நடிகை வனிதா பீட்டர்பால் திருமணம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் இந்தத் திருமணத்தை கடுமையாக விமர்சனம் செய்த நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் சூரியாதேவி என்ற பெண் ஆகியோர் மீது வனிதா, சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார் என்பதும் இந்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. அதேபோல் வனிதா மீது சூர்யாதேவி புகார் அளித்திருந்தார் என்பதும், இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென வனிதா மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் புதியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கொரோனா காலத்தில் அனுமதி இன்றி வனிதா, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியதாக அந்த குடியிருப்பை சேர்ந்த சங்க பொதுச் செயலாளர் நிஷா கோத்தாரி என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தான் வனிதா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
வனிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இங்கு நடைபெற்றதாகவும், ஆனால் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பொலிசில் புகார் அளித்துள்ளார் என்பதும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.