நடிகை மீராமிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாக சாடி உள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கத்தை கங்கனா கண்டித்து பேசி இருந்தார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. வாரிசு நடிகைகள் கங்கனாவை கடுமையாக சாடினர். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரனாவத் தகுதி இல்லாதவர் என மீரா மிதுன் கூறியுள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: “சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் கங்கனா ரனாவத் தேவையின்றி கருத்து தெரிவித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. தமிழ் திரை உலகில் இருக்கும் அரசியலால் உங்களை ஜெயலலிதா வேடத்துக்கு தேர்வு செய்து தவறு இழைத்துள்ளனர். சகாப்தமாக வாழ்ந்த துணிச்சல் மிக்க ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நீங்கள் கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவர்” என்று மீராமிதுன் கூறியுள்ளார்.