்பார் விக்ரம்.

மிகவும் முரட்டுத்தனமாக காதலை வெளிப்படுத்திய காட்சிகள் என்று தமிழ் திரைப்படங்களில் வரிசைப்படுத்தினால், அதில் நிச்சயம் இந்த காட்சியும் இடம்பெறும். ஆனால் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இந்த காட்சி அமைந்தது இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூறப்படுகிறது.

அதேபோல் ”சீயான்” என்ற அடைமொழியும் இந்த படத்திற்கு பிறகு விக்ரமின் அடையாளமாக மாறிவிட்டது.

கதையாக்கம், நடிப்பு, இயக்கம் என சேது திரைப்படத்தை பலரும் பாராட்டினாலும், இந்த படத்தின் மீது சில விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.

இயக்குநர் பாலா

பொதுவாக சாதி மறுப்புக் காதல், சாதி எதிர்ப்புத் திருமணம் ஆகியவற்றைக் கதையின் உள்ளடக்கமாகக் கொண்ட பல திரைப்படங்களில் ஏன் மசாலா திரைப்படங்கள்கூட, காதலில் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையைத் தரும்.

ஆனால், அந்த நிலையிலிருந்து மாறி சாதி மறுப்புக் காதல் இப்படியும் முடியலாம் என்ற விபரீத விளைவை படமாக்கியிருக்கிறது என்ற விமர்சனம் சேது திரைப்படம் மீது வைக்கப்பட்டது.

சேது திரைப்படம் தமிழ் திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் அந்த திரைப்படத்தின் விமர்சனங்கள் குறித்து திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ‘கருந்தேள்’ ராஜேஷ் பிபிசி தமிழிடம் பேசினார்.

”சாதி மறுப்புக் காதலுக்கு எதிரான திரைப்படமாக சேதுவுக்கு ஒரு முகம் உள்ளது என்று சிலர் விமர்சனம் வைப்பதுண்டு. ஆனால், அந்த படம் வெளிவந்த காலகட்டத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

'கருந்தேள்' ராஜேஷ்

”அந்த காலகட்டத்தில் பாரதி கண்ணம்மா போன்ற திரைப்படங்கள் வெளிவந்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதில் பேசப்படும் சில கருத்துக்கள் கூட சமூகவிரோத கருத்துக்கள் போல் தோன்றும். அந்த காலத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் கருத்துக்களை தற்போதைய காலத்தில் பொருத்திப் பார்க்க முடியாது” என்று ராஜேஷ் நினைவுகூர்ந்தார்.

”மேலும் இது தன் நண்பர் ஒருவருக்கு நடந்த கதை என்றும் இயக்குநர் பாலா கூறியுள்ளார். அதனால் அது உண்மை கதையாகவும் இருக்கலாம். மேலும் ஒரு சினிமாவை, சினிமாவாக பார்க்க வேண்டும்”

”ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மிகவும் முரட்டுத்தனமாக இருந்தால் தவறில்லை என்ற ரீதியில் அந்த காலத்தில் சில திரைப்படங்கள் வெளிவந்தன. அது போன்ற படங்கள் இப்போது பெரும்பாலும் வெளிவருவதில்லை. தற்போது வெளிவந்த ஆதித்ய வர்மா மற்றும் அதன் மூலம் அர்ஜுன் ரெட்டி இந்த கருத்தைக் கொண்டே வெளிவந்தது” என்று ராஜேஷ் மேலும் கூறினார்.

”ஆனால், பாலா மற்றும் விக்ரமுக்கு மிக அற்புதமான படமாகவும், ஆரம்பமாகவும் அமைந்தது சேது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இளையராஜாவின் இசை இந்த படத்தில் மிகவும் அருமையாக இருந்ததும் உண்மை. இந்த படத்தின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.” என்றார்.

சேது திரைப்படம் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்த திரைப்படம் தமிழ் திரைத்துறையில் மறுக்க முடியாத தாக்கத்தையும், விக்ரம், பாலா ஆகிய இரு கலைஞர்களின் 20 ஆண்டுகளாக மேலான திரைப்பயணத்தில் அற்புதமான தொடக்கத்தையும் உண்டாக்கியது என்றும் கருந்தேள் ராஜேஷ் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More