விஜய்யிடம் பேசுவதுமில்லை, அவரது படங்களை பார்ப்பதுமில்லை என நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நண்பர்களால் ‘’மாவீரன்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர், நெப்போலியன். நடிகராகவும் தொழில் அதிபராகவும் இவர் உள்ளார். மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார். அங்கே சென்ற பிறகும் அவர் திரையுலகை மறக்கவில்லை. ‘டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன், ஜூம் செயலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நீங்கள் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். போக்கிரி படத்தில் விஜய்யுடன் நடித்த நீங்கள், இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நெப்போலியன் “பிரபுதேவாவுக்காக தான் போக்கிரி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த படத்தின் போது எனக்கும் விஜய்க்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்திருந்தது. படம் வெற்றியடைந்தது.
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த கதாபாத்திரத்தில் தான் விஜய் நடித்தார். நன்றாக நடித்தார். படம் நன்றாக வசூலித்தது. கடின உழைப்பைக் கொடுக்கிறார். அதனால் தானே வளர்ந்து வருகிறார்” என்றார்.