சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த திரைப்படத்தின் ஒருசில கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் ’அண்ணாத்த’ திரைப்படம் டிராப் என்றும் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை ரஜினிகாந்த் தயாரிப்பாளரிடம் திருப்பி அளித்து விட்டதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் திறந்தாலும் எந்த அளவுக்கு பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று தெரியாததால் அனைத்து பெரிய நடிகர்களும் தங்களுடைய சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் ’அண்ணாத்த’ படத்திற்கான சம்பளத்தை குறைக்க தயாரிப்பு தரப்பு ரஜினிகாந்துடன் வேண்டுகோள் விடுத்ததாகவும் ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத ரஜினி படத்திலிருந்து விலகியதோடு, வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் வதந்திகள் பரவி வருகிறது
ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் ’அண்ணாத்த’ திரைப்படம் நிச்சயம் கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்ததும் தொடங்கும் என்றும் இந்த படத்தில் ரஜினி காட்சிகளின் 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் 2021 ஏப்ரலில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ’அண்ணாத்த’ திரைப்படம் குறித்து இருவேறு கருத்துக்கள் கோலிவுட்டில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் ’அண்ணாத்த’ படம் குறித்த கதை கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ரஜினிக்கு குஷ்பு, மீனா என இரண்டு முறைப்பெண்கள் என்றும், இருவரும் ரஜினியை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஒருவரை திருமணம் செய்தால் இன்னொருவர் மனம் நோகும் என்பதால் இருவரையும் திருமணம் செய்யாமல் வேறொரு பெண்ணை ரஜினி திருமணம் செய்வதாகவும், அந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ் என்பதுதான் முதல் பாதி கதையாம். இரண்டாம் பாதியில் குஷ்பு, மீனா இருவரும் கீர்த்தி சுரேஷை மருமகளாக்க போட்டி போடுவதாகவும் இந்த போட்டியில் யார் வென்றார்கள் என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் என்றும் கூறப்படுகிறது.